விவேக்: சிரிப்பின் சிறப்பு முகம்
நம் பதின்பருவத்தில் (Teen age) நம்மை ஈர்க்கும் பிரபலங்களுடன் ஒரு மறைமுக தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். நமக்கே தெரியாமல் அவர்களுடன் பயணிப்போம். அப்படி என்னுடன் இணைந்திருந்த பிரபலங்களில் முக்கியமானவர் “சின்ன கலைவாணர்” விவேக்.
கவுண்டமணி-செந்தில் நகைச்சுவையில் மிளிர்ந்த காலம் முடிந்தபின், விவேக் கோலோச்ச தொடங்கினார். துள்ளலும் மலர்ச்சியான முகமும் அவர் டிரேட்மார்க். அவர் நகைச்சுவை எல்லா தரப்பினரையும் கவர்ந்தாலும், 90களின் நடுத்தரவர்க்க இளைஞர்களை அவர் அதிகமாக ஈர்த்தார் என்றால் மிகையல்ல. சமூக சிந்தனை கலந்த அவர் நகைச்சுவை பல இளைஞர்களின் சிந்தனைகளிலும் செயல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதை மறுப்பதற்கில்லை.
“பெரிய கண்ணாடி, உருட்டும் விழிகள், வெள்ளந்தி சிரிப்பு” என்று “புதுப்புது அர்த்தங்கள்” போன்ற தனது ஆரம்பகால படங்களில் இன்னிங்க்ஸை துவங்கிய விவேக், “நகைச்சுவை சச்சினாக” அதிரடி காட்டிய படங்கள் – “ரன்”, “மின்னலே”, “டும் டும் டும்”, “தூள்”, “சாமி”, “பெண்ணின் மனதை தொட்டு”, “அந்நியன்”, “படிக்காதவன்” (தனுஷ்), “உத்தம புத்திரன்” (தனுஷ்), “வேலையில்லா பட்டதாரி”, “சிங்கம்”.
விவேக்கின் பல நகைச்சுவை காட்சிகள் பசுமரத்தாணி போல் பதிந்தவை. சில சாம்பிள்கள் இங்கே –
- “காக்கா பிரியாணி” (ரன்)
- “உள்ளுக்குள்ள 750 ஸ்பேர் பார்ட்ஸ் இருக்குடா, அதுல ஓடாத வண்டியாடா இந்த எலுமிச்சம்பழத்துல ஓட போகுது” (மின்னலே)
- “மீசை வச்சிருக்காருங்கற ஒரே காரணத்துக்காக பாரதியாரை வீரப்பனா மாத்திட்டீங்களேடா” (சாமி)
- “சந்திரபாபு நாயுடு திருப்பதியில் லட்டுக்கு பதிலா ஜிலேபியை உட்டார்ன்னு உட்டியேடா ஒரு பீலா” (தூள்)
- “யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற, உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா?” (லவ்லி)
“பாளையத்து அம்மன்” என்ற படத்தில் “பராசக்தி” சிவாஜியைப் போல் ஒரு நீதிமன்ற காட்சியில் சமூக அவலங்களை மூச்சுவிடாமல் விவேக் பேசியதை எப்போது பார்த்தாலும் சிரிப்போடு சிந்தனையும் கிளர்ந்தெழும் (பார்க்க – https://www.youtube.com/watch?v=SAzvzB88TfY).
“பாய்ஸ்”, “சிவாஜி” படங்களில் நகைச்சுவை மட்டுமின்றி குணச்சித்திர நடிப்பையும் விவேக் நன்றாக வெளிப்படுத்தி இருப்பார். தன் சமகால போட்டியாளரான வடிவேலுவுடன் நடித்த படங்களில் “மனதை திருடிவிட்டாய்” தனிச்சிறப்புதான்.
சமீபத்தில் வெளிவந்த “வெள்ளைப் பூக்கள்” படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக + மகனோடு உணர்வு போராட்டம் நடத்தும் தந்தையாக அசத்தியிருப்பார். அப்படி இன்னும் சில படங்களை அவர் தருவதற்கு முன் காலம் அவரை பறித்துக்கொண்டது மிகுந்த வேதனைக்குரியது.
ஒரு சமயம் (90களின் இறுதியா அல்லது 2000த்தின் ஆரம்ப வருடங்களா என நினைவில்லை) ஒரு சாதி சார்ந்த நிகழ்ச்சியில் விவேக் பங்கு கொண்டு “இந்த சமூகத்து இளைஞர்கள் அறிவால் உயர்வதுதான் உண்மையான வீரம்” என்கிற ரீதியில் பேசினார். அந்த நிகழ்ச்சி பற்றி படித்தபோது, எனக்கு “என்ன இவரும் சாதிய வட்டத்தில் அடைபட்டுவிடுவாரோ” என அவர் மீது கோபம் வந்தது உண்மை. நாட்கள் போகப்போக அவரது அந்த கருத்து கல்வி சார்ந்தது, சாதி சார்ந்தது அல்ல என தோன்றியது.
நடிப்பின் மூலம் சமூக பங்களிப்பு என்ற வட்டத்தை தாண்டி, விவேக் தன்னார்வத்துடன் செய்த பங்களிப்புகள் மிகவும் போற்றத்தக்கவை, பின்பற்றத்தக்கவை. அப்துல் கலாமை நினைவுகூறும்போது விவேக்கும் நினைவில் வருவதை தவிர்க்கமுடியாத அளவிற்கு “கலாமின் சீடர்” என்றே வாழ்ந்தார் விவேக். அவரது “Green Kalam” முன்னெடுப்பும், அதன் வழியே நட்ட 33+ லட்சம் மரக்கன்றுகளும் இந்த பூமிக்கான ஆக்சிஜனில் ஒரு பகுதி என்றே சொல்லலாம். இவை போக, பல விழிப்புணர்வு வீடியோக்களில் பங்களித்திருக்கிறார். அவர் ட்விட்டர் பக்கத்தில் விவேகானந்தரின் எழுச்சியூட்டும் பொன்மொழிகள் இறைந்து கிடக்கின்றன.
இன்று அவர் மரணத்தை வைத்து கருத்தாளர்கள் அரசியல் செய்கிறார்கள். “பகுத்தறிவு பாசறை”யிலிருந்து வந்தோம் என மார்தட்டும் கூட்டம் விவேக்கை தங்களில் ஒருவராக காட்ட முனைகிறது. இன்னொரு பக்கம், தங்களை இந்துமத காவலர்களாக காட்டிக்கொள்ளும் கூட்டம் விவேக் தன் படங்களில் இந்துமதத்திற்கு எதிராக பேசினார் என்று ஒரு வன்மமான கருத்தை விதைக்க வேலை செய்கிறது. உண்மையில் விவேக் தன் நகைச்சுவை மூலம் மூடநம்பிக்கைகளை, கடவுள் நம்பிக்கையை வைத்து வணிகமயமாக்கும் செயல்களை மட்டுமே எதிர்த்தார்; விழிப்புணர்வை விதைத்தார். ஆனால் அவர் இறை நம்பிக்கைக்கோ இந்து மதத்திற்கோ எதிரானவர் இல்லை.
குறைந்தது இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருக்கவேண்டிய மனிதர் விவேக். அவருடைய எனர்ஜிக்கு 59 வயது சாகும் வயதே அல்ல. சிரிப்பு தரும் சிறப்பான முகங்களில் ஒன்று சீக்கிரமாக நிரந்தர ஓய்வுக்கு சென்றது நிலையற்ற வாழ்வை கண் முன்னே நிறுத்தும் மற்றுமொரு நினைவூட்டல்.
“தர்பார்” பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி குறித்து “அவர் சிவனோட சிட்டிங்கும் போடுவார், எமனோட கட்டிங்கும் போடுவார்” என்று விவேக் பேசினார். விவேக் சார் – நீங்கள் எமனோடு ஒரு பெட்டிங் போட்டு எஸ்கேப் ஆகியிருக்கக்கூடாதா என மனம் ஏங்குகிறது.
இன்று விவேக் அவர்களின் மரண செய்தி கேட்டதிலிருந்து அவரை பற்றிய எண்ணங்களே மனதில் ஓடிக்கொண்டிருந்தன. அவர் நடித்த சில படங்களின் காட்சிகளை பார்த்தேன். அப்போது “விவேக் இன்று காலமாகிவிட்டார்” என்ற சிந்தை மறந்து, என்னையறியாமலே அந்த காட்சிகளை ரசித்து சிரித்துக்கொண்டிருந்தேன். இதுதான் நிதர்சனம் – விடைபெற்றது அவர் உடல் மட்டுமே. அவரது (நவரச நகைச்சுவை) மொழி இன்னும் பல்லாண்டுகள் வாழும். சிரிக்கும் தன்மையை தமிழர்கள் இழக்காதவரை, இங்கே பலரது புன்னகைகளிலும் சிரிப்புகளிலும் விவேக் ஒளிந்திருப்பார், ஒளிர்ந்திருப்பார்.