அண்ணாத்த #2: பாட்ஷா திரும்பி வந்துட்டேன்னு சொல்லு
பொதுவாக, ரஜினியின் சண்டைக் காட்சிகளில் ஸ்டைலுக்கு முக்கியத்துவம் உண்டு. சில சண்டைக் காட்சிகளில் காமெடியும் லேசாக கலந்து விடுவார்கள். இவையிரண்டும் இல்லாமல், கண்களில் தீப்பொறி பறக்க ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் பலவற்றை அவரது 80களின் படங்களில் பார்க்கலாம். 90களில் உடனடியாக என் நினைவில் வரும் அத்தகைய காட்சிகள் – தளபதி கிளைமாக்ஸில் “என் தேவாவைக் கொன்னுட்டியேடா” என சொல்லி சொல்லி அடிப்பது, பாட்ஷாவில் ஆனந்தராஜ் கோஷ்டியை அடித்து துவைப்பது.
“சிவாஜி”, “கபாலி” படங்களில் சண்டைக் காட்சிகள் நன்றாக இருந்தாலும், மேலே சொன்ன ஆக்ரோஷ ரஜினியை பார்க்கும் ஆவல் அதிகம் உண்டு. “காலா”, “பேட்ட”, “தர்பார்” படங்களில் அவர் வயதை மனதில் வைத்தோ என்னவோ சண்டைக் காட்சிகளில் கொஞ்சம் வீரியத்தை குறைத்துவிட்டார்கள் என்பது என் பார்வை. உதாரணமாக, “காலா”வில் வரும் மழை fight scene. நன்றாகத்தான் இருக்கும், ஆனாலும் அதிகப்படியான slow motion effect தந்துவிட்டதாகத் தோன்றும்.
ஒருவேளை இனி அந்த பழைய ஆக்ரோஷ ரஜினியை கண்களில் காட்டமாட்டார்கள் போல என கிட்டத்தட்ட முடிவே செய்துவிட்ட சூழலில், அந்த ரஜினியை “அண்ணாத்த”வில் மீண்டும் கொண்டுவந்து நெஞ்சம் நிறையவைத்துவிட்டார் டைரக்டர் சிவா.
அந்த bar fightல் ரஜினியின் கண்களில் கொழுந்துவிட்டு எரியும் கோபம் இருக்கிறதே… விவரிக்க வார்த்தைகள் இல்லை. “காலா”, “பேட்ட” படங்களில் “சார் நீங்க கையை ஓங்கினால் போதும், மீதியை நாங்க பார்த்துக்கறோம்” என சொல்லியிருப்பார்கள் போல; ஆனால், “அண்ணாத்த” படத்தில் “இதுதான் சார் situation. உங்க இஷ்டத்துக்கு புகுந்து விளையாடுங்க” என சொல்லியிருக்கவேண்டும் என்பது என் அனுமானம். “கரையும் கிடையாது, தடையும் கிடையாது” என fight sceneல் ரஜினி துவம்சம் செய்துவிட்டார். அதிலும் அந்த வில்லனின் இடது கையை மீண்டும் மீண்டும் ஆவேசமாக அடிப்பதைப் பார்க்கும்போது “பாட்ஷா”வே கொஞ்சம் ஓரமாக நின்று கைதட்டித்தான் ஆகவேண்டும்.
அது போல, வில்லன் அடியாட்கள் கும்பலை அடித்து “தங்க மீனாட்சி எங்கே?” என கேட்டு பதில் வாங்கும் fightம் சரி, “மனோகர் பாரிக்கரை” சுளுக்கெடுக்கும் காட்சியிலும் சரி, ஜெகபதி பாபுவை முடித்துவிடும் fightம் சரி – “வெறித்தனம்” என சொன்னால் அது understatementதான். இந்த காட்சிகளில் எனக்கு ரஜினிக்கு 70+ வயது என்பதோ, அவர் சும்மா கை ஓங்குகிறார் என்கிற மாதிரியான உணர்வோ இம்மியளவு கூட மனதில் தோன்றவில்லை.
வில்லன் அடியாள் ஒருத்தனை மாடியில் இருந்து தலைகீழாக கட்டி தொங்கவிடும் காட்சியில், ரஜினியின் முகபாவம் (அதிலும் left side angleல் இருந்து காட்டும்பொழுது) 80களின் ஏதோ ஒரு படத்தின் fight sceneல் (படம் நினைவுக்கு வரவில்லை, நினைவுக்கு வரும்போது சொல்கிறேன்) பார்த்த முகபாவத்தின் அச்சு அசல்.
மொத்தத்தில், 2021 காலத்திற்கேற்ப lookல் அண்ணாத்த ரஜினி fresh ஆக இருந்தாலும், கொல்கத்தா சண்டைக் காட்சிகளில் “சிறுத்தை ஆகிறேன், ஜெயிக்க போகிறேன்” என்ற வகையிலான classic ரஜினிதான். வெகு ரௌத்திரமாக “காளையன்” ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார். “அண்ணாத்த”வின் கொல்கத்தா சண்டைக் காட்சிகளை மட்டுமே ஒரு வீடியோ ஆல்பமாக சேகரித்து வைத்து எத்தனை முறை வேண்டுமானாலும் சலிக்காமல் பார்க்கலாம்.