அடையார் காந்தி நகர் – பெரும்பாலான சாலைகளில் மரங்களும், பெரு வீடுகளுமாய் பெருமையுடன் இருக்கும் ஒரு சென்னை பகுதி. இந்தப் பகுதியும் சற்றே வலிய மழை வந்தால், அதனைப் பார்த்து “உன் கூந்தல் நெளிவில், எழில் கோல சரிவில் என் கர்வம் அழிந்ததடி” என வைரமுத்துவின் வரிகளை உரக்கப் பாடும். அங்கு ஒரு மழை நாளில், பாதசாரிகளுக்கான நடை பாதைகளும் தீவுகளாகி விட்ட நிலையில் சிக்கிக் கொண்டேன். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் டைடல் பார்க் அருகிலுள்ள ஓர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்ற நிலை. சாதரணமாக, MRTS ரயில் பிடித்து இந்திரா நகரில் இறங்கி, நடந்து சென்றால் 20 நிமிடங்களில் சென்று விடலாம். அன்று ஆட்டோ பிடிக்க முடிவு செய்தேன். முதல் ஆட்டோகாரர் ” எங்கே போகணும்?” என்று கேட்டு முடிப்பதற்குள், அவர் ஆட்டோ நின்று விட்டது. அடுத்து அந்த வழியாக சென்ற ஆட்டோகாரர் நிற்கவேயில்லை.
அடுத்து வந்தவர் நின்றார், கேட்டார். சொன்னேன் – “மத்திய கைலாஷ் – டைடல் பார்க் ரோடு வழியா போக வேண்டாம். ஐ ஐ டி க்கு பின்பக்கம், ஸ்ரீராம் நகர் வழியா போகணும்”. அவர் – “அந்த பக்கம் தண்ணி நிக்குமே”; நான் – “இந்த பக்கம் டிராபிக் இருக்குமே”.
“சரி, எவ்வளவு குடுப்பீங்க?”
“நீங்களே சொல்லுங்க”
“150”
அந்த தூரத்திற்கு அது அதிகம்; என்றாலும் மழை சார்ந்த சிக்கல்கள் கருதி “சரி, போகலாம்” என்று ஆட்டோவில் உட்கார்ந்தேன்.
கிட்டதட்ட 2 கீ.மீ. சென்ற பின் ஆட்டோ நின்று விட்டது. 50+ வயதில் இருக்கக்கூடிய அந்த ஆட்டோகாரர், இறங்கி ஆட்டோவை சாலையோரமாக நிறுத்தினார். ஸ்டார்ட் செய்வதற்கான இரண்டு முயற்சிகளுக்கு பின் ஆட்டோ மீண்டும் ஓடத் துவங்கியது. ஸ்ரீராம் நகர் உள்ளே நுழைந்த கொஞ்ச தூரத்தில் இந்த பயணம் இனிதாக இருக்காது என்பது புரிந்து விட்டது – தெருக்களில் அவ்வளவு தண்ணீர். வண்டி நின்று விடுமோ என்று நினைத்த சில தருணங்களில், தம் பிடித்து ஆட்டோவை செலுத்திக் கொண்டிருந்தார். மழை, ஆங்காங்கே பதுங்கியிருந்த குப்பைகளையெல்லாம் இழுத்து நடுத்தெருவில் நிறுத்தியிருந்தது.
சிறிது தூரம் சென்ற பின் ஆடோக்காரரின் அலைபேசி இடைவிடாது ஒலித்தது (ரிங்க்டோன் பாடல் – “அச்சம் என்பது மடமையடா..”). ஒரு ஓரத்தில் நிறுத்தி பேசினார் – “சவாரில இருக்கேன். ரோடெல்லாம் தண்ணி.. அவ்வளவு தூரம்-லாம் ஆட்டோ வராது. வேற பாத்துக்க சொல்லு”. இன்னும் சிறிது சென்ற பின் மீண்டும் ஆட்டோ நின்றது. சில முயற்சிகளில் பயணம் தொடர்ந்தது. அடுத்து ஒரு இடத்தில் நின்ற பொழுது, ஸ்டார்ட் செய்ய கடும் முயற்சி செய்தார். நடுவே அவர் “பொதுவா மழை சமயத்துல இந்த பக்கம் ஆட்டோ சவாரி வர மாட்டாங்க” என்று சொன்னதில் நியாயம் இருப்பதாகவே பட்டது. பத்து நிமிட முயற்சிக்கு பின் “நீங்க வேற வண்டில தான் போக வேண்டியிருக்கும்” என்றார். “கடைசியா ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க” என்றேன். அதிர்ஷ்ட வசமாக ஆட்டோ ஸ்டார்ட் ஆகிவிட்டது. அலுவலகத்தை அடைவதற்குள் மேலும் இரு முறை ஆட்டோ நின்று, அவரது கரங்களை சோதித்தது.
இறங்கும் போது 2 நூறு ருபாய் தாள்களை கொடுத்தேன். அவர் எதுவும் சொல்வதற்கு முன் “வச்சுகங்க” என்றேன். வழக்கமாக, (கார்போரேட்) அலுவலக வாழ்க்கை கற்று கொடுத்த கணக்கு “33% அதிகமா கொடுக்கறது சரியா?”ன்னு கேள்வி கேட்கும். அன்றைக்கு அந்த கேள்வி அலட்சியப்படுத்தபட்டது. புறத்தே மட்டுமின்றி, அகத்திலுள்ள சிலவற்றையும் மழை விசிறியடிக்கும் போல.