இரண்டு பிரசாரங்களும், கேள்விகளும்…

சமூக வலைத்தளங்கள் நம் எல்லோரையும் அரசியல், சினிமா, மற்றும் பல விமர்சகர்கள் ஆக்கி விட்டன. அப்படி சமீபத்தில் அரசியல் சார்ந்து வந்த இரண்டு விமர்சனங்களில் சாரம் இல்லையென்றே தோன்றுகிறது.

1. கருணாநிதியின் பிரசாரம் குறித்து..

கருணாநிதி அவர்களின் தேர்தல் பிரசாரம் குறித்து செய்திகள் வந்த போது ஒரு கருத்து வலைத்தளங்களில் உலாவியது – “இந்த 93 வயசுலயும் இவருக்கு பதவி ஆசை விடலை”. இதனை படித்த போது இரண்டு கேள்விகள் எழுந்தன

 

  • அப்போ 40, 50, 60 வயசுல பதவி ஆசை வந்தால் பரவாயில்லையா?
  • தேர்தல் அரசியலில் இருக்கும் எல்லோருக்குமே பதவி மீது குறி உண்டு. இன்றைய நிலை மாறிவிட்டாலும், அடிப்படையில் பதவியைக் கொண்டே திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதே தேர்தல் அரசியலின் சித்தாந்தம். அப்படி இருக்க, இன்னமும் அரசியலில் இயங்கிக்கொண்டிருக்கும் கருணாநிதி  பதவியை குறி வைத்தால் என்ன தப்பு?

அவருடைய அரசியல் நிலைப்பாடு, அடுத்த தலைமுறை தலைவர்களுக்கு வாய்ப்பளித்தால் இருக்கக் கூடிய சாதக பாதகங்கள் குறித்து விமர்சிப்பது வேறு. இப்பொழுதும் அறிக்கை, பேட்டி, நினைவாற்றல் என்று சுறுசுறுப்பாக அரசியலில் தீவிரமாக இருப்பவரை – இப்படி விமர்சிப்பது ஏற்கத்தக்கதாய் இல்லை. இப்படி விமர்சிப்பவர்களில் எத்தனை பேர் அவரவர் 90+ வயதில் (ஒரு வேளை வாழ்ந்து கொண்டிருந்தால்) அவரவர் விரும்பிய பணியை தொடருவார்கள் என்பது கேள்விக்குறி. அப்படி இருக்க, இந்த 93 வயது இளைஞரை இந்த விஷயத்தில் பாராட்டாவிட்டாலும், வசை பாடாமல் இருக்கலாமே.

2. ஜெயலலிதாவின் பிரசாரம் குறித்து…

ஜெயலலிதா அவர்கள் பிரசாரம் செய்யும் போது அவரது மேடையில் இருக்கும் ACக்கள் குறித்து ஒரு கருத்து உலாவுகிறது – “இப்படி இத்தனை ACக்கள் வைத்திருப்பவரா மக்களுக்காக உழைக்க போகிறார்?”. இதை படித்ததும் எழுந்த இரண்டு கேள்விகள்

 

  • மற்ற தலைவர்கள் பிரசாரத்திற்கு AC வேன்களில் போகிறார்கள், அந்த வேனிலிருந்து தலை நீட்டியோ நீட்டாமலோ பேசுகிறார்கள். யாரும் ACயை தியாகம் செய்யவில்லை. அப்படி இருக்க, ஜெயலலிதாவை மட்டும் ஏன் இப்படி விமர்சிக்க வேண்டும்?
  • ஜெயலலிதாவோ மற்ற தலைவர்களோ ஒரு வேளை வேகாத வெயிலில் வியர்க்க விறுவிறுக்க பிரசாரம் செய்வதாகவே வைத்துக்கொள்வோம். அது ஒரு மாத வேலைதானே. அதன் பின், இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் AC அறையில் உட்கார்ந்துதானே நிர்வாகம் செய்யப் போகிறார்கள்?

இந்நிலையில், இதை ஒரு விஷயமாக எடுத்து விமர்சிப்பது முக்கிய விஷயங்களில் இருந்து நம்மை நாமே திசை திருப்பிகொள்வதாகும். அரசியல்வாதிகளை “இவர் இப்படி பேசுவது சரியில்லை, அப்படி பேசுவது குறை”ன்னு விமர்சனம் பண்ற நாம நம்ம விமர்சனங்களுக்கும் ஒரு தரக்கட்டுப்பாடு வச்சுக்கிட்டா நல்லா இருக்கும்..

Comments
  1. 8 years ago
  2. 8 years ago
  3. 8 years ago

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!