நிதிக்கறை
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவார் என்று செய்திகள் வலுவாக உலாவுகின்றன. சட்ட ரீதியில், கைது செய்யப்படுவதை முடிந்த அளவு தள்ளிப்போட்ட அவர், இப்போது டெல்லி உயர்நீதிமன்றம் கைவிரித்த நிலையில் கடைசி நம்பிக்கையாக உச்சநீதி மன்றத்தை நாடியிருக்கிறார். தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகே வெளிவருவார் எனவும் சொல்கிறார்கள்.
இது மோடி அரசின் பழிவாங்கும் செயல் என்கிறார்கள். எனக்கு அப்படி தோன்றவில்லை. இன்னும் சொல்லப்போனால் மோடியின் 2014-19 ஆட்சியில் சிதம்பரத்தை, (அப்போதைய நிதியமைச்சர்) அருண் ஜெட்லியின் அமைச்சகம் பாதுகாத்தது என்பதே பரவலான குற்றச்சாட்டு. வலுவான வழக்காக இருப்பதாலேயே இன்று அவர் ஓடி ஒளிய வேண்டிய நிலை இருக்கிறது என்றே கருதுகிறேன்.
ஒரு சாதாரண மனிதன் தன் மீது வழக்கு வரக்கூடிய முகாந்திரம் இருக்கும்போதே, கைதாகாமல் தடுப்பதற்கு பல முயற்சிகள் எடுப்பான். அவ்வகையில், மத்திய மந்திரிசபையில் இரண்டாம் நிலையில் இருந்த சிதம்பரம், கைது மற்றும் அது சார்ந்த அவமானத்தை தவிர்க்க இப்பொழுது பகீரத பிரயத்தனம் எடுப்பது புரிந்துகொள்ளக் கூடியதே.
“வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்ற வகையில் சிதம்பரம் சட்டத்தை எதிர்கொள்வதை தவிர்க்க முடியாது. சட்டம் தன் கடமையை செய்யட்டும் என நினைக்கும் அதே வேளையில், சிதம்பரத்தின் இந்த நிலை உண்மையில் வருத்தம் தருகிறது.
ஏன்?
1996ல் மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) தொடங்கிய பொழுது, அவரது முக்கிய தளபதியாக இருந்தவர் சிதம்பரம். தமாகா ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குள், உரிய உட்கட்சி அமைப்புகள் ஏற்படுத்தி, சின்னம் பெற்று, தேர்தல் களம் கண்டு வென்றதில் சிதம்பரத்திற்கு தனி இடம் உண்டு. அந்த வெற்றிக்கு பிறகு மத்திய நிதியமைச்சர் ஆனார். அவரது 1997 பட்ஜெட் “கனவு பட்ஜெட்” என்று கொண்டாடப்பட்டது. பின்னர் மூப்பனாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, “காங்கிரஸ் ஜனநாயக பேரவை” என்ற அமைப்பை தொடங்கினார். ஒருவேளை, அந்த அமைப்பை செம்மையாக வலுப்படுத்தி இருந்தால், அன்றைய வைகோ போலவோ இன்றைய சீமான் போலவோ அல்லாமல் நேர்மறையான மாற்று அரசியலுக்கு தமிழகத்தை கொண்டு சென்றிருக்கலாம். ரஜினி போன்றவர்கள் நிச்சயம் ஆதரித்திருப்பார்கள். ஏனோ, மத்திய அரசியலே தன் ஆடுகளம் என மீண்டும் காங்கிரசுக்கே சென்றுவிட்டார்.
சரளமான ஆங்கிலம், நல்ல தமிழ் பேச்சு, வாதங்களை நிதானமாகவும் பக்குவமாகவும் எடுத்து வைக்கும் தன்மை, நிர்வாக நுணுக்கங்களை எளிதில் கிரகிக்கும் திறமை, உணர்ச்சி பொங்கும் சமயங்களிலும் நிதானமாக செயல்படும் முறை (ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் மீது செருப்பு வீசப்பட்டதும், அதனை அவர் நிதானத்துடன் கையாண்டதும் நினைவுக்கு வருகிறது), பிராந்திய உணர்வுகளில் முற்றுமாய் மூழ்கிவிடாத தேசிய பார்வை, பல முறை இந்தியாவிற்கு பட்ஜெட் தயாரித்த நிதியமைச்சர் என்ற உயர்வான பெருமை – இது போன்ற பன்முகம் கொண்ட அரசியல்வாதிகள், நிகழ்கால தமிழக அரசியலில் (ஏன் இந்திய அரசியலிலேயே) அரிது. அப்படி இருந்த சிதம்பரம், தனது பொதுவாழ்வு சறுக்கலின் காரணமாக கைதாகப் போகிறார் என்பது வருத்தமளிக்கிறது.
இந்த வழக்கில் சிதம்பரம் சிக்குவதற்கு அவரது மகன் செய்த தகிடுதத்தங்களும், அதற்கு அவர் துணைபோனதும் காரணம் என்று சொல்கிறார்கள். தன்னுடைய பல பட்ஜெட் பேச்சுகளில் திருக்குறளை மேற்கோள் காட்டியவர் சிதம்பரம். அவரது மகன், “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி” குறளை சரியாக படிக்கவில்லை போல. தமிழக அரசியலின் பிரதான, நேர்மறை ஆளுமையாக வந்திருக்க வேண்டிய ஒரு முகத்திற்கு, சிறைவாசம் (ஒரு நாளே ஆனாலும்) அழியாத கறை பூசப் போகிறது. 20+ ஆண்டுகளில் காலம்தான் எத்தனை விஷயங்களை புரட்டி போடுகிறது?!
சிதம்பரத்தை “செட்டிநாட்டுச் சீமான்” என்பார் கலைஞர். தற்காலம், சீமான்களுக்கு சிறைவாச(னை) காலம் போல.