கடைக்கு தடை மட்டும் போதாதுங்க…

தமிழகத்தில் “மது விலக்கு” அலை வீசுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போட்டி போட்டுக்கொண்டு “இலவச அறிவிப்புகளை” அள்ளி வீசுவதை கடந்த தேர்தலில் கண்டோம். வரும் தேர்தலுக்கு “மது விலக்கு” போல.
 
ஆவேசத்தையும் ஆக்ரோஷத்தையும் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு இந்த விஷயத்தை பார்ப்போம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு, மது அருந்தியவர்களில் பெரும்பாலோர் மற்றவர்களிடம் பேசும்போது அந்த வாடை தெரியாதிருக்க என்னன்னவோ முயற்சி செய்வார்கள் (முடிந்தால், பேசாமலேயே ஓடி ஒளிவார்கள்). இன்று, மது வாங்குபவர்கள் ஏதோ பெப்ஸி பாட்டிலை எடுத்து செல்வது போல் வெளிப்படையாகவே மது பாட்டிலை வாங்கி செல்கிறார்கள். இந்த மாற்றம் சொல்வது என்ன? – விரும்பியோ, விரும்பாமலோ இங்கே “தண்ணியடிப்பது” பெருமளவு வாழ்வியல் முறையில் கலந்துவிட்டது.
 
எனது பள்ளிக்காலங்களில் மது அருந்துவது பாவச் செயல்களில் ஒன்றாக போதிக்கப்பட்டது. அது போக, மதுப்பழக்கம் இருந்தால் சமூகத்தில் மரியாதை கிடைக்காது என்ற நிலையும் இருந்தது. உதாரணம் – திருமணத்திற்கு பெண் கிடைப்பது எளிதானதல்ல (இன்று திருமண வலைதளங்களில் கூட “Social Drinking” பழக்கம் உண்டு என்று சர்வசாதாரணமாக சொல்கிறார்கள்). இன்றைக்கு இத்தகைய நிலைப்பாடுகள் தலைகீழாக மாறியிருக்கும் நிலையில், அரசாங்கம் மதுக்கடைகளை இழுத்து மூடினால் எல்லாம் சரியாகிவிடும் என்பது கானல் நீராகவே தெரிகிறது.  கதவை அடைத்துவிட்டால், ருசி கண்ட பூனைகள் பட்டினி கிடக்குமா என்ன?
 
தீர்வு இரு வகைகளில் இருப்பதாக நினைக்கிறேன் 
1. தடை சார்ந்தது – முழுமையாக மூடாவிடிலும், அரசு மது கிடைப்பதற்கான தடைகளை அதிகரிக்க வேண்டும் (அதிக விலை, 30-40 கிலோமீட்டர்களுக்கு ஒரு மதுக்கடை போன்ற சில நடவடிக்கைகள்).
2. புறக்கணிப்பு சார்ந்தது – “பாவச் செயல்” என்ற போதனையை ஏற்பது மலையேறிவிட்ட இந்த காலகட்டத்தில், அது “உடல் தீங்கு செயல்”, “உயிர் வாங்கும் செயல்” (குடிப்பவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்திற்கும்) என்ற விழிப்புணர்வில் பெற்றோர், பள்ளி, கல்லூரி, அலுவலகம் என சமூகத்தின் பல அடுக்குகள் தீவிரமாக ஈடுபட வேண்டும். இப்படியே விட்டால் இன்னும் சில தலைமுறைகளில் சிந்திக்கும் திறனை இழந்த தமிழ் சமுதாயமாக மாறிப் போய்விடுவோமே என்ற கவலை வளர வேண்டும். மது அருந்துவோருக்கு சமூகத்தில் மரியாதை குறைக்கப்பட வேண்டும்.
 
பொதுவாக, சமூக நல அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் மேற்சொன்ன முதல் தீர்வில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், புறக்கணிக்கும் மனோபாவம் வளர்ந்துவிட்டால், தடை இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? கோரிக்கையே தேவையில்லை, தடை தானாகவே நிகழும். 
 
“இதெல்லாம் படிக்கறதுக்கு நல்லா இருக்கு, நான் என்ன செய்ய முடியும்?” என்ற கேள்வி எழுகிறதா?
  • நீங்கள் “குடிப்பவர்” இல்லையெனில், உங்கள் வட்டத்திலுள்ள “குடிப்பவர்களுக்கு” விளங்க வைத்துப் பாருங்கள். ஏற்கவில்லையெனில், அவர்களை ஒதுக்கி வைக்கத் தொடங்குங்கள். மாற்றம் நிகழும். 
  • நீங்கள் “குடிப்பவராக” இருந்தால் – இங்கே எழுதியிருப்பது கிரேக்க மொழியாகவோ, லத்தின் மொழியாகவோ உங்களுக்கு தெரியவில்லையென்றால் நீங்கள் மாறிவிடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!