தலைவர்.. CEO.. Mentor!!!

அன்புள்ள தலைவர் ரஜினி அவர்களுக்கு –

உங்கள் அபிமானி அன்புடனும், உரிமையுடனும் எழுதும் மற்றுமொரு திறந்த மடல்.

நேற்றைய (12/3/2020) பத்திரிக்கையாளர் சந்திப்பில் நீங்கள் சொன்ன மூன்று திட்டங்களை நான் கீழ்க்கண்டவாறு உள்வாங்கியுள்ளேன் –

  1. கட்சிகளில் பெரும்பாலான பதவிகள் தேர்தல் நேரத்துக்குரியவை; தேர்தல் முடிந்ததும் கலைக்கப்படும். இதன் மூலம் கட்சிப் பதவிகளை வைத்துக்கொண்டு ஆட்சிக்கு தொந்தரவு கொடுக்கும் + ஊழலுக்கு வழிவகை செய்யும் இன்றைய நடைமுறை ஒழியும்.
  2. தேர்தலில் 65% இளைஞர்கள் நிறுத்தப்படுவார்கள்; மற்ற 35%க்கு அனுபவசாலிகள், நிபுணர்கள், உயர்பதவியில் இருந்து ஒய்வு பெற்றவர்கள் நிறுத்தப்படுவார்கள். இதன் மூலம் “அரசியலை மாற்றவேண்டும், ஆனால் வழியில்லையே” என்று ஒதுங்கி இருப்பவர்கள் – குறிப்பாக இளைஞர்கள் – உள்ளே இறங்கி மாநில நலனுக்கு பெரும் பங்காற்றுவார்கள்.
  3. தேர்தலில் வென்றபின் கட்சியும் ஆட்சியும் தனித்தனியாக இயங்கும். ஆட்சியின் தலைமையான முதல்வர் CEO போல இயங்குவார். கட்சியில் கட்சித்தலைவர் தலைமையில் ஒரு வல்லுநர்கள் குழு இயங்கும். அந்தக் குழு கட்சியின் கொள்கைகளை, செயல்திட்டங்களை ஆட்சியாளர்கள் சரிவர செயல்படுத்துகிறார்களா என கண்காணிக்கும்.

இவை மூன்றும் வித்தியாசமான, இக்காலத்திற்கேற்ற நவீனமான, தொலைநோக்குப் பார்வை உள்ள திட்டங்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நீங்கள் செதுக்கிக் கொண்டிருக்கக் கூடிய Grand Political Vision-ன் ஒரு அங்கமாகவே இவை தெரிகின்றன. இவை மற்ற அரசியல் கட்சிகள் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க எத்தனிக்காத முயற்சிகள் என்பதிலும் சிறுதுளி சந்தேகமும் இல்லை. ஆகையால் இத்திட்டங்களை இருகரம் கூப்பி வணங்கி வரவேற்கிறேன்.

அதே நேரம், நீங்கள் மூன்றாவது திட்டத்தை சொல்லும் போது, நாளை மக்கள் ஆதரவுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் நிலையில், நீங்கள் கட்சித் தலைவராக இருப்பீர்கள் எனவும், முதல்வராக வேறொருவர் நியமிக்கப்படுவார் எனவும் சொன்னீர்கள். இந்த விஷயத்தில் நான் – உங்கள் அபிமானியாக அல்ல, ஒரு பொதுவான வாக்காளனாக – ஒரு சிறு மாற்றத்தை வேண்டுகோளாக வைக்கிறேன்.

வேண்டுகோள்

மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் சூழலில், முதல் இரண்டு-மூன்று வருடங்களுக்கு நீங்களே முதல்வராக ஆட்சி செய்ய வேண்டுகோள் விடுக்கிறேன்.

வேண்டுகோளுக்கான காரணம்

இந்த வேண்டுகோளை ரசிக மனநிலையிலோ, எப்படியாவது தலைவரை முதல்வராக பார்த்துவிட வேண்டும் என்ற ஆதங்கத்திலோ வைக்கவில்லை.

சென்ற கடிதத்தில் சொன்னது போல், நீங்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கும் நபர் உங்கள் கண்ணாடியை அணிய முடியும்; ஆனால் உங்கள் கண்களை அணிய முடியாது. எனவே, எப்படி இன்று “இதுதான் மாற்று அரசியல்” என்று தீர்க்கமாக உங்கள் Visionஐ முன்வைக்கிறீர்களோ, அது போலவே சில ஆண்டுகள் நீங்களே ஆட்சி செய்து “இதுதான் மாற்று அரசு” என்று ஒரு முன்மாதிரி நிர்வாகத்தை (Model Governance) செயல்படுத்தி வழி காட்டுங்கள்.

இவ்வாறு நீங்கள் நேரடியாக Mentor ஆகாமல், CEOவாக இருந்து நிர்வாகத்தில் ஒரு புதுப்பாதையை உருவாக்கிவிட்டு, அதன்பின் உங்கள் Vision-படி ஒரு இளைஞரிடம் ஆட்சியை ஒப்படைத்து Mentor ஆனால் அதன் வீரியம் அளப்பரியதாக இருக்கும்.

இப்படி “முதலில் கட்சித்தலைவர் -> பின்னர் (சில ஆண்டுகளுக்கு) அரசின் தலைமையேற்று நடத்தும் CEO -> பின்னர் கட்சித்தலைவர் & அரசுக்கு Mentor” என்ற படிநிலையில் செல்லும் போது நீங்கள் அண்ணாவைப் போல் தலைவர்களையும் உருவாக்க முடியும், காமராஜரைப் போல் இளைஞர்களுக்கு வழிவிடும் K-Planஐயும் செயல்படுத்த முடியும்.

மேற்சொன்ன வேண்டுகோளை பரிசீலிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த வேண்டுகோளை நீங்கள் ஏற்றுக்கொண்டால், இன்று நீங்கள் விதைத்திருக்கும் அரசியல் புரட்சிக்கான விதைக்கு நீரூற்றி, உரம்போட்டு வளர்க்க முன்வரும் கைகள் பன்மடங்கு பெருகும். நீங்கள் எதிர்பார்க்கும் அலை வெகுவேகமாக உருவாகும். இது நிச்சயம்.

ஜெய் ஹிந்த்.

அன்புடன்,
சிவகுமார் – என்றென்றும் உங்கள் அபிமானி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!