நம்பிக்கை நடத்துனர்
நேற்று (ஜூலை 6, 2015) ரயில்கள் மோதுவது தவிர்க்கப்பட்டதாக அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள் படித்ததும் சற்று கிலி ஏற்பட்டது உண்மை. அதிலும், சென்னை பீச் – பார்க் தண்டவாளத்தில் மோதல் நிகழவிருந்தது என்று படித்த போது “என்னப்பா நடக்குது இங்கே?” என்று கேட்க தோன்றியது.
இந்நிலையில், நேற்று இரவு அடையாரிலிருந்து எக்மோர் ஸ்டேஷன் செல்ல வேண்டியிருந்தது. வழக்கமாக, மத்திய கைலாஷில் பஸ் ஏறி கிண்டியில் இறங்கி, ட்ரெயின் ஏறி எக்மோர் செல்வேன் – மவுண்ட் ரோடு டிராபிக் தவிர்ப்பதற்காக. நேற்று இரட்டை மன நிலையில் இருந்தேன் – ஒருவேளை கிண்டியிலிருந்து போகும் போது எதிரில் வரும் ட்ரெயினிடம் “வணக்கம்” சொல்ல நேர்ந்து, நடு வழியில் இறங்க நேரிட்டால் என்ன செய்வது? பஸ் டிராபிக்கில் சிக்கினால் கூட ஆட்டோ பிடிக்கலாம். இப்படி யோசித்த நேரம், 23C பஸ் (எக்மோர் வழி செல்லும்) வந்தது. “நல்லது” என்றெண்ணி ஏறிக்கொண்டேன்.
பஸ்ஸில் அவ்வளவாக கூட்டம் இல்லை. நடத்துனர் (30 வயது இருக்கலாம்) பயணிகள் இருக்குமிடத்திற்கே சென்று டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆயிரம் விளக்கு நிறுத்தம் வந்த போது, இரண்டு பார்வையற்றவர்கள் “இந்த பஸ் எக்மோர் போகுமா?” என்று கேட்டுக் கொண்டே ஏற முயற்சித்தனர். இந்த நடத்துனர் தன் இருக்கையிலிருந்து ஓடோடி வந்து, அவர்களுக்கு கை கொடுத்து ஏற்றி, இருக்கைகளில் அமர வைத்தார். “அட, சென்னை பஸ்ஸில் இப்படி கூட நடக்குமா?” என்று ஆச்சரியம் தந்தார்.
அந்த நடத்துனர் பெயர் தெரியவில்லை (அந்த பஸ் எண் – TN01-N 4430). நம்பிக்கை தரும் அந்த நடத்துனருக்கு ஒரு சல்யூட்.
பி.கு: (1) ஏதாவது சரியில்லை என்றால் உடனடியாக facebook-இல் பதிவிடுகிறோம். ஒரு நல்ல நிகழ்வையும் அது போன்றே பகிருவோமே என்று எழுதினேன்.
(2) தலைப்பைப் பார்த்து ரஜினி பற்றிய பதிவு என்று எண்ணியிருந்தால் நான் பொறுப்பல்ல 🙂