இயல், இசை, …

முத்தமிழ் என்றால் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால், அதே கால கட்டத்தில்தான் ஒவ்வொரு பண்டிகையின் போதும் “இந்த தீபாவளிக்கு வந்த ரஜினி படம் பார்த்தியா, இந்த பொங்கலுக்கு வந்த கமல் படம் பார்த்தாச்சா” என்று சினிமாவை ஊட்டி வளர்த்தார்கள். இயல், இசை, நாடகம் பரிணாம மாற்றம் அடைந்து இயல், இசை, சினிமா என்றாகி நிற்கிறது. அதன் பலனாக, நமது பேச்சில், முக பாவங்களில், எண்ண ஓட்டங்களில் என சினிமா விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. சினிமா கலக்காத மீமீக்களும், தண்ணீர் கலக்காத பாலும் சரிநிகர் உவமைகள்.

சினிமாவையும், சினிமாக்காரர்களையும் திட்டும் எத்தனையோ சமூக வலைப் பதிவுகளில் இதுவும் ஒன்றோ என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். ஓர் அரசாங்க அலுவலகத்தின் லஞ்ச நடைமுறை என்று நினைக்கும் போதே, இந்தியன் படத்தில் ஆச்சி மனோரமா பென்ஷனுக்காக அலைக்கழிக்கப்படும் காட்சியே கண்முன் விரிகிறது. ஊழலைப் பற்றி வாய் கிழிய பேசிவிட்டு நமக்கான லைசென்சோ பாஸ்போர்ட்டோ எடுக்க லஞ்சம் கொடுக்கும் போது “ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு breaking point உண்டு” என்ற குருதிப்புனல் பட வசனம் கொண்டு நம்மை சமாதானம் செய்து கொள்கிறோம். இப்படி நம்மை ஆக்கிரமித்து, நமக்குள் ஊறிப்போன சினிமாவை ஆக்கபூர்வமாகவே கையாளலாம் என்று தோன்றுகிறது.

நல்ல சினிமாக்களை நம் பிள்ளைகளையும் பார்க்க வைக்கவேண்டும். சில பாட புத்தகங்களும், பல அறிவுரைகளும் கற்றுக் கொடுக்காத உலக நன்மைகளை,  சமூக உண்மைகளை நல்ல சினிமாக்கள் சில மணி நேரங்களில் புரிய வைத்துவிடக்கூடும். நாமும் கூட பொழுதுபோக்கு என்ற அம்சத்தைக் கடந்து, சிந்தனை விரிவாக்கம் என்ற பரிமாணத்தில் சினிமாவை உள்ளிழுத்துக் கொள்ளவேண்டும். இன்றைக்கு நமது விமர்சனங்கள் படைப்பாளிகளை நேரடியாக சென்றடையும் வசதியை பயன்படுத்தி,அவர்களை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.

சினிமா படைப்பாளிகளுக்கு ஓர் வேண்டுகோள் – ஜெயகாந்தன் கதைகளை படித்த போது, எனக்குள் பல ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மாற்று கருத்துக்களை, மாற்று நடைமுறைகளை அலசும் மனப்பான்மையை அவை வளர்த்திருக்கின்றன. எழுத்தை விட பல மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய “காட்சி”யை கையில் வைத்திருக்கும் உங்களுக்கான பொறுப்பும் பன்மடங்கானது. எங்கள் சிந்தனைகளை ஃபார்முலாக்களுக்குள் அடைத்துவிடாத நல்ல சினிமாக்களை கொடுங்கள்.

வாழ்க நல்ல சினிமா…

 

Comments
  1. 9 years ago
  2. 9 years ago
  3. 9 years ago
  4. 9 years ago

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!