விக்ரம்
விக்ரம் படம் வெளியாவதற்கு முன் அதன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு முறை “கைதி” படத்தை பார்த்துவிட்டு விக்ரம் பார்க்க சொன்னார். அதனால் “கைதி”யை மீண்டும் பார்த்தேன். இரண்டு வருடங்களுக்கு பிறகு இரண்டாம் முறையாக பார்த்தாலும் “கைதி”யின் விறுவிறுப்பு fresh ஆகவே இருந்தது.
சரி, விக்ரம்-க்கு வருவோம். சில வருடங்களுக்குப் பிறகு வெள்ளித்திரையில் கமல்! அவர் வரும் காட்சிகளில் (குறிப்பாக இரண்டாம் பாதியில்) ஒருவித புத்துணர்ச்சி இருப்பதை மறுக்க இயலாது. க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார். Multi Starrer Movie என சொல்லப்பட்டாலும், இது முழுநீள கமல் படம் இல்லையென்றாலும், கமல் நடித்திராவிட்டால் இப்படத்தை முழுமையாக பார்க்க முடியுமா என்பது சந்தேகமே. அவ்வகையில், கமல் இப்படத்தில் தன் முத்திரையை ஆழமாகவே பதித்திருக்கிறார். மற்றபடி, கமலுடைய நடிப்புக்கு “விக்ரம்” தீனி போடவில்லை என்பதே நிஜம்.
படத்தின் அடுத்த ப்ளஸ் – பஹத் பாசில். இயல்பாக வருகிறார், படத்தின் முதல் பாதியை தாங்கிப் பிடிக்கிறார். அது போல, ஆங்காங்கே பேரன் விக்ரம் சார்ந்த பாசக் காட்சிகளும், ஏஜென்ட் டீனா சஸ்பென்ஸ் உடையும் இடமும் “அட” சொல்ல வைக்கின்றன. “கைதி”யின் கதையை இலகுவாக உள்ளே நுழைத்திருப்பதும் நன்றாக இருக்கிறது.
அனிருத்தின் பின்னணி இசை காட்சிகளின் உயர்வுக்கு உதவினாலும், பல இடங்களில் வசனம் சரிவர கேட்காத அளவிற்கு உச்ச சத்தத்தில் இருக்கிறது. தியேட்டரில் ஹெட்போன் போட்டு கேட்கமுடியாது என்பதை அனிருத் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இடைவேளைக்கு முன், முகமூடியை கழட்டப்போவது கமல் என்பது பார்வையாளர் ஊகிக்கமுடிந்த கணத்திலேயே அதை செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அப்படியில்லாமல், ரொம்ப இழுத்துவிட்டது போன்ற ஒரு உணர்வு. அது போக, முகமூடியை கழட்டும் வரை அந்த சண்டைக் காட்சிகளிலும், பைக் காட்சிகளிலும் அந்த உடலமைப்பை பார்த்தால் அது கமல் போலவே தெரியவில்லை. இடைவேளை காட்சியில் முகமூடியை கழட்டி எல்லோருக்கும் தன் முகத்தை தெளிவாக காட்டும் கமல், இறுதிக் காட்சியில் முகத்தை மறைக்காமலே ரோலக்ஸ் மீட்டிங்கில் கலந்து கொள்வதும் அதை யாரும் கண்டுபிடிக்காததும் பெரிய ஓட்டையாக தெரிகிறது.
விஜய் சேதுபதி – ரொம்ப மெனக்கெடுகிறார், ஆனால் ஈர்க்கவில்லை. “பவானி”யை ஒப்பிடும்போது “சந்தனம்” வெத்துவேட்டுதான். அதே போல, “ரோலக்ஸ்” என எக்கச்சக்க பில்டப்புடன் வரும் சூர்யா அதற்கு எந்த நியாயமும் செய்யவில்லை. “கைதி”, “விக்ரம்” தொடரின் அடுத்த படத்தில் சூர்யா “ரோலக்ஸ்” ரோலில் மிளிருவார் என நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
என்னதான் பின்பாதியில் நியாயப்படுத்தப்பட்டாலும், கமலை குடி, சிகரெட், போதைப்பொருள் போன்றவற்றுடன் முதல் பாதியில் உலவவிட்டது சரியில்லை. Drug Free Society பற்றிய சிந்தனை கொண்டவர், மற்றவர் பார்வையில் வேறுமாதிரி காட்டிக்கொள்வதற்காக இவற்றை கையிலெடுப்பதாக காட்டியிருப்பதை ஏற்கமுடியவில்லை.
போதைப்பொருளுக்கு எதிராக “சூரசம்ஹாரம்” என்றொரு கமல் படம் உண்டு. அந்த படத்தில் போதைப்பொருள் உபயோகம் குறித்து ஒரு பதைபதைப்பை ஏற்படுத்தியிருப்பார்கள். ஆனால், விக்ரமில் அப்படி ஏதும் இல்லை. போதைப்பொருளுக்கு எதிரான கருத்தை மையமாக கொண்ட படமாக இருந்தாலும், காட்சியமைப்புகளிலும் பின்னணி இசை ரீதியிலும் போதைப்பொருள் உபயோகம் glorify செய்யப்படுவதாகவே இருக்கிறது.
“கைதி” படத்தில் இருந்த அளவில் அழுத்தத்தையும், விறுவிறுப்பையும் “விக்ரம்” படத்தில் காண முடியவில்லை. அந்த வகையில், லோகேஷின் படங்களில் விக்ரம் மாஸ்டரை மட்டுமே முந்தியிருக்கிறது என சொல்லலாம். கைதியின் நீட்சியாக விக்ரம் இருப்பதால், கைதியை மையமாக வைத்து இரு கேள்விகள் எழுகின்றன –
- கைதியில் கொல்லப்பட்டதாக காட்டப்பட்ட அன்பு (அர்ஜுன் தாஸ்) இதில் உயிரோடு வந்தது எப்படி?
- கைதி இறுதிக்காட்சியில், டில்லியுடன் (கார்த்தி) ஏதோ சம்பந்தம் இருப்பதாக அடைக்கலம் சொல்லுவான். ஆனால், இங்கே ரோலக்ஸிடம் “பரோலில் வெளிவந்த கைதி உள்ளே புகுந்து கெடுத்திட்டான்” என டில்லியுடன் எந்த சம்பந்தமும் இல்லாதததுபோல் சொல்வது ஏன்?
இறுதியாக –
“KGF2, விக்ரம் – இந்த இரண்டு படங்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் இரண்டாம் முறையாக பார்க்கவேண்டும். உன் தேர்வு என்ன?” என என்னைக் கேட்டால், “விக்ரம்” என சொல்லுவேன்.