அலங்கார வார்த்தை
செவியில் விழுந்த உரையாடல் 1 –
ஒருவர் தன் நண்பரிடம் – “கவெர்மன்ட் ஆபீஸ்-னாலே பிரச்சினைதான். என் பொண்ணுக்கு ரெண்டு பர்த் சர்டிபிகேட் இருக்கு.”
அந்த நண்பர் சற்றே அதிர்ச்சியாகி “என்னப்பா சொல்றே?” என்றார்.
இவர் “என் பொண்ணு பிறந்தது பிரைவேட் ஆஸ்பத்திரில, வேற ஊர்ல. ஆனா, கவெர்மன்ட் ஆஸ்பத்திரில பிறக்கிற பெண் குழந்தைக்குதான் அரசாங்கம் 8000/- ரூபாய் கொடுக்குது. அதனால, என் பொண்ணு கவெர்மன்ட் ஆஸ்பத்திரில பிறந்த மாதிரி இன்னொரு சர்டிபிகேட் வாங்க வேண்டியதா போச்சு. சர்டிபிகேட் கொடுக்கறதுக்கு எட்டாயிரத்துல மூவாயிரம் ரூபாயை வாங்கிட்டுதான் விட்டாங்க” என்று நொந்து கொண்டார்.
உரையாடல் 2 –
“என்னப்பா முப்பதுக்கும் மசியலையா?”
“இல்ல, அறுபது கேட்கிறான்”
“சொத்து வரி நிர்ணயிக்கறதுல கூட இவ்வளவு காசு பண்ணுவாங்களா?”
“வருஷம் எழுபது கட்டாம பத்து கட்டும்போது, வருஷா வருஷம் அறுபது சேமிப்போம்ல.. முதல் வருஷம் சேமிக்கறதை கொடுத்திட சொல்றான்”
மேற்சொன்ன உரையாடலின் சாராம்சம் – அரசின் மதிப்பீட்டின் படி, வருடத்திற்கு எழுபதாயிரம் வரி கட்ட வேண்டிய சொத்து அது. ஆனால் வருடம் பத்தாயிரம் மட்டும் கட்டும் வகையில் மதிப்பீட்டாளரை மதிப்பிட சொல்கிறார்கள். அதற்கு அந்த அரசு மதிப்பீட்டாளர் அறுபதாயிரம் ரூபாய் “அன்பளிப்பாக” கேட்கிறார். அன்பளிப்பு தொகையை குறைத்துக் கொள்ளவில்லையே என்ற ஆதங்க உரையாடல்.
இந்த இரண்டு உரையாடல்களிலும் சம்பந்தப்பட்டவர்கள் பொருளாதார நிலையில் வெவ்வேறு நிலையில் இருப்பவர்கள் என்பது தெரிகிறது. ஆனால், இருவரிடமும் பொதுவான அம்சம் – லஞ்சம் கொடுத்து, தேவையான சலுகையை பெற்றுக்கொள்ளும் மனப்பான்மை. இவர்கள் இன்றைய சமுதாயத்தின் பிரநிதிகளாகவே தெரிகிறார்கள். ஒருபுறம் “இந்த அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் எல்லாம் ஊழலில் திளைத்தவர்கள். இவர்களை அடியோட மாற்ற யாரவது வரமாட்டார்களா?” என்று டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து அலசிக் கொண்டு, மறுபுறம் “அவங்க வாங்க மாட்டாங்கன்னா பொது மக்கள் நாம ஏன் இப்படி ஒரு முயற்சி செய்ய போறோம்?” என்று வியாக்கியானம் பேசுவார்கள்.
சில கேள்விகள் எழுகின்றன –
- நேர்மை என்பதோ, ஊழல் ஒழிப்பு என்பதோ அரசு மட்டுமே செய்ய வேண்டிய செயலா?
- ஓட்டுநர் உரிமம் பெறுவது போன்ற விஷயங்களில் (அதிகாரிகளின்) வற்புறுத்தல் காரணமாக லஞ்சம் தவிர்க்க முடியாமல் போகலாம். மேற்சொன்ன சம்பவங்கள், வலிய சென்று லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்கும் செயல்களாகவே தெரிகின்றன. இப்படி பொதுமக்களும் சட்டத்தை வளைத்து, ஊழலை வளர்ப்பதை “பொது வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்” என்று செய்தால் ஒரு தேசமாக நாம் எப்படி முன்னேறுவோம்? (இந்த நிலைமையில், “துபாய், சிங்கப்பூர்-ல எல்லாம் அப்படி இப்படி இருக்க முடியாது. நம்ம நாடு எப்பதான் அப்படி மாறுமோ?” என்ற அங்கலாய்ப்பு வேறு)
- இப்படிப்பட்ட மக்கள் நிறைந்த சமுதாயத்திலிருந்துதான் தலைவர்களும் உருவாகிறார்கள். அவர்கள் மட்டும் நேர்மையாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
இவற்றை மீறி, பாரதியாரின்
“நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
நீட்டினால் வணங்குவாய் போ போ போ
தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே
தீமை நிற்கி லோடுவாய் போ போ போ”
என்ற வரிகள் மெய்ப்படும் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான். கூடவே, நம்மால் முடிந்த அளவுக்கு லஞ்சத்தை தவிர்ப்போமே (உதாரணம் – விதி மீறல்களுக்காக நிர்ணயிக்கப்படும் அபராதத்தை குறைக்க லஞ்சம் கொடுக்காமல் இருப்பது).
பி.கு: அதென்ன தலைப்பு “அலங்கார வார்த்தை” என்று யோசிக்கிறீர்களா? இன்றைய நிலையில், “ஊழல் ஒழிப்பு” என்பது அலங்கார வார்த்தையாகவே தெரிகிறது.
மிகவும் நன்று சிவா! எனக்கும் இந்த கேள்விகள் சில நாட்களாகவே அரித்துக் கொண்டு இருக்கின்றது.பல் வேறு காரணங்கள் இருந்தாலும், எனக்கு இரு காரணங்கள் தோன்றின.
ஒன்று, விதிகளை விட அறமே முக்கியம் என உனர்த்திய கிருஷ்னர். உதாரனத்திற்கு மகாபாரதத்தில் சூரியனை தற்காலிகமாக மறைத்து யுத்தத்தை நிறுத்தியது, கர்னன் பார்த்திபனைத் தவிர்த்து ஏனைய பான்டவர்களை கொல்ல கூடாது என வரம் வாங்கியது,என்று பல நிகழ்ச்சிகள். ஆனால் பகவான் செய்த்து உலகின் நன்மைக்கு. இன்று பலர் விதிகளை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. விதிகள் தற்காலிகமானவை. அவற்றை எப்போதும் நேரம், காலம் இவற்றை கொண்டே பார்க்க வேண்டும்.எல்லா விதிமீறல்களும் சுயநலத்திற்காக மட்டுமே நிகழ்கிறது.
இரண்டு, இந்தியா என்ற ஒரு தேசம், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுவது தவறு. வேண்டுமானால் ஐரோப்பிய யுனியனுடன் ஒப்பிடலாம். இந்தியர்கள் சாதி, சமயம், மொழி, பொருளாதாரம், தொழில் என்று பல நிலைகளில் இருந்து செயல் படுகின்றனர். இவர்களுக்கு எல்லாம் ஒரு பொதுவான விதியை அமைத்து செயல்படுத்துவது சுலபமல்ல. தற்போது ஐரோப்பிய யுனியனில் நடைப் பெறும் குழப்பத்தை பார்க்கும் போது இந்தியா நன்றாக ஒரு கட்டுக்கோப்புடன் இருப்பதாகவே தோன்றுகிறது. விதிகளை நெறியுடன் பின்பற்றுவர் சிலரே ஆயினும், பெரும்பாலோர் அறத்துடனே இருக்கின்றனர். இல்லையெனில் இவ்வளவு வேற்றுமைகள் நிறைந்த நாட்டில் 120 கோடி மக்கள் சுமாரக வாழ்வது சாத்தியமில்லை.
கிரி – "விதி", "அறம்" என்ற கோணங்களில் பார்ப்பது சற்றே விரிவாய் இருக்கிறது. மேற்சொன்ன இரண்டு சம்பவங்களும் "அறம் சார்ந்த தன்மை"யிலிருந்தும் வெகுவாக விலகியிருப்பதாக நினைக்கிறேன். இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், கட்டுகோப்பு உடையத் தொடங்கும். அதற்கு முன் விழித்துக் கொள்வது நல்லது.