பீச்புக்

ஃபேஸ்   பீச்புக்

இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஒரு ஞாயிறு அன்று, என் மகள் (நான்கு வயது) கடற்கரை போக வேண்டும் என நச்சரித்தாள். “சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் போகலாம்” என்று சொல்லி சமாளிக்க பார்த்தேன். அவள் “நான் எப்பவுமே ஈவினிங் சீக்கிரம் எழுந்திருக்கணும்னுதான் தூங்குறேன். ஆனா லேட் ஆகிடுது. நைட் ஆகிடுதுல்ல. அப்புறம் பீச்சே போக முடியாது” என்று பதிலடி கொடுத்தாள். சரியென்று கிளம்பி மாலை நான்கு மணிவாக்கில் பெசன்ட் நகர் பீச்சுக்கு சென்றோம். பஸ் விட்டு இறங்கி பீச்சுக்கு நடக்கும் வழியில் “பீச்.. பீச்.. பீச்” என்று சொந்த ராகத்தில் பாடிக்கொண்டு வந்தாள்.

பீச் மணலில் இறங்கி நடக்க ஆரம்பித்த போது “என் கல்லூரி நாட்களில் இந்த பீச் இன்றைய வணிகமயமாக்கலின்றி எவ்வளவு அமைதியாக இருந்தது” என்ற எண்ணம் ஓடியதை தவிர்க்க இயலவில்லை. வணிகமயமான தன்மைதான் மாற்றமே தவிர, அங்கே வந்திருந்தவர்களது மனநிலை வெளிப்பாடு (மகிழ்ச்சி, ஆரவாரம், மனதார கடல் பார்க்கும் தன்மை, இதர இதர) கால மாற்றத்தில் கரைந்ததாக தெரியவில்லை. இன்று அந்த மகிழ்ச்சியை நூற்றுக்கணக்கில் பதிவு செய்துகொள்ள ஸ்மார்ட் போன் இருப்பது ஒரு பிளஸ்தான்.

கடலில் கால் நனைக்க சென்றோம். சற்றே பெரிய அலையாய் வரும் போதேல்லாம் “ஏ.. பெரிய அலை” என்று சத்தம் போட்டு கொண்டே அலையை கால் நனைக்க விட்டோம். அப்போது கடலோர காவல் படை ஹெலிகாப்டர் தாழ்வான உயரத்தில் பறந்து சென்றது. “அங்க பாரு ஹெலிகாப்டர்”என்று மகளிடம் காண்பிக்க, அவளும் உற்சாகத்தில் கத்த, இருவரும் ஹெலிகாப்டர் நோக்கி கையசைத்தோம். எங்களை போலவே இன்னும் சிலரும் கையசைக்க, அந்த பைலட்டும் கையசைத்து சென்றார். பொதுவாக யாரையேனும் எதிரில் பார்த்தால் மெல்லிய புன்னகையோடு கடந்து செல்லும் நான் இவ்வாறு சத்தமிட்டு கையசைத்தது, எனக்கே வித்தியாசமாக தெரிந்தது. மகளின் உற்சாகம் என்னையும் தொற்றி கொண்டது போல…

அங்கே மேளதாளம் தட்டி வித்தை காட்டி, “இந்த பொழுதுபோக்கிற்கு கொடுப்பதை கொடுங்கள்” என்பது போல ஒரு சிறு குடும்பம் தங்கள் சம்பாத்தியத்தை நிகழ்த்தி கொண்டிருந்தார்கள். அவர்கள் மேளம் தட்டிக்  கொண்டிருக்கும் போது, இரண்டு இளைஞர்கள் அவ்வழியே வந்தார்கள் – அதில் ஒருவர் அந்த தாளத்துக்கேற்ப ஆடிக்கொண்டே வர, மற்றவர் அதனை வீடியோ எடுத்துக்கொண்டே வந்தார். சுற்றியிருந்தவர்களும் அந்த நடனத்தை கேலியாக பார்க்காமல் “யார் பற்றியும் கவலை கொள்ளாமல் சந்தோஷமா ஆடுறாரே” என்று புன்னகையோடு பார்த்ததாகவே தோன்றியது.

இரண்டு பெண்மணிகள் (ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள்  போல) இரண்டு  வண்டிகளில் (100 அடி இடைவெளியில்) சோளம் விற்று கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு பெண்மணியிடத்தில் இரண்டு  பெண் குழந்தைகள்  (மூன்று மற்றும் ஆறு வயது இருக்கும்) விளையாடி கொண்டிருந்தார்கள். இந்த குழந்தைகளை அங்கேயே விட்டு விட்டு அந்த பெண்மணி பக்கத்திலிருந்த கடைக்கு சென்றுவிட்டார்கள். அந்த குழந்தைகள் “இந்த கடற்கரை எங்க ஏரியா” என்பது போல் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தாலும்,  “இப்படி குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு போறாங்களே” என எனக்குள் ஒரு சிறு பதைபதைப்பு.

சற்று அருகில் சில கல்லூரி மாணவர்கள் கலாய்த்து கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஆறு பேரில் ஒரு பெண். அந்த பெண் ஒரு நண்பனிடத்தில் கோபித்து கொண்டு அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள். அவன் அவள் கையை பிடித்து “என்ன மச்சா, இதுக்கெல்லாம் கோவிச்சுக்கற?” என்று கேட்டது ஆண்-பெண் நட்பு வெகு இயல்பாய் வளர்ந்திருந்ததை காட்டியது.

பீச்சிலிருந்து வெளியே வந்து பிளாட்பாரத்தில் நடந்தோம். அங்கே பூ விற்கிற ஒரு பெண்மணி பூமாலை தொடுத்து கொண்டிருந்தார். ஒருவர் அந்த அம்மணியிடம் “உங்களை ஒரு போட்டோ எடுத்துக்கறேன்” என்று அனுமதி வாங்கி ஸ்மார்ட் போனில் போட்டோ எடுத்தார். ஏதும் பயண கட்டுரையில் சேர்ப்பதற்கு இருக்குமோ?!

மொத்தத்தில், வெகு நாட்களுக்கு பிறகான அன்றைய பீச் அனுபவம் எந்த இறுக்கமுமற்ற  பரந்த வெளியில் ஓடியாடியதை போல இருந்தது. வாட்ஸாப், ஃபேஸ்புக்  தாண்டிய உலகம் பற்றிய நினைவூட்டல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *