பாத்திரம் அறியும் தெளிவை நோக்கி…
கொள்கை, மனிதாபிமானம், தருமம் என சில முடிச்சுகளால் பின்னப்பட்ட விஷயம் இது. தர்க்கத்திற்கும் உணர்வுக்கும் நடுவில் சிக்கி “செய்தது சரிதானா?” என்ற குழப்பத்திலேயே வைத்திருக்கும் விஷயம்.
நடை பாதைகளில், ரயில்வே ஸ்டேஷனில், ட்ராபிக் சிக்னலில், சில சமயங்களில் வீட்டு வாசலில் – “தர்மம் செய்யுங்க”, “கை கால் முடியாதவன், கொஞ்சம் உதவி பண்ணுங்க”, “அண்ணே, இதை வாங்கிக்கங்க. பத்து ரூபாய்தான். எனக்கு படிப்புக்கு ஆகும்/சாப்பாட்டுக்கு ஆகும்”, “நீங்க பணமே தர வேணாம். சாப்பாடு வாங்கி குடுங்க”, “உங்க கார் கண்ணாடி துடைக்கிறேன், உங்க காலடியில் இருக்கும் குப்பைகளை அள்ளுகிறேன்” என வித விதமாக யாசகம் (“பிச்சை” என்ற வார்த்தை மலினபடுத்தப்பட்டதனால், “யாசகம்” சற்று மரியாதை கலந்ததாக இருக்கிறது) கேட்கிறார்கள்.
சில சமயங்களில் – “இவரை விட ஊனமானவர்கள் என்னென்னமோ சாதிக்கும் போது இவருக்கு என்ன வந்துச்சு” என முகம் திருப்பிக்கொண்டது உண்டு; ஒரு சில நேரம் “இந்த வயோதிகத்தில் இப்படி ஒரு நிலை, பாவம்” என்று பணம் கொடுத்தது உண்டு. அவ்வப்பொழுது “இந்த ஆள் பணம் கொடுத்தால் நேரா டாஸ்மாக் போவான்” என்று தீர்மானித்து நிராகரித்தது உண்டு.
சற்று ஆழமாக யோசித்தால், “அடுத்தவரை அண்டி பிழைப்பது, யாசித்து வாழ்வது என்றொரு முடிவு எடுப்பதற்கே எவ்வளவு மன தைரியம் வேண்டும்? உழைத்து பிழைக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்கள், ஆனால் வாழ்ந்தாக வேண்டும் என்ற உறுதியில் இருப்பவர்கள் “யாசகம்” தவிர வேறந்த முடிவை எடுக்க முடியும்?” என்ற கேள்விகள் பிறக்கின்றன. அதே சமயம், இதனை ஒரு தொழிலாக செய்பவர்களை (“நான் கடவுள்”, “Slum Dog Millionare” படங்களில் காட்டப்பட்டது போல), வறுமையையே முதலீடாக்கி பணம் சம்பாதிப்பவர்களை நாம் ஊக்குவிக்கக் கூடாது என்ற எண்ணமும் தொக்கி நிற்கிறது.
இப்படியாக, இதன் பொருட்டு நான் இதுவரை தெளிவான முடிவு எடுக்க முடிந்ததில்லை. இந்த விஷயத்தில் நீங்கள் எப்படி? நம் முன்னோர்கள் “பாத்திரம் அறிந்து பிச்சையிடு” என்று சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் எவ்வாறு பாத்திரம் அறிகிறீர்கள்? உங்கள் பதில்கள் எனக்கு தெளிவு தரக்கூடும்.
உங்கள் கருத்துக்களை எதிர் நோக்கி…