மனிதர்கள் பலவிதம்…

சில வருடங்களுக்கு முன்பு, சுமார் 60 வயது தொட்ட பெரியவர் தனது குடும்பத்துடன் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். ஒரு கட்டத்திற்கு பிறகு, வீடு வாடகை செலுத்தும் வேலையை அவரது மகன் செய்து வந்தார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழிந்த நிலையில் (இதற்கிடையில் வாடகை ஒரு முறை மட்டும் உயர்த்தப் பட்டிருந்தது), வீட்டின் சொந்தக்காரர் – வீட்டில் சில மாற்றங்கள் செய்யும் பொருட்டு  – காலி செய்யுமாறு கேட்டு கொண்டார். அப்பொழுது அவர் 4 மாத காலம் அவகாசம் கேட்டார். இத்தனை வருடம் வசித்தவர் என்பதை மனதில் கொண்டு, வீட்டின் சொந்தக்காரரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.
4 மாதங்கள் கடந்தன. அவரது மகன் மேலும் இரண்டு மாதம் அவகாசம் கேட்டார். தரப்பட்டது. 2 மாதங்கள் கழிந்தும் வீடு ஒப்படைக்கப்படவில்லை. இறுதியாக, உறுதியாக என மேலும் 1 மாதம் அவகாசம் கேட்டார். தரப்பட்டது. அந்த கெடுவின் முடிவில், வீட்டு சாவிக்கு பதிலாக கோர்ட்டில் (சட்டத்திற்கு புறம்பாக வெளியேற்ற முயற்சிப்பதாக) வழக்கு தாக்கல் செய்திருந்தார் மகன். நமது நீதிமன்றங்களின் வழக்கு சமுத்திரத்தில் இந்த வழக்கும் சேர்ந்து கொள்ள, மாதங்கள்  கடந்தன. ஓர் ஆண்டு காலத்தில், பெரியவர் இயற்கை எய்தினார். வீட்டின் சொந்தக்காரர் எதிர் வழக்காக RCOP தாக்கல் செய்தார். மகன் வாடகை கொடுப்பதையும் நிறுத்தி விட்டார். அதன் பின்னர் அட்வான்சும் கழிந்து, ஒரு வருட வாடகையும் பாக்கி  இருந்த நிலையில்,  மகன் வீட்டை காலி செய்தார். வாடகை பாக்கி வசூலிக்க வழக்கை தொடர்ந்து நடத்தினால் வீடு கிடைக்க மேலும் தாமதம் ஆகும் என்பதால், வீட்டு சொந்தக்காரரும் வழக்கை சுமுகமாக முடித்துக் கொண்டார்.
இப்படி, சட்டம் வாடகைதாரருக்கு கொடுத்திருக்கும் பாதுகாப்பை தவறாக பயன்படுத்தி, வீட்டுக்கு வாடகையும் தராமல் இழுத்தடித்த மகன் தன் தந்தையின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்டரில் (ஊரின் பல பகுதிகளில் ஒட்டபட்டிருந்தது) அடித்திருந்த வாசகம் சுவாரசியமானது – “… பண்பில் என்னை உயர்த்தி, வாழ்வு சிறக்க வழி காட்டி, என்னை மீளாத் துயரில்…”.
Comments
  1. 9 years ago

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!