மெய்நிகர் பயணம்
ஒருவரை நேரில் பார்க்காமலே அவருடன் பயணிக்க முடியுமா? இங்கு கோடிக்கணக்கான பேருக்கு அது சாத்தியமாகிறதே? சமீபத்தில் யூட்யூபில் (youtube) வெளியான “#RounduKatti with Superstar Rajinikanth fans” வீடியோ பார்த்தபின், அந்த கோடிக்கணக்கில் ஒருவனான என்னுள் இந்த கேள்விகள்தான் ஓடின. ‘தலைவர்’ ரஜினியுடனான எனது மெய்நிகர் பயணத்தின் (virtual journey) சில பக்கங்கள் இந்த பதிவில்.
ரஜினி எனும் மந்திர சக்தி
ஸ்டைலான தலைமுடியும், பைக்கில் பாய்ந்து பாய்ந்து செல்லும் அதிரடியுமாகத்தான் ரஜினி எனக்கு அறிமுகமானார். இந்த பிம்பங்களுடன் ரயில்வே ‘கேட்’டும் நினைவில் இருக்கிறது. பிற்பாடு, அது “புதுக்கவிதை” படம் என தெரிந்து கொண்டேன். அந்த படம் வந்தபோது எனக்கு 5 வயது. அன்று மனதுக்குள் வந்தவர் நிரந்தரமாக தங்கிவிட்டார்.
என் அப்பாவும் அம்மாவும் சினிமாக்களை விரும்பி பார்ப்பார்கள். மற்றபடி குறிப்பிட்ட எந்த நடிகர், நடிகைக்கும் தீவிர ரசிகர்கள் என சொல்ல முடியாது. என்றாலும், எனக்கு ரஜினி பிடிக்கும் என்று தெரிந்தபின், பெரும்பாலான ரஜினி படங்களுக்கு அப்பா என்னை அழைத்து சென்றிருக்கிறார்.
நான் திருநெல்வேலியில் நான்காம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அப்பொழுதெல்லாம் திரைப்படத்திற்கு விளம்பரமாக ஊரிலுள்ள சுவர்களில் விதவிதமாய் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கும். அது போக, சுவரொட்டிகளை பெரிய தள்ளு வண்டியில் ஒட்டி, மைக்கில் அறிவித்து கொண்டே நகரின் முக்கிய தெருக்களில் அந்த வண்டியை தள்ளி செல்வார்கள். அப்படி ஒருநாள், ரஜினியின் “வேலைக்காரன்” படத்திற்கு “நாளை கடைசி” என்று அறிவித்து கொண்டு சென்றார்கள் (அதாவது, அடுத்த நாளுடன் அந்த படம் தியேட்டரில் இருந்து போய்விடும்). அப்பொழுது எனக்கு பள்ளியில் இறுதியாண்டு தேர்வு நடைபெற்று கொண்டிருந்தது. படத்தின் கடைசி நாளுக்கு அடுத்த நாள் எனக்கு கணக்கு பரீட்சை. படம் பார்க்க வேண்டும் என அழுதேனா, அடம் பிடித்தேனா என்று நினைவில்லை. என் அம்மா “நாளை பரீட்சை முடிந்து வந்தவுடன், மதியம் கணக்கு பரீட்சைக்கான தயாரிப்பை முடித்துவிட்டால் மாலை காட்சிக்கு அழைத்து செல்கிறேன்” என்று (அப்பாவின் சம்மதத்தோடு) சொன்னார்கள். சொன்னபடி நானும் செய்தேன். என் அம்மாவும் தன் வாக்குறுதியை நிறைவேற்றினார்கள். படத்தின் இடைவேளையில் நொறுக்கு தீனி வாங்க சென்ற பொழுது, என் ஆசிரியைகளில் ஒருவரை பார்த்துவிட்டு தலைதெறிக்க ஓடிவந்து இருக்கையில் அமர்ந்தது தனி சுவாரஸ்யம்.
அந்த காலகட்டத்தில், போட்டோ ஸ்டுடியோக்களில் பின்னணி திரையில் ஏதேனும் படம் வரைந்திருக்கும். அதன்முன் படம் எடுத்து கொள்வார்கள். அப்படி ஒரு ஸ்டுடியோவில் “ரஜினி”யுடன் நானும் என் தங்கையும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இங்கே. ரஜினியுடன் நான் எடுத்துக்கொண்ட ஒரே புகைப்படம் இதுதான் 🙂
80 மற்றும் 90களில் பொங்கல் பண்டிகைக்கு தபால் அட்டை (postcard) அளவிலுள்ள வாழ்த்து அட்டைகள் அனுப்பிக்கொள்வது வழக்கம். அப்படி எனக்கு வந்த ரஜினி படம் போட்ட அட்டைகளை இன்னும் வைத்திருக்கிறேன். இந்த பதிவுக்காக அவற்றை தேடி எடுத்து ஒரு புகைப்படத்தில் அடைத்தேன். இந்த தேடலும், அட்டைகளை அடுக்கிவைத்து புகைப்படம் எடுத்த செயலும் உள்ளே இருக்கும் சிறுவனை வெளிக்கொண்டு வந்தன என்றே சொல்லலாம்.
ரஜினியின் “சிவா” படம் வந்த சமயத்தில், பொங்கல் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பொழுது “டைகர் சிவா” என்று கையெழுத்திட்டு அனுப்புவேன் 🙂 [அந்த படத்தில் ரஜினியின் பெயர் “டைகர் சிவா”].
திருச்சியில் நான் ஒன்பதாம் வகுப்பு படித்த சமயத்தில் “தளபதி” படம் வெளிவந்தது. தியேட்டரில் பெரும் வரிசை காரணமாக டிக்கெட் கிடைக்கவில்லை. அப்பொழுது பெண்களுக்கு டிக்கெட் கொடுக்க தனி வரிசை வைத்திருந்தார்கள். அங்கு வரிசையில் நின்றிருந்த ஒருவரிடம் “அக்கா, ஒரே ஒரு டிக்கெட் வாங்கி கொடுங்க” என்று கெஞ்சலாய் கேட்டு 3 ருபாய் டிக்கெட் வாங்கி, திரைக்கு அருகில் முன்வரிசையில் அமர்ந்து “சூர்யா”வை அண்ணாந்து பார்த்தது ஒருவித பரவசம்தான்.
ரஜினி எனும் ஊக்க சக்தி
திரை வசீகரத்தை தாண்டி, ரஜினியை என்னுள் ஆழமான ஆளுமையாய் பதித்த விஷயங்கள் இரண்டு –
1. பொதுவெளியில் இமேஜ் என்று வைத்துக்கொள்ளாததும், வெளிப்படையான பேச்சுகளும் (அப்போது ஒரு பேட்டியில் சிகரெட் மற்றும் மது பழக்கம் பற்றி ஒளிவு மறைவின்றி பேசினார்)
2. 1993ல் ரஜினி எழுதி, தயாரித்த “வள்ளி” படத்தின் அரசியல் வசனங்களும், அச்சமயத்தில் ஆனந்த விகடனுக்கு கொடுத்த பேட்டியில் இருந்த அவரது அரசியல் சார்ந்த கருத்துகளும்
இந்த காரணங்களால், ரஜினியை வெள்ளித்திரையை தாண்டிய தலைவராய் ஏற்பதில் எனக்கு எந்த சிக்கலும் இருக்கவில்லை. 1995ல் தூர்தர்ஷனில் வந்த “ரசிகர் கேள்வி – ரஜினி பதில்” நிகழ்ச்சி அவருடனான நெருக்கத்தை இன்னும் அதிகரித்தது. ரஜினியின் அரசியல் “வாய்ஸ்” முதன்முதலில் கேட்ட 1996 சட்டமன்ற தேர்தல்தான் நான் வாக்களிக்க தகுதிபெற்று வாக்களித்த முதல் தேர்தலும் கூட.
1996 தேர்தலுக்கு பின் ஆனந்த விகடனில் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு கடித போட்டி வைத்தார்கள். அதன்படி, மனதில் பட்டதை ரஜினிக்கு கடிதமாக எழுதலாம்; தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்திற்கு பரிசு உண்டு. நான், “உங்கள் ரசிகர்களை மற்ற கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்கு உபயோகப்படுத்த பார்க்கிறார்கள்” என்பதை முக்கிய பொருளாக வைத்து அவருக்கு எழுதியிருந்த கடிதம் விகடனில் பிரசுரிக்கப்பட்டது. இந்த கருத்தை மே 2017 ரசிகர் சந்திப்பில் ரஜினியே சொன்னபோது உள்ளூர சிறுமகிழ்ச்சி மட்டுமல்ல, அவரது நிதானத்தின் அர்த்தமும் புரிந்தது. [குறிப்பு: அந்த விகடன் பிரதியை தொலைத்துவிட்ட வருத்தம் இன்றும் உண்டு].
ரஜினி கன்னடர், மராட்டியர் என்று திணிக்கப்பட்ட எந்த பிம்பமும் என் மனதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை. 2002ல் காவிரி பிரச்சினை சமயத்தில், அவர் “இங்கே இருக்கறவங்க நான் கன்னடன்னு சொல்றாங்க, கர்நாடகா போனா நான் மராட்டியன்னு சொல்றாங்க. நான் எங்கேதான்யா போவேன்?” என்று பேசக்கேட்ட பொழுது வருத்தமும், தமிழுணர்வு நெருப்பை பற்றவைத்து குளிர்காய நினைத்த “இமயங்களின்” மீது பெருங்கோபமும் வந்தது. அச்சமயம், 9 மணி நேரம் மேடையை விட்டு அகலாமல் ரஜினி மேற்கொண்ட (உண்மையான) உண்ணாவிரத போராட்டம் அவர் மீதான மரியாதையை அதிகரித்தது.
இது போன்று இன்னும் நிறைய சொல்லலாம். எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது போல, இந்த 68 வயதிலும் தனது துறையில் உச்சத்தை தக்கவைக்கும் உழைப்பும், மற்றுமொரு (சிக்கல்களும் சவால்களும் நிறைந்த அரசியல்) துறைக்கு தயார்படுத்திக்கொள்ளும் தீர்க்கமும் ரஜினி மீதான பிரம்மிப்பையும் பிடிப்பையும் இன்னும் ஆழமாக்குகின்றன.
முடிவாக…
ரஜினியுடனான இந்த பயணம் ஆத்மார்த்தமானது. அவரது முன்னுதாரண வெற்றிகளும், அவர் மீதான அபிமானமும் வாழ்வின் எந்த கட்டத்திலும் ஒரு நேர்மறை உந்துசக்தியாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. “ரஜினி ரசிகன்” என்றிருப்பதும் ஒரு பாக்கியம்தான். திரைப்பட ரசிகர்கள் எல்லோருக்கும் அந்த பாக்கியம் வாய்த்துவிடுவதில்லை 🙂
பதிவு முற்றும்.
பயணம் தொடரும்.
super machi. nice photo with thalaivar. stay positive. you might as well get a chance to take a real photo with him!!
its great to see you were able to recollect so much in your virtual travel. nice write up. clap clap
தலைவரின் பழைய நினைவுகள் என்றுமே சுகமானவை தான்.
உங்க சகோதரியுடன் எடுத்த படம் ரொம்ப நல்லா இருக்கு. விகடன் பிரதி தொலைந்தது எவ்வளவு வருத்தமாக இருக்கும் என்று ஒரு ஒரு ரசிகனாக உணர முடிகிறது.
அப்போது நமக்கு அதன் முக்கியத்துவம் தெரியாது பின்னர் தெரிய வரும் போது அது போல திரும்ப கிடைக்காது என்பதை உணரும் போது வருத்தமாகும்.
டைகர் சிவா செம.. எப்போதுமே நம்முடைய விருப்ப நடிகர் பெயரில் படமோ, கதாப்பாத்திரத்தின் பெயரோ வரும் போது தனி மகிழ்ச்சி தான்.
தலைவருக்கு ரசிகனாக இருப்பது அவ்வளவு எளிதில்லை (மற்றவர்களின் பல கேள்விகள் காரணமாக).. 🙂 ஆனால் அதையும் தாண்டி ரசிகனாக இருப்பது ஒரு கெத்து தான்.
இவையெல்லாவற்றையும் விட.. ஒரு நல்ல மனிதனுக்கு ரசிகனாக இருக்கிறோம் என்ற பெருமை.. அது ரஜினி ரசிகனால் மட்டுமே உணர முடியும்.