2019 “போர்” அலசல்

நாம் அனைவரும் எதிர்பார்த்திருந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் “போர்” முடிவுகள் வெளிவந்து, புதிய மந்திரிசபை பதவி ஏற்பு விழாவும் முடிந்தாயிற்று. எண்கள் அடிப்படையில் சற்றே வேறுபட்டிருந்தாலும் 2014ன் முடிவே இப்பொழுதும். தொடர்ந்து இரண்டாம் முறையாக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்.

தேர்தல் முடிவுகள் குறித்து எனது பார்வை –

பாஜகவின் தேசிய வெற்றி

மோடியின் கடந்த 2014-19 ஆட்சியில் குறைகள் இருந்தன. அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த “நடுநிலை” வாக்காளர்களும் அவரது ஆட்சியின் சில செயல்பாடுகளில் (அல்லது) சிலவற்றில் செயல்படாத தன்மை குறித்து அதிருப்தி கொண்டனர். என்றாலும், அவரது ஆட்சியில் மக்களுக்கும் நாட்டுக்கும் பயனளிக்க கூடிய திட்டங்களும் செயல்பாடுகளும் இருந்தன என்பதும் உண்மை. இந்த உண்மையை கடந்து “மோடி படுமோசமான ஆட்சி தந்தார்” என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டுமெனில், மோடியின் எதிர்ப்பாளர்கள் கடும் களப்பணி செய்திருக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகளும், சமூக வலைத்தள எதிர்ப்பாளர்களும், பெரும்பாலான ஊடகங்களும் “வெளிநாட்டு பயணி”, “போட்டோஷாப் பிரதமர்”, “சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறார்” (பல வாக்காளர்கள் இதை நல்ல விஷயமாகவே பார்த்திருப்பார்கள்), “பத்திரிக்கையாளர்களை சந்திக்க பயப்படுகிறார்” என்று மேம்போக்கான குறைகளிலும், அதிகம் வலுவில்லாத ரஃபேல் ஊழல் திணிப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தனர். இது போக,  “இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது” என்பன போன்ற மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் வாக்காளர்களுக்கே அயர்ச்சி ஏற்படுத்தியிருக்கும். இவை போதாதென்று, எதிர்க்கட்சிகள் மோடியை வீழ்த்துவதில் பெயரளவில் கூட ஒற்றுமை காட்டவில்லை. மொத்தத்தில், 543 இடங்களில் பாஜக மட்டுமே 303 என்ற “அம்மோடியோவ்” வெற்றியை மோடி பெற்றார்.

பாஜகவின் தமிழ்நாட்டு தோல்வி

மேலே சொன்ன தேசிய அளவிலான சாதகங்கள் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஏன் வேலை செய்யவில்லை? தமிழகத்தில் நீட், ஹைட்ரோகார்பன், மீத்தேன், எட்டுவழி சாலை என மத்திய அரசு கொண்டு வந்த எல்லா திட்டங்களுக்கும் இங்கே பெரும் எதிர்ப்பு இருந்தது. எதிர்ப்பு இருந்ததற்காக திட்டங்கள் கைவிடப்பட வேண்டும் என்றில்லை. ஆனால், எதிர்ப்புக்கு செவிசாய்த்து மக்களுக்கு ஏற்பட்ட (அல்லது புகுத்தப்பட்ட) அச்சங்களை களைந்து, நியாயமான கோரிக்கைகளை கவனித்திருக்க வேண்டும். அப்படியில்லாமல், மோடியும், தமிழக பாஜக தலைவர்களும் அலட்சியமாக இருந்ததன் விளைவே இந்த பெருந்தோல்விக்கான அடிப்படை காரணம்.

கடந்த கால உதாரணம் ஒன்றை பார்ப்போம்: 2009-2014 மன்மோகன் சிங் ஆட்சியில், கூடன்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்வதற்கு பெரும் எதிர்ப்பு இருந்தது. கடலில் குதித்தெல்லாம் போராட்டம் நடத்தினார்கள். அதன் விளைவாக அப்பகுதி மக்கள் மனதில் நிறைய அச்சங்கள் எழுந்தன. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அணுமின் நிலையத்தை பார்வையிட்டு “பாதுகாப்பு அம்சங்கள் உறுதிப்படுத்தபட்டு இருக்கின்றன” என்றார்.  பிரதமர் மன்மோகன் சிங் தனது கருத்துகளை வெளியிட்டார். மத்திய, மாநில அரசுகள் இணைந்து வல்லுநர்களை கொண்ட ஒரு குழு அமைத்தன. அந்த குழுவின் அறிக்கையை ஆதாரமாக வைத்து, அன்றைய முதல்வர் ஜெயலலிதா (காங்கிரஸ் கூட்டணியில் இல்லாவிட்டாலும்) திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு கொடுத்தார். இவ்வாறாக, அன்றைய மத்திய, மாநில அரசுகள் தங்கள் தரப்பு வாதத்தையும், (திட்டத்தை செயல்படுத்தும்) முனைப்பையும் தெளிவாக வெளிக்காட்டினார்கள். அத்தகைய செயல்களை மேற்சொன்ன நீட், மீத்தேன் போன்ற விஷயங்களில் நாம் காணவில்லை. இத்தகைய செயலற்ற தன்மையை இங்குள்ள எதிர்க்கட்சிகள் நன்றாகவே பயன்படுத்திக்கொண்டன (அதில் பெரிதாக தவறு காண முடியாது).

மோடியை ஆதரிக்கும் மாரிதாஸ் போன்றவர்களும் மற்றும் சில பத்திரிக்கைகளும், மோடியின் ஆட்சியில் இருந்த நன்மைகளை வெளிப்படுத்த எடுத்த முயற்சிகளில் 10% கூட தமிழக பாஜக தலைவர்கள் எடுக்கவில்லை என்பதே உண்மை. மத்தியில் பாஜக ஆட்சி என்பது இங்கே கட்சியை நன்கு வளர்ப்பதற்கான பொறுப்பு என்று பார்க்காமல், வெறும் பெருமையாக எண்ணி வலம் வந்துகொண்டிருந்தனர். போதாதற்கு சர்ச்சை பேச்சுகள் வேறு. அதற்குதான் இந்த சம்மட்டி அடி.

திமுகவின் வெற்றியும் தோல்வியும்

மேலே சொன்ன பாஜக மற்றும் மோடியின் குறைகளால், தமிழ்நாட்டில் பாஜக இருந்த அதிமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது என்று சொல்லலாம். ஆனாலும், அத்தோல்வி படுதோல்வி ஆவதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் வியூகத்தில் இருந்த நான்கு அம்சங்களே காரணம். அவை –

  1. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று முன்னிறுத்தியது. இதனால் தமிழக வாக்காளர்கள் “யார் பிரதமராக வேண்டும்” என்பதில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க முடிந்தது. 
  2. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் காட்டிய தாராளம். இது கலைஞர் பாணி என்றாலும், கலைஞர் கூட இவ்வளவு தொகுதிகள் விட்டுக்கொடுத்திருப்பாரா என்பது சந்தேகமே. இந்த தாராள மனப்பான்மையின் விளைவாக கூட்டணி கட்சியினர் திருப்தியுடன் உழைத்திருப்பார்கள்.
  3. “தேமுதிக இழுபறி” நிகழ்ந்த சமயம் ஓரளவிற்கு மேல் காத்திராமல், வளைந்து கொடுக்காமல், அடுத்த கட்ட தேர்தல் வேலைகளை துரிதப்படுத்தியது.
  4. பிரச்சார முறைகளில் சிற்சில புதுமைகளை புகுத்தியது (உதாரணமாக, காலை வேளைகளில் நடைபயிற்சியோடு வாக்கு சேகரிப்பு; மக்களோடு மக்களாக செல்ஃபி).

மேற்சொன்ன உத்திகள், ஸ்டாலினின் பிரச்சாரத்தில் இருந்த குறைகளையும் விழுங்கி விட்டன என்றே சொல்ல வேண்டும். ஆக, ஸ்டாலின் ஸ்டாலின் ஆகிவிட்டார். பலமான கட்சியின் தலைவர் என்ற நிலையிலிருந்து, பலமான தலைவர் என்ற நிலைக்கு இந்த 37-1 வெற்றியின் மூலம் தன்னை உயர்த்திக்கொண்டு விட்டார்.

இந்த நிலையில், “தமிழக அரசியல் வெற்றிடம் நிரப்பப்பட்டு விட்டதா?”, “அடுத்து திமுக ஆட்சிதானா, (குறிப்பாக, ரஜினியின்) மாற்று அரசியல் எடுபடாமல் போய்விடுமா?” போன்ற கேள்விகள் எழுவது இயல்புதான். அத்தகைய கேள்விகளுக்கு “அப்படியெல்லாம் இல்லை. வலுவான தலைமை கொண்ட ஒரு மாற்று அரசியலுக்கு இன்னமும் வாய்ப்பு இருக்கிறது” என்ற விடையை தமிழக சட்டமன்ற (22 தொகுதிகளின்) இடைத்தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

22 தொகுதிகள் என்பது மொத்த தொகுதிகளில் கிட்டத்தட்ட 10%. அத்தனை தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி மாறும் என்பது அனைத்து வாக்காளர்களுக்கும் தெரியும். ஸ்டாலினும் அதனை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தார். இருப்பினும், 13-9 என்ற அளவில்தான் திமுக வென்றது. வென்றாலும் ஆட்சியை மாற்ற முடியாத திமுகவின் இந்த “தோல்வியில்” கவனிக்க வேண்டிய இரண்டு அம்சங்கள் –

  1. இந்த 13லும் 3 தொகுதிகளின் (ஆண்டிபட்டி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம்) வெற்றி, அதிமுகவின் வாக்குகளில் அ.ம.மு.க பெரும் சேதாரம் ஏற்படுத்தியதால் கிடைத்தவை. ஒருவேளை அ.ம.மு.க (அதிமுகவிற்கு) ஏற்படுத்திய சேதாரம் மற்ற பெரும்பாலான தொகுதிகள் அளவே (5.5%) இருந்திருந்தால், இந்த முடிவு 10-12 என மாறி அதிமுகவிற்கு வெற்றியாகி இருக்கும்.
  2. நாடாளுமன்றத்திற்கு திமுக கூட்டணிக்கு வாக்களித்த அதே வாக்காளர்கள், சட்டமன்றத்தில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்திருக்கிறார்கள். உதாரணமாக, தருமபுரி மக்களவை தொகுதியில்தான் இடைத்தேர்தல்கள் நடந்த அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த இரண்டு தொகுதிகளின் வாக்காளர்கள் மக்களவைக்கு திமுக, சட்டமன்றத்திற்கு அதிமுக என்று தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள் என்று வாக்கு எண்ணிக்கை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வகையில், அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுகதான் வாக்காளர்களின் இயல்பான தேர்வு என்று சொல்வதற்கில்லை. எனவே, “மாற்று அரசியல்” விரும்புவோர், அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை நம்பிக்கையோடு எதிர்நோக்கலாம்.

Comments
  1. 5 years ago

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!