எதிர்பாராத விடை பெறுதல்…

கலைஞரின் முதலிரண்டு ஆட்சிகளைப்  பற்றியோ, எம்.ஜி.ஆரின் ஆட்சி பற்றியோ எனது முந்தைய தலைமுறையினர் சொல்லித்தான் தெரியும்.   ஆனால் நான் விவரமறிந்து பார்த்த என் காலத்து அரசியல் ஆளுமை என ஜெயலலிதா அவர்களை சொல்லலாம். 1996 ல் “பொம்பளை கிட்ட ஆட்சியை குடுத்தா இப்படித்தான்” என்று இருந்த விமர்சனங்களை, 2011 ல் “அந்த அம்மா வந்தா தேவலை, ஒரு விடிவு காலம் பிறக்கும்” என்று விருப்பங்களாய் மாற்றிய பயணம் (அதில் அவரது அரசியல் எதிரிகளுக்கும் பங்கு உண்டு என்றாலும்) அவரது மகத்தான சாதனையின் இரட்டை வரி சுருக்கம்.

அவரது 91-96 ஆட்சியின் எதிர்மறை நினைவுகள், 98ல் மத்திய அரசாங்க கவிழ்ப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில் சற்றே தொய்வாகி போன நிர்வாகம்,  இன்னும் சில தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி இருக்கலாம் என்ற குறை – இவற்றைக் கடந்து, அவரது நேர்மறை பங்களிப்பு என (ஒரு வாக்காளனாய், குடிமகனாய்  எனக்குள்) பதிந்து போன சிலவற்றை அவரது நினைவிற்கு சமர்ப்பணமாய் பதிவிடுகிறேன்.

 • ஜனநாயகம் என்ற பெயரில் உரிமைகளை மட்டும் எதிர்பார்க்கும் சமூகத்தில், கொஞ்சம் சர்வாதிகாரம் இருந்தால்தான் ஜனநாயகத்தையே காக்க முடியும் என்பதற்கு அடையாளமாய் அரசாங்க எந்திரத்தின் மெத்தன போக்கை அதன் ஆணி வேரில் அசைத்து பார்த்த எஸ்மா – Essential Services Maintenance Act (இதனை அவரை மறுபரிசீலனை செய்ய வைத்தது தமிழக வாக்காளர்களின் முதிர்ச்சியின்மை என்று சொல்லலாம்)
 • தமிழகத்தின் தேவைகளை டெல்லியில் ஆணித்தரமாய் எடுத்து வைத்த பாங்கு (ஆங்கில நாவன்மை – முக்கிய பலம்)
 • கட்டாயப்படுத்தபட்ட மழை நீர் சேகரிப்பு திட்டம்
 • புதிய வீராணம் திட்டம்
 • அசராத சட்ட போராட்டம் (காவிரி, முல்லை பெரியாறு)
 • தீவிரவாதம் மற்றும் ரௌடித்தனம் – இவற்றை ஒடுக்குவதில் “வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு” அணுகுமுறை; காவல்துறையை மரியாதைக்குரிய துறையாக வைத்திருந்த விதம்
 • குறிப்பிடத்தக்க சமூக நல திட்டங்கள் (படிக்கும் பெண்களுக்கு சைக்கிள், மாணவர்களுக்கு லேப்டாப் போன்றவை)
 • தன் கவனத்திற்கு வந்த, தன் பார்வைக்கு தப்பென்று உணர்ந்தவற்றை செய்தவர்களை (அமைச்சரோ, வட்ட செயலாளரோ, அதிகாரிகளோ) தடாலடியாக நடவடிக்கை எடுத்த செயல்கள்
 • தைரியமான நிர்வாக முடிவுகள் (2011ல் செயல்படுத்தப்பட்ட கட்டண உயர்வுகள்)
 • மதசார்பின்மை என்ற பெயரில் தன் மத நம்பிக்கைகளை மறைத்து வைக்காத தன்மை
 • மோடி அலை அடித்த போதும் “மோடியா, இந்த லேடியா” என்று கேட்டு, “நாற்பதும் நமதே” என சொல்லி (கிட்டத்தட்ட) அடித்த அரசியல் ஹீரோயிசம்

பொதுவாக தமிழ் நாட்டில் அரசியல் அரட்டைகள் அதிகம். அவற்றில் பேசப்படும் விஷயங்களில் ஒன்று – “ஜெயலலிதாவிற்கு பிறகான அ.தி.மு.க. எப்படி இருக்கும்? அவருக்கு பிறகான  தமிழக அரசியல் களம் எப்படி இருக்கும்?” என்பது. அது இவ்வளவு சீக்கிரம் நிகழும் என்று யாரும் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.  அவரது ஆளுமைக்கு சற்றும் மாற்று இல்லாத நிலையில், திடீரென்று இறுதி காட்சிக்கு வரும் ஒரு திரைப்படத்தை போல.. எதிர்பாராத இந்த விடை பெறுதல் கொடுத்த வருத்தத்துடன்..

விடை தருகிறோம் “அம்மா”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!