இந்தி திணிப்பு?/இணைப்பு?

சில நாட்களுக்கு முன்பு “இந்தி திணிப்பு” பற்றி ட்விட்டரில் நிறைய விவாதங்கள். என் கருத்துக்களை (சில வரலாற்று குறிப்புகளோடு) தொகுக்கலாம் என்றே இந்த பதிவு. அது போக, அடுத்த முறை அத்திவரதர் தரிசனம் நிகழும்போதும் இதே “இந்தி திணிப்பு, எதிர்ப்பு” என்ற நிலை இருக்கும் என்று எண்ணுவதால், இப்பதிவு தலைமுறைகள் தாண்டி நிற்கக்கூடும் 🙂

இது சற்று பெரிய பதிவு என்ற முன்னெச்சரிக்கை தருகிறேன் 🙂 . சில நிமிடங்களுக்கு “இந்தி திணிப்பு” குறித்த உங்கள் பார்வையை ஒதுக்கிவிட்டு, திறந்த மனதுடன் படிக்கவும்.

யாமறிந்த மொழிகள்

முதலில் மொழிகளைப் பற்றிய சில விஷயங்கள், நம் நினைவுக்கு.

நம் தமிழ்நாட்டில் பெரும்பாலோர் பேசும் தமிழ் போக “திராவிட மொழிகள்” என்று சொல்லப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகளை பேசும் மக்களும் ஓரளவிற்கு இருக்கிறார்கள். ஆதியில் தமிழ் மட்டுமே பேசும் மக்களை கொண்ட இந்த தமிழ்நாட்டு நிலப்பரப்பில், பிறமொழி பேசும் மன்னர்களின் (களப்பிரர், பல்லவர், நாயக்கர், மராத்தியர், நவாபுகள்) ஆட்சிகள் வந்ததால் பிறமொழி பேசும் மக்களும் குடியேறினர். பின்னர் ஆங்கிலேயர்கள் இந்தியா முழுமைக்கும் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய பிறகு, நம் மூதாதையருக்கு ஆங்கிலம் அறிமுகமானது.

இந்த இடத்தில் சமஸ்கிருதம் பற்றிய ஒரு குறிப்பு. சமஸ்கிருதம் பேச்சு மொழியல்ல. இந்து மதத்தை ஏற்பவர்கள் சமஸ்கிருதம் வேதத்திலிருந்து உருவான மொழி என்றும், அதுவும் தமிழை போலவே பழமையான மொழி என்றும் கருதுகின்றனர். சிலர், அதனை “வேத மொழி” என்றும் கூறுவதுண்டு. இந்து மதத்திலுள்ள தர்ம சாஸ்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு உள்ளன. இந்து மதத்தை ஏற்காதவர்கள் சமஸ்கிருதம் ஐரோப்பாவிலிருந்து வட இந்தியா வழியே இறக்குமதி செய்யப்பட்ட மொழி என்று கருதுகின்றனர். இந்து மதத்தை ஏற்றவர்களிலும் சிலர், சமஸ்கிருதம் வட இந்தியாவிலிருந்து இங்கு வந்த மொழி (“வட மொழி” என்றும் சொல்லப்படுவது உண்டு) என்று சொல்கிறார்கள். இவற்றில் உங்கள் விருப்பத்திற்கேற்ப சமஸ்கிருதத்தைப் பற்றிய பார்வையை வைத்துக்கொள்ளலாம்.

இந்தி (ஹிந்தி) மொழி சமஸ்கிருதத்தின் வரிவடிவத்தை (லிபி/Script) அடிப்படையாக பெற்ற எழுத்து மற்றும் பேச்சு மொழி.  ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலம் இந்தியா முழுமைக்கும் பொது மொழி போன்ற தோற்றத்துடன் இருந்தாலும், ஆங்கிலம் அனைவரும் எளிதாக கற்று பேசும் மொழியாக இல்லை. ஆயிரம் சொன்னாலும் அது அந்நிய மொழி என்ற உணர்வும் இருந்தது. இத்தகைய நிலையில், சுதந்திர போராட்டத்திற்கு பல்வேறு மொழிகளை பேசும் இந்திய மக்களை பொது (ஆங்கிலம் அல்லாத) மொழியின் மூலம் இணைத்து தேசிய ஒருமைப்பாடை தீவிரப்படுத்த வேண்டும் என அன்றைய காங்கிரசின் முக்கிய தலைவர்கள் – திலகர் (மராத்தியை தாய்மொழியாக கொண்டவர்), காந்தி (குஜராத்தியை தாய்மொழியாக கொண்டவர்), ராஜாஜி (தமிழை தாய்மொழியாக கொண்டவர்) – கருதினார்கள். அவர்கள் பரிந்துரைத்த பொது மொழி – இந்தி. இந்தியை கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்காக கொண்டுவர விரும்பினார்களே அன்றி, பிராந்திய மொழிகளை அழிக்கும் நோக்கில் அல்ல.

காந்தி தலைமையில் தென்னிந்தியாவில் இந்தியை பரப்புவதற்கு “தென்னிந்திய ஹிந்தி பிரச்சார சபா” 1918ல் சென்னையில் நிறுவப்பட்டது. இந்தி கல்வியை அளிக்கும் அரசு சாரா நிறுவனமாக அது இயங்கியது. (குறிப்பு: இந்தியாவின் சுதந்திரத்திற்குப்பின் தென்னிந்திய ஹிந்தி பிரச்சார சபாவிற்கு அரசு அங்கீகாரம் கிடைத்தது). ஆங்காங்கே சில எதிர்ப்புகள் இருந்தாலும், ஹிந்தி பிரச்சார சபாவின் செயல்பாட்டை முடக்கும் அளவிற்கு போராட்டங்கள் இல்லாததால் தமிழ்நாட்டில் ஓரளவேனும் இந்தி பரவியது.

இன்றைய இந்தியாவில், இந்தியின் சிறப்பம்சம் அது பரந்துபட்ட (widespread) மொழியாக இருப்பதுதான். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியை முதல் மொழியாக பேசும் மக்கள் 3%க்கும் குறைவாக இருப்பது ஏழு மாநிலங்களில் மட்டுமே. [மேலே/Top]

கல்வியிலும் ஆட்சி நிர்வாகத்திலும் மொழி

இந்தி திணிப்பு பற்றி பேசுவதற்கு முன், சில வரையறைகளை தெரிந்து கொள்வது அவசியம்.

கல்வி ரீதியில் ஒரு மொழி, மொழிப் பாடமாக (Language Subject) மட்டும் இருக்கலாம். இல்லையேல், ஒரு படி மேலே சென்று, பயிற்று மொழியாகவும் (Medium of Instructions/Teaching ) இருக்கலாம். உதாரணமாக, தமிழ்வழிக் கல்வி (Tamil Medium) உள்ள பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடம் மட்டுமல்ல, அதுவே பயிற்று மொழியும். ஆங்கிலேயர் நம் நாட்டிற்கு வந்த பின், ஆங்கிலம் பல பள்ளிகளில் மொழிப் பாடமாகவும் பயிற்று மொழியாகவும் ஆனது.

ஆட்சி நிர்வாக ரீதியில் அரசின் “ஆட்சி மொழி” (Official Language) என்று ஒரு மொழி ஏற்கப்பட்டால், அரசின் ஆவணங்கள், அன்றாட கருத்து பரிமாற்றங்கள், தகவல் தொடர்புகள் அம்மொழியிலேயே இருக்க வேண்டும். ஆட்சி மொழியை “அலுவல் மொழி” என்றும் சொல்வது உண்டு.

இந்தியா சுதந்திரம் பெற்றபின் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின்படி (Constitution), மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தி இருக்கும் என்றானது. இந்தியோடு 13 பிரதேச மொழிகள் (தமிழ் உட்பட) அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டன (2019 நிலவரப்படி, 22 மொழிகள் இந்த அட்டவணையில் இருக்கின்றன). அதாவது, 8வது அட்டவணையில் உள்ள மொழிகளில் ஒன்றை மாநிலங்கள் தங்கள் ஆட்சி மொழியாக வைத்துக்கொள்ளலாம். ஆங்கிலம் ஆட்சி மொழி என அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், அது இணை மொழியாக நிர்வாக ரீதியிலான பயன்பாட்டில் இருக்கலாம் என்றானது. மத்திய-மாநில அரசுகளின் தகவல் தொடர்புகளுக்கு ஆங்கிலமோ இந்தியோ (மாநிலத்திற்கு ஏற்றவாறு) பயன்படுத்தலாம்.  மொத்தத்தில், 1950களில் மத்திய அரசுக்கு இந்தி மற்றும் ஆங்கிலம், தமிழக மாநில அரசுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் என ஆட்சி (அலுவல்) மொழிகளாக அமைந்தன.

வரலாற்று ரீதியில் இங்கே (தமிழ்நாட்டில்) நடந்த மொழி சார்ந்த போராட்டங்கள் இருவகைப்படும்.

  • கல்வியில் – மொழிப் பாடமாக – இந்தியை எதிர்த்தது
  • ஆட்சி நிர்வாகத்தில் – மாநில ஆட்சி மொழியாக – இந்தியை எதிர்த்தது

இந்த இரண்டையும் சரிவர புரிந்துகொள்ளவில்லையெனில், இந்தியை கண்மூடித்தனமாக எதிர்க்கும் நிலைக்கே தள்ளப்படுவோம். [மேலே/Top]

கல்வியில் இந்தி திணிப்பும் எதிர்ப்பும்

பிரிட்டிஷ் இந்தியாவில் 1937ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்தது. அந்த அரசு கல்வியில் மும்மொழிக் கொள்கையை கொண்டு வந்தது. அதாவது, தமிழ் மற்றும் ஆங்கிலம் போக இந்தியும் கட்டாய “மொழிப் பாடம்” (Hindi as a Language Subject) ஆக இருக்க வேண்டும் என்பதே அன்றைய “மும்மொழிக் கொள்கை”. இப்படி “கட்டாயம்” என்ற நிலை உள்புகுந்ததால் இம்முயற்சி “இந்தி திணிப்பு” எனப்பட்டது.

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழறிஞர்கள் (மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதி, கி.ஆ.பெ. விஸ்வநாதம் போன்றோர்) , பெரியார் தலைமையில் திராவிட அரசியல்வாதிகள் போராட்டங்கள் நடத்தி சிறை சென்றனர். தமிழறிஞர்களின் பார்வை “இந்தி ஆதிக்கத்தால் தமிழ் முடக்கப்படும் அல்லது காலப்போக்கில் அழியும்” என்பதாக இருந்தது. பெரியாரின் பார்வையில் திராவிட அரசியலின் அடிப்படை தத்துவமான “பிராமணர் எதிர்ப்பு, பிரமணல்லதோர் நலன்” இருந்தது. “வர்ணாசிரமும் இந்தி திணிப்பும் ஓட்டிப் பிறந்த இரட்டை பிசாசுகள்”, “இந்தியை கட்டாய பாடமாக்கினால் பிராமண மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைவார்கள். இது பிராமணர் அல்லாத மாணவர்களை அழுத்தும் முயற்சி” என்றார் பெரியார்.

ராஜாஜி கொடுத்த உத்திரவாதம் – “தமிழை அது (மும்மொழிக் கொள்கை) பாதிக்காமல் பார்த்து கொள்வோம். தாய்மொழிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று அறிந்தால் அடுத்த கணமே இந்த திட்டத்தை வாபஸ் வாங்கி விடுகிறேன். ஒரு குழந்தை தாயைவிட, செவிலியிடம் அதிகமாக அன்பு செலுத்த ஆரம்பித்தால் செவிலியை உடனே வேலை நீக்கம் செய்வது போல ஹிந்துஸ்தானியை (இந்தியை) அனுப்பி விடுகிறேன்”.

ஆனால், ராஜாஜி சொன்னது ஏற்கப்படவில்லை. போராட்டங்கள் தொடர்ந்தன.  1940ல் இந்த மும்மொழிக் கொள்கை (அன்றைய பிரிட்டிஷ் கவர்னர் ஆட்சியால்) கைவிடப்பட்டது. பின்னர் அவ்வப்போது கல்வி ரீதியில், மாநில அரசு இந்தியை கட்டாயப்படுத்தும் நடவடிக்கை எடுத்த போதெல்லாம் அது தீவிரமாக எதிர்க்கப்பட்டது.

1938 போன்று 1964ல் காங்கிரஸ் முதல்வர் பக்தவச்சலம் மும்மொழிக் கொள்கையை கொண்டு வந்தார். 1965 பிப்ரவரி வரை, மாணவர்கள் பெருமளவில் பங்கெடுத்த பெரும் போராட்டங்கள் நிகழ்ந்தன. உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

கல்விக்கொள்கை ரீதியில், இந்தி திணிப்பு/இந்தி கட்டாயம் என்கிற நிலைக்கு (கிட்டத்தட்ட) நிரந்தர முற்றுப்புள்ளியை அண்ணா தலைமையிலான திமுக அரசு வைத்தது. 1968ல் “மும்மொழித் திட்டம் கைவிடப்படும். தமிழ்நாட்டின் பள்ளி கல்வித்திட்டத்திலிருந்து இந்தி முழுமையாக அகற்றப்படும். தமிழும் ஆங்கிலமும் மட்டுமே பள்ளிகளில் கற்பிக்கப்படும்” என இருமொழிக் கொள்கை தீர்மானத்தை அண்ணாவின் அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.

அரசு/அரசியல் ரீதியில் இவ்வாறு நிகழ்ந்தாலும், தென்னிந்திய ஹிந்தி பிரச்சார சபா மூலம் தமிழக மக்களில் கணிசமானவர்களை இந்தி தொடர்ந்து சென்றடைந்து கொண்டிருக்கிறது. அது போக, பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இந்தி (தமிழுக்கு பதிலாக)  இரண்டாம் மொழியாகவோ அல்லது மூன்றாம் மொழியாகவோ சொல்லித் தரப்படுகிறது.

1986ல் ராஜிவ் தலைமையிலான மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை கொண்டு வந்தது. அதன்படி, கிராமப்புற, ஏழை மற்றும் சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்கும் வகையில் நவோதயா பள்ளிகளை (மாவட்டத்திற்கு ஒன்று என) அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அப்பள்ளியில் மூன்றாம் மொழியாக இந்தி கட்டாயமாக கற்றுத்தரப்படும். இதனை திமுக தீவிரமாக எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டது. நவோதயா பள்ளிகளை தமிழகம் ஏற்காது என எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசும் முடிவெடுத்தது. 30+ ஆண்டுகள் கழித்தும் நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். இது பெருமைக்குரிய சாதனையா என்பது விவாதத்துக்கு உரியது. [மேலே/Top]

ஆட்சி நிர்வாகத்தில் இந்தி திணிப்பும் எதிர்ப்பும்

1950ல் நடைமுறைக்கு வந்த அரசியலமைப்பு சட்டப்படி, 15 ஆண்டுகளுக்கு (1950 முதல் 1965 வரை) ஆங்கிலம் மத்திய அரசின் அலுவலக/நிர்வாக ரீதியில் பயன்பாட்டில் இருக்கும் என்றும், அதன்பின் இந்தியே நிர்வாகம் சார்ந்த தொடர்பு மொழியாக இருக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அதாவது 15 ஆண்டுகளில் மத்திய அரசு நிர்வாகத்தில் இருந்து ஆங்கிலம் அகற்றப்படும் என்பதே அந்த முடிவு. அதன்படி, மத்திய-மாநில அரசுகளின் தகவல் தொடர்பு பரிமாற்றங்களும் ஆவணங்களும் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியில் நிகழ வேண்டிய கட்டாயம் வரும்.

தென்னிந்தியத் தலைவர்கள் இந்திக்கு மட்டும் தனி அந்தஸ்து தரப்படுவதையும், ஆங்கிலம் அகற்றப்படுவதையும் ஏற்கவில்லை. இந்தியை மொழிப் பாடமாக ஏற்ற ராஜாஜி கூட அதனை (மாநில) ஆட்சி மொழியாக ஏற்கவில்லை. அவர் “ஆங்கிலத்தை தூக்கி எறிந்துவிட்டு அவ்விடத்தில் இந்தியை வைப்பதை” எதிர்த்தார். 1959ல் பிரதமர் நேரு “இந்தி திணிக்கப்படாது. ஆங்கில பயன்பாடு தொடரும்” என அறிவித்தார்.

இந்த 15 ஆண்டுகளுக்கான கெடு நெருங்கும் சமயம், 1963ல் நேரு தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசு “இந்தியுடன் சேர்ந்து ஆங்கிலத்தின் பயன்பாடு தொடரும்” என்பதை உறுதி செய்யும் வகையில் ஆட்சி மொழி சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. அந்த சட்டத் திருத்தத்தில் பயன்படுத்தப்பட்ட “may” என்ற வார்த்தையை நீக்கி “shall” என்று குறிப்பிடவேண்டும் எனவும், “காலவரையின்றி தொடரும் என்றிருக்கவேண்டும்” எனவும் நாடாளுமன்றத்தில் அண்ணா வாதிட்டார் – “shall”, “காலவரையின்றி” என்பவைதான் எதிர்கால அரசுகளையும் கட்டுப்படுத்தும் என்பதற்காக. திருத்தங்கள் ஏற்கப்படவில்லை. போராட்டங்கள் தொடர்ந்தன. மேலே சொன்ன 1964 மும்மொழிக் கொள்கைக்கு எதிரான போராட்டங்களும் சேர்ந்து கொண்டன. [குறிப்பு: “1965 மொழிப்போர்” என்று சொல்லப்பட்ட இந்தப் போராட்டத்தை பெரியார் ஆதரிக்கவில்லை].

ஒருவழியாக 1967ல் இந்திரா பிரதமராக இருந்த சமயம், தென்னிந்தியாவிற்கும் திருப்தி அளிக்கும் வகையிலான மாறுதல்களோடு”ஆங்கிலத்தின் பயன்பாடு காலவரையின்றி தொடரும்” என ஆட்சி மொழி சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

1986ல் “ஹிந்தி திவாஸ்” நிகழ்ந்த சமயம் நடந்த சில சம்பவங்களை (மற்றும் ஏற்கனவே சொன்ன “நவோதயா பள்ளி” அறிவிப்பு ஆகியவற்றை ) மையமாகக் கொண்டு, எதிர்க்கட்சியான திமுக  “அரசியல் சட்ட நகல் எரிப்பு” போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது ஆட்சியில் இருந்த எம்ஜிஆர் அரசும் தன் பங்கிற்கு சட்டமன்றத்தில் “மத்திய அரசின் ஒரே ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும்” என ஏகமனதாக தீர்மானம் இயற்றியது. [மேலே/Top]

இப்பொழுது சர்ச்சை ஏன்?

சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை (2019) மும்மொழிக் கொள்கையை முன்னிறுத்துகிறது. அதாவது, மூன்றாவது மொழி ஒன்று கட்டாய மொழிப் பாடமாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அந்த மூன்றாம் மொழி இந்தியாகத்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. மாணவர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது என சொல்லப்பட்டாலும்,  அது மறைமுகமாக இந்தியை திணிக்கும் செயலாக பார்க்கப்படுகிறது.

அது போக, சமீபத்தில் நடந்த “ஹிந்தி திவாஸ்” விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா “அந்நிய மொழிகள் நமது நாட்டை ஆதிக்கம் செலுத்தாமல் இருக்கவே, நம் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியவர்கள் இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றனர்” என்றார். இந்த பேச்சு “ஒரே தேசம், ஒரே மொழி” என தேசமெங்கும் இந்தியை ஒற்றை மொழியாக திணிப்பதற்கான அச்சாரம் என்ற ரீதியில் உள்வாங்கப்பட்டது. எதிர்ப்பு சலசலப்புகளுக்குப்பின், அமித்ஷா தன் பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், இந்தியை திணிக்கும் நோக்கமோ பிராந்திய மொழிகளை பலவீனப்படுத்தும் நோக்கமோ இல்லை என்று தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். [மேலே/Top]

வருங்காலத்திற்கு…

மேலே சொன்னவை வரலாற்று நிகழ்வுகள். இனி வருபவை என் கருத்துக்கள்.

கல்வியில் மூன்றாம் மொழியாக இந்தியை ஆதரிக்கலாம், (தமிழக) மாநில அரசின் ஆட்சி மொழியாகவோ மத்திய – (தமிழக) மாநில அரசுகளின் தகவல் தொடர்பு மொழியாகவோ இந்தியை எதிர்க்கலாம் என்பதே என் கருத்து.

இப்படி இருந்தால், தமிழர்களுக்கு தமிழக அளவில் தமிழும் இந்தியாவின் மற்ற இடங்களில் தேவைக்கேற்ப இந்தியோ ஆங்கிலமோ பயன்படும். [மேலே/Top]

கல்வியில் மும்மொழிக் கொள்கை: ஏற்றுக் கொள்வோமே!!

1950களின் (நேரு தலைமையிலான) காங்கிரசுக்கும் சரி, இன்றைய (மோடி தலைமையிலான) பாஜகவிற்கும் சரி – இந்திய அளவில் ஆங்கிலத்தின் பயன்பாட்டை இந்தி முந்தவேண்டும் என்பதாகவே இருக்கிறது. அதாவது, “ஆங்கிலம் vs இந்தி” என்பதுதான் இந்த தேசிய கட்சிகள் கொண்டுவர முனைந்த, முனைகிற திட்டமாக தெரிகிறது. ஆனால் நாம் “தமிழ் vs இந்தி” என்கிற ரீதியில் எடுத்துக்கொண்டு உணர்ச்சிப்பெருக்கான வாதங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபடுகிறோம்.

இன்றைய காலகட்டத்தில், ஆங்கிலத்தை ஒதுக்கிவிட்டு மற்ற மொழிகளை முன்னிறுத்தலாம் என்பது எவ்வித பயனையும் தராது. இன்னும் சொல்லப்போனால் சர்வதேச அரங்கில் நம்மை பின்னடைய செய்யும். எனவே ஆங்கிலத்தை ஒதுக்காமல், கல்வி ரீதியில் (பயிற்று மொழி தமிழ் என்றால்) “தமிழ்-ஆங்கிலம்-இந்தி” அல்லது (பயிற்று மொழி ஆங்கிலம் என்றால்) “ஆங்கிலம்-தமிழ்-இந்தி” என்று மும்மொழிக் கொள்கை இருப்பதில் தவறில்லை என்பதே என் கருத்து.

பெங்களூரு, ஐதராபாத் போன்ற தென்னிந்திய நகரங்களில் ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனர்கள் சரளமாக இந்தி பேசுவதை கவனித்திருப்பீர்கள். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், தமிழக நகரங்களிலும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு இந்தி தகவல் தொடர்பு மொழியாக இருக்கும். தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான களமும் விரிவடையும்.

சற்று ஆழமாக கவனித்தால், மூன்றாம் மொழியாக இந்தியை ஏன் எதிர்க்கிறோம் என்ற தெளிவே பலரிடம் இல்லை. நான் புரிந்து கொண்ட எதிர்ப்பு காரணங்களையும்,  அதற்கு (என் + ஒத்த கருத்துடையவர்களின்) பதில்களையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

[மேலே/Top]

(மாநில) ஆட்சி மொழியாக இந்தி: என்றும் எதிர்ப்போமே!!

ஆங்கிலத்திற்கு பதிலாக மாநில அளவில் இந்தி ஆட்சி மொழியாகிறது என்று வைத்துகொள்வோம். அந்நிலையில், தமிழக அரசின் சட்டங்கள், ஆணைகள், இன்ன பிற தகவல் பரிமாற்ற செய்திகள் தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் தயார் செய்ய வேண்டும். இது சிக்கல்கள் நிறைந்தது மட்டுமல்ல, தேவையற்றதும் கூட. இன்றைக்கு இருக்கும் ஆங்கில நடைமுறையே சிறந்தது. எனவே ஆட்சி நிர்வாக ரீதியில் தலைவலி தரக்கூடிய “மாநில ஆட்சி மொழியாக இந்தி இருக்கும்” என்ற யோசனை முன்வைக்கப்பட்டால், அதனை முற்றும் நிராகரிப்பதே நல்லது. [மேலே/Top]

முடிவாக…

இதுவரை நீங்கள் படித்திருந்தால் உங்களுக்கு என் நன்றி. பொதுவாக, “இந்தி என்றாலே எதிர்க்க வேண்டும்” என்ற பார்வையுடனே நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். திறந்த மனதுடன் இப்பதிவினை நீங்கள் படித்திருந்தால், இந்தியை எதில் ஆதரிக்கலாம், எப்பொழுது எதிர்க்கலாம் என்பதில் மாறுபட்ட பார்வை வந்திருக்கக் கூடும். அதனால் இனி நீங்கள் இந்தியை அணுகும் முறை (நேர்மறையாக) மாறலாம். அத்தகைய மாற்றம் தமிழ்நாட்டிற்கு நன்மை தரும். [மேலே/Top]

Comments
  1. 5 years ago
    • 5 years ago
      • 5 years ago
  2. 5 years ago
    • 5 years ago
  3. 5 years ago

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!