ஒரு வாசகனின் நன்றி…

அரசியலோ, சினிமாவோ – பொதுவாக வார பத்திரிக்கைகள் பரபரப்பு, கிசு கிசு என செய்திகள் வெளியிடும்போது, “கழுதையார்” “குரங்கார்”  என “துப்பறியும்” நிருபர்கள் கொண்டு செய்திகளை அள்ளித்தரும் காலத்தில், இவற்றில் சிக்காமல் தரமான கட்டுரைகளை கொண்ட பத்திரிக்கையாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக “துக்ளக்”-ஐ வழி நடத்தி சென்ற சோ அவர்கள் காலமான செய்தி வருத்தம் தந்தது.
பலவிதமான அரசியல் பத்திரிக்கைகளோடு, துக்ளக்கும் என் அப்பாவின் வாசிக்கும் பட்டியலில் இருக்கும். அப்படியே நானும் படிக்க தொடங்கி 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. “சோ ஒரு பிராமணர், அதனால் இப்படித்தான் எழுதுவார்” என்று எனக்கு திணிக்கப்பட்ட “பிராமண எதிர்ப்பு” கருத்தையும் மீறி அவரது தலையங்கங்கள், கேள்வி-பதில்கள், “நினைத்தேன் எழுதுகிறேன்” கட்டுரைகளை உன்னிப்பாக படிக்க வைத்தது அவரது எழுத்து நேர்மைக்கும், பத்திரிக்கை தர்மத்திற்கும் சான்று.
ஆழமாக பதிந்து போன அவரது கருத்து ஒன்று – “நடுநிலை என்பது நன்மைக்கும் தீமைக்கும் நடுவில் நிற்பதல்ல. அந்தந்த கால சூழ்நிலைக்கேற்ப எது அதிக நன்மை அல்லது குறைந்த தீமை என்பதன் பக்கம் நிற்பதே நடுநிலைமை”. எந்தவொரு தேர்தலுக்கு முன்னரும் அவர் “யாருக்கு ஓட்டளிக்க வேண்டும்” என்று எழுதும் தலையங்கத்தில் இந்த நடுநிலைப் பார்வை நெறிபிறழாது நிற்கும். 2014 நாடாளுமன்ற தேர்தலில் அப்படி அவர் வைத்த கருத்து பெரும்பாலான வாசகர்களால் ஏற்கப்படவில்லை. ஆனாலும், அவர் அசராமல் விளக்கம் தந்தார்.
பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகளும், பத்திரிக்கைகளும் “தனி ஈழம், விடுதலை புலிகள்” என ஆதரவு காட்டி, அப்படி இருப்பதுதான் “தொப்புள்கொடி உறவு” இலங்கை தமிழருக்கு செய்யும் உதவி என்று இருந்தபோது “நமது அரசியல்வாதிகள் அமைதியாக இருப்பதே இலங்கை தமிழருக்கு செய்யும் பெரும் உதவி” என்றும், “விடுதலை புலிகள் வீழ்த்தப்பட்ட வேண்டியவர்கள்” என்றும் தொடர்ந்து தெளிவாக, ஆணித்தரமாக கருத்து சொல்லி தெளிந்தவர்கள் குழம்பாமல் பார்த்து கொண்டார் என சொல்லலாம். என்னதான் பாரதிய ஜனதாவை ஆதரித்தாலும், காங்கிரஸின் நிர்வாகத்தை விமர்சித்தாலும் “இந்தியாவை அரசியல் ரீதியாக ஒருங்கிணைத்திருப்பது காங்கிரஸ், அதனால் காங்கிரஸ் பெரும் பலவீனம் அடைவது நாட்டுக்கு நல்லதல்ல” என்ற அவரது தேசியவாத கருத்து வித்தியாசமானது மட்டுமல்ல, சிந்தனையில் வைக்க வேண்டியது.
எந்த ஒரு அரசியல் நிகழ்வு ஏற்பட்டாலும் பரபரப்பான செய்தி திணிப்பால் ஒரு கருத்துருவாக்கம் ஏற்படும். சோ அவர்களின் கருத்தை படித்தபின் ஒரு சமநிலை உருவாகி அந்த கருத்து பதமடையும். அந்த வகையில், ஒரு வாசகனாக என் அரசியல் பார்வையின் தரத்தை உயர்த்தியதில் (நான் நேரில் பார்த்திடாத) சோ அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. நன்றி சோ அவர்களே…
Comments
  1. 7 years ago
  2. 6 years ago
  3. 6 years ago
  4. 4 years ago

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!