தமிழக அரசியலை புதிய தளத்திற்கு… – எடுத்து செல்வார்களா?

இன்னும் இரண்டு நாட்களில் தமிழகத்தில் திரு.G.K. வாசன் தலைமையில் புதிய கட்சி உருவாக இருக்கிறது. பொதுவாக ஊடகங்களில் இது தமிழகத்தில் காங்கிரஸின் ஓட்டு வங்கியை தக்க வைக்கிற முயற்சி என்று கூறப்பட்டாலும், ஒரு நடுநிலை வாக்களானாக எனக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன.

(1) 1967 தொடங்கி இரண்டு கழக ஆட்சிகளிலும் தமிழகம் முன்னேற்றம் கண்டிருப்பதை மறுப்பதற்கில்லை. என்றாலும், மாபெரும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை தவற விட்டிருப்பதாகவே தோன்றுகிறது. கடும் உழைப்பாளிகளை கொண்ட தமிழகம், இலவசங்களிலும் டாஸ்மாக்கிலும் தன்னை தொலைத்துக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் இருக்கிறது.  இந்த நிலையில், குறுகிய அரசியல் பார்வை கடந்து, தமிழக அரசியலை வேறொரு உயர்ந்த தளத்திற்கு யாரேனும் எடுத்து செல்ல மாட்டார்களா என்ற ஏக்கம் இருக்கிறது.

(2) பொதுவாக, இரண்டாம் கட்ட தலைவர்களை வளர்க்கும் ஆரோக்கிய அரசியல் இங்கு இல்லை. அதனால், எந்த ஒரு கட்சியையும் அதன் தலைவரைத் தாண்டி (அவர் அந்த கட்சியின் முகம் மற்றும் ஆன்மா என்ற போதிலும்) பார்க்க முடிவதில்லை. இதன் காரணமாக, நிர்வாக ரீதியாக ஒரு நம்பிக்கையின்மை ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை.

கிட்டத்தட்ட 13 ஆண்டு கால நேரடி அரசியல் அனுபவமும், சில வருடங்கள் மத்திய மந்திரியாக அரசு நிர்வாக அனுபவமும் பெற்ற திரு.G.K. வாசனும், அவருடன் இருக்கும் சட்டமன்ற, பாராளுமன்ற அனுபவம் பெற்ற முக்கியஸ்தர்களும் மேற்சொன்ன இரண்டு குறைகளையும் நீக்கினால் அது தமிழகத்திற்கு செய்யும் மாபெரும் நன்மையாகும். ஏறத்தாழ 50 ஆண்டு கால தமிழக அரசியலை முற்றிலும் மாறுபட்ட தளத்திற்கு எடுத்து செல்லும் வாய்ப்பை, மாறுபட்ட சிந்தனைகள் மற்றும் செயல்கள் மூலம்  இந்த புதிய கட்சி முழுமையாக  பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!