2016: வாக்கும் போக்கும் – 1
By Sivakumar Mahalingam On 6 May 2016 In அரசியல்
கடந்த 50 ஆண்டுகளில் இரண்டு கழகங்களும் தமிழகத்தை சீரழித்து விட்டன என்பது மிகைப்படுத்தப்பட்ட வாதம் என்று நினைக்கும் வாக்காளர்களில் நானும் ஒருவன். பொது விநியோகம், மருத்துவ வசதிகள், சாலை போக்குவரத்து போன்ற விஷயங்களில் தமிழகம் பல மாநிலங்களை விட முன்னேறிய நிலையிலேயே உள்ளது.
ஆனால்…
மேற்சொன்ன விஷயங்களில் முன்னேற்றத்தை கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் பெற்றுவிட்டது. அதன் பின்னர் இந்த இரண்டு கழகங்களும் செய்த சாதனை அந்த முன்னேற்றம் சரிந்து விடாமல் தக்க வைத்ததும், சில “கூடுதல் முறை”யிலான மாற்றங்களை (incremental changes) செய்ததும்தான். அந்த முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு பல நிலைமாற்ற மாற்றங்களை (transformational changes) செய்திருக்க முடியும். அவ்வாறு செய்யாமல், சமூக அறிவியலில் சொல்லப்படக்கூடிய “இரு கட்சி ஆட்சி முறை”யின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்கள். வாக்காளர்களாகிய நாம் செய்ததெல்லாம் ஒரு கட்சியின் தவறுகளுக்கு தண்டனையாக மறு கட்சியை ஆட்சியில் அமர்த்தியதுதான். அதற்கேற்றபடி, 2011 தேர்தல் வரை மற்ற அரசியல் கட்சிகள் நமக்கு ஒரு மாற்று வாய்ப்பை சரிவர வழங்கவும் இல்லை.
கடந்த தேர்தல்கள் போல் இல்லாமல், 2016ல் சில அரசியல் கட்சிகள் (நிர்பந்தம் காரணமாகவோ, தொலைநோக்கு அரசியல் பார்வை காரணமாகவோ) வாக்காளர்களாகிய நமக்கு சற்று அழுத்தம் திருத்தமாகவே மாற்று வாய்ப்பை முன் வைத்திருக்கின்றன என்பது உண்மை. இதனை சரிவர பயன்படுத்தி, ஒரு மாற்று கட்சியை/கூட்டணியை வாக்கு சிதறாமல் பலப்படுத்த வேண்டியது நமது கடமை என்றே கருதுகிறேன். பலப்படுத்துதல் என்றால் மாற்று கட்சிக்கு/கூட்டணிக்கு ஆட்சியை கொடுக்க வேண்டும் என்று கூட இல்லை; ஓரளவு கணிசமான (50-60) சட்டமன்ற உறுப்பினர்களை அவர்களுக்கு தந்தாலே போதும். அப்போதுதான் இரண்டு கழகங்களுக்கும், தங்கள் தன்னிச்சை அரசியல் மற்றும் நிர்வாகத்தை மாற்ற வேண்டிய நிர்பந்தம் உருவாகும். அவ்வாறு நாம் “பலமான மாற்று தேவை” என்ற வலுவான எண்ணத்தை (தொகுதிகளில் வெற்றி பெரும் அளவிற்கான) வாக்குகள் மூலம் பதிவு செய்ய வேண்டும். இல்லையேல், வானத்தில் இருந்து யாரவது குதித்து வந்து நம்மை இந்த இரண்டு கழகங்களிடமிருந்து காப்பற்ற வேண்டும் என்று கண் திறந்து பகல் கனவு காண வேண்டியதுதான்.
சரி, நாங்கள்தான் சரியான மாற்று என்று அழுத்தி சொல்லும் கட்சிகள்/கூட்டணிகளின் சாதக, பாதகங்களை (ஒரு வாக்காளனின் பார்வையில்) சற்றே அலசுகிறேன்…
பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க): தேசிய கட்சி, மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சி என்பது தவிர வேறு சொல்லிக் கொள்ளும் பலம் இல்லை பா.ஜ.கவுக்கு. தமிழகத்திற்கு ஏற்ற கொள்கைகள், அவற்றை செம்மையாக முன்னெடுத்து செல்லும் சீரிய தலைமை என தமிழக பா.ஜ.க போக வேண்டிய தூரம் அதிகம். இந்த தேர்தலில் 2021க்கான விதையை அவர்கள் விதைத்தாலே பெரிய விஷயம்.
நாம் தமிழர் கட்சி: கலப்படமற்ற தமிழ் பேச்சு, திராவிடம் பேசும் கட்சிகளை காய்ச்சி எடுக்கும் சீற்றம், “அறிவார்ந்த சமூகத்தின்” நடத்தை மற்றும் அதற்கான அரசு நிர்வாகம் பற்றிய தீவிரமான வாதம் என்று சீமான் “அட” போட வைக்கிறார். ஆனால் இத்தனை பலங்களையும் தூக்கியடிக்கக் கூடிய பலவீனம் (அவர் மாற்று சிந்தனை மற்றும் பலம் என்று நினைக்கிற) “தமிழ் தேசிய”த்தில் இருக்கிறது. கொஞ்சம் விட்டால் தமிழகத்தை பிய்த்து எடுத்து வட இலங்கையோடு சேர்த்து விடுவாரோ என்ற ஐயமான நிலை, இந்திய தேசியத்தின் மீது பிடிப்பு கொண்ட தமிழர்களுக்கு (இவர்கள்தான் பெரும்பான்மை) ஏற்கலாகாது.
தொடரும்…