தினகரன் உதிர்த்த வைரமுத்து

???
சமீபத்தில் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் பற்றி பேசும் போது அவர் தேவதாசி என ஒரு வெளிநாட்டு கட்டுரையை மேற்கோள் காட்டியிருந்தார். வழக்கமாக ஒரு நிமிட கோபத்துடன் கடந்து போகும் பெரும்பாலான இந்து சமயத்தினர் தங்கள் கோபத்தின் ஆயுளை இம்முறை நீட்டி வைக்க, வைரமுத்து “யார் மனதும் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்” என்று கூறியிருக்கிறார். மேலும் ஆண்டாள் காலத்தில் “தேவதாசி” என்ற சொல்லுக்கு உயர் அர்த்தம் இருந்தது என்றும் சொல்லியிருக்கிறார். அவருக்கு இரண்டு கேள்விகள் –

 

  1. “தண்ணீர் தேசம்” என்ற உங்கள் கவிதை நடை நாவலை எழுத மீனவர்களுடன் கடலுக்கு சென்று, அவர்களுடன் தற்காலிகமாக வாழ்ந்து, அவர்கள் வாழ்க்கை முறையை புரிந்து ஆராய்ந்து எழுதிய உங்களால் எந்த ஆய்வுமின்றி “தமிழை ஆண்டாளை” பற்றி ஒரு வெளிநாட்டு கட்டுரையை எப்படி அப்படியே ஏற்க முடிந்தது?
  2. நீங்கள் சொன்ன உயர் அர்த்தத்தில்தான் என்றால், அந்த குறிப்பையும் வெளிநாட்டு கட்டுரை மேற்கோளுடன் சேர்த்தே வைத்திருக்கலாமே?

 

“எல்லா நதியிலும் என் ஓடம்” எழுதிய நீங்கள் எல்லா தமிழர் மனத்திலும் வீற்றிருக்க இது போன்ற சர்ச்சைகளை தவிர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
???
வைரமுத்துவின் ஆண்டாள் பேச்சிற்கு எதிர் வினையாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய காணொளி கண்டேன். “வெற்றிகொண்டானை” வெற்றி கொண்ட “தீப்பொறி” இருந்தது அவரது பேச்சில். அவருக்கு ஒரே கேள்வி – “உங்கள் கோபத்தின் நியாயத்தை காட்ட இவ்வளவு கீழ்த்தரமான பேச்சு தேவையா?”. அது போக, உங்களது இந்த பேச்சால் வைரமுத்துவை கண்டிக்க வேண்டியவர்கள் கூட அவருக்கு ஆதரவாக நிற்கிறார்கள். பெரும்பான்மை இந்துக்களே முகம் சுழிக்கும் இத்தகைய பேச்சுகளை தவிர்ப்பது உங்கள் கட்சிக்கு நல்லது.
???
மேற்சொன்ன இரண்டு பேச்சுகளை பற்றி டிடிவி தினகரன் அளித்த பேட்டியை பார்த்தேன். அவரது பேச்சில் – (1) நம்ம ஊரை பத்தி நாம சொல்றதை விட்டுட்டு வெளிநாட்டுக்காரன் சொன்னதை எடுத்துக்கணுமா? என்று வைரமுத்துவின் மேற்கோளை சாடியதும் (2) எச்.ராஜாவின் எதிர்வினை பற்றிய கேள்விக்கு “அவரை விடுங்க” என்று சட்டை செய்யாமல் தன் கருத்தை முன்வைத்ததும் (அத்தகைய உதாசீனம்  எச்.ராஜா பேசிய விதத்திற்கு தக்க மரியாதை என்றே தோன்றுகிறது) “அட” போட வைத்தன. முத்தாய்ப்பாக, “பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை திட்டி பேசுவதால் சிறுபான்மை மக்கள் மகிழ்ச்சியடைவார்களா?” என்று அவர் கேட்டபொழுது என் மனதில் ஓடியது இதுதான் – இவ்வளவு தைரியமாக, வெளிப்படையாக போலி மதச்சார்பின்மை பற்றி தமிழகத்தில் திராவிட அரசியல் பின்புலம் உள்ள எந்த தலைவரும் பேசியதில்லை. உங்கள் மீதான மற்ற விமர்சனங்களை ஒதுக்கி வைத்து விட்டு, உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.
Comments
  1. 6 years ago
  2. 6 years ago

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!