சட்டமும் சத்தமும்

1996 சட்டமன்ற தேர்தல் சமயம் – மக்கள் அன்றைய ஆளுங்கட்சியான அதிமுக மீது  (ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் வன்முறை கலாச்சாரம் காரணமாக)  கடும் அதிருப்தியில் இருந்தார்கள்.  “நாங்கள் ஆட்சிக்கு வந்து ஜெயலலிதா மற்றும் ஊழல் புரிந்த அதிமுக அமைச்சர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சிறையில் தள்ளுவோம்” என்று தீவிர பிரச்சாரம் செய்தார் திமுக தலைவர் கருணாநிதி. திமுகவின் பிரச்சாரம், தமாகா கூட்டணி, ரஜினி வாய்ஸ், மக்கள் வெறுப்பு என எல்லாம் சேர்ந்து திமுகவை அந்த தேர்தலில் ஆளுங்கட்சியாக்கின.
ஆட்சிக்கு வந்த வேகத்தில் கருணாநிதி சிறப்பு நீதிமன்றம் அமைத்தார். ஜெயலலிதா மற்றும் அவரது சகாக்கள் மீது சொத்து குவிப்பு, ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகளை தொடுத்தார்.  சில வழக்குகள் நழுவினாலும் மற்றவை ஜெயலலிதாவிற்கு பெரும் தலைவலி தந்து அவ்வப்போது அரசியல் ரீதியான பின்னடைவையும் ஏற்படுத்தின. அதில் மிக முக்கியமான “வருமானத்திற்கு மீறிய சொத்து குவிப்பு” வழக்கு அவரது மரண படுக்கை வரை துரத்தியது வரலாறு. இத்தனைக்கும் இந்த வழக்கு நடந்த காலகட்டத்தில் ஐந்து முறை ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார்; அந்திம காலத்தில் 37 எம்பிக்கள் வைத்துக்கொண்டு தேசிய அரசியலிலும் கவனிக்கத்தக்க இடத்தில இருந்தார். இவ்வளவையும் மீறி அவர் தண்டனை பெற்றதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா?  கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, தன் அரசியல் எதிரிக்கு சட்ட ரீதியாக தண்டனை வாங்கி தந்து விட வேண்டும் என்று கருணாநிதி காட்டிய பெரு முனைப்பு. அந்த முனைப்புதான், ஆட்சி மாறினாலும் அந்த வழக்கில் தி.மு.கவை ஒரு வாதியாக இணைக்க வைத்து தொடர்ந்து போராட வைத்தது. ஒருவேளை தி.மு.க. அந்த வழக்கில் இணையாமல் இருந்திருந்தால், வழக்கு பலவீனமடைந்து தீர்ப்பு மாறி இருக்கக்கூடும்.
அதெல்லாம் சரி, ஏன் இந்த பிளாஷ்பேக் என்கிறீர்களா?  காங்கிரஸ் தலைமையிலான கடந்த அரசின் மீது அத்தனை ஊழல் குற்றச்சாட்டுகள் – 2ஜி, ஆதர்ஷ், நிலக்கரி, ஏர்செல்-மேக்சிஸ், இதர இதர. மோடி ஆட்சி வந்து நான்கு ஆண்டுகள் ஆகியும், இதுவரை ஒன்றும் நிரூபிக்கபடவில்லை; நிரூபிக்கபடுவதற்கான முகாந்திரமும் இல்லை. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பெருத்த சிரிப்போடு வெளிவந்து புனிதர் போல் நடமாடுகிறார்கள்.  மத்திய ஆளுங்கட்சியான பா.ஜ.கவும், முக்கிய அமைச்சர்களும் “சட்டம் கடமையை செய்யும்”, “மேல் முறையீட்டில் வெற்றி பெறுவோம்”, “முந்தைய ஆட்சியிலேயே தொடுக்கப்பட்ட வழக்கு” என்று விதவிதமாக பேட்டி தருகிறார்கள். சட்டம் கடமையை செய்ய இவர்கள் என்ன முனைப்பு காட்டினார்கள் என்பது தெரியவில்லை. மேற்சொன்ன கருணாநிதியின் முனைப்பை கற்றுக்கொள்ளாமல் அல்லது பின்பற்றாமல், மோடியும் பா.ஜ.கவும் “காங்கிரஸ் இல்லா பாரதம்”, “ஊழல் இல்லா இந்தியா” என்று பேசுவது “முழக்கம்” அல்ல, சத்தம்.
Comments
  1. 6 years ago

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!