போதும் விகடன்… இதற்கும் கீழே தரம் உள்ளதா?

விகடன் இணையதளத்தில் “போதும் ரஜினி… இதுக்கு மேல பொறுமை இல்லை” என்றொரு கட்டுரை. விகடன் தனது பத்திரிக்கை தர்மத்தை கைவிட்டு சில ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதால், அக்கட்டுரையை “இதுக்கெல்லாம் மதிப்பு கொடுக்கணுமா?” என்று கடந்து போக தோன்றியது. தர்மம் தொலைத்த விகடனை இன்னும் பெருவாரியான மக்கள் தொலைக்கவில்லை என்பது சற்றே கசப்பான உண்மை. அதனால், அந்த கட்டுரையில் உள்ள விமர்சனங்களுக்கு ஆக்கபூர்வமாக பதில் சொல்லுவது, பொதுவான பார்வையாளர்களுக்கு விகடனின் வன்மத்தை புரியவைக்கும் என்ற எண்ணத்துடன் இந்த பதிவை முன்வைக்கிறேன்.

விகடன் விமர்சனம்: ரஜினியின் அரசியல் சார்ந்த செய்திகளுக்கும் ‘தலைவர்’ அடைமொழியிடுவது தமிழ்ச்சமூகத்தை அவமதிக்கும் செயல். அப்படியென்ன அரசியல் களத்தில் ரஜினி செய்துவிட்டார் ‘தலைவர்’ என்று அழைக்க?

பதில் கருத்து: மக்கள் நலன் கருதிய சில கசப்பான கருத்துக்களையும் “இமேஜ்” பற்றி கவலைப்படாமல் பொதுவெளியில் சொல்வது நல்ல தலைவனின் அடையாளம். அந்த வகையில் “போலீசை தாக்கும் வன்முறை முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும்”, “எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்”, “முடிந்த அளவிற்கு விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில், நிலம் இழப்பவர்களுக்கு திருப்திகரமான இழப்பீடு கொடுத்து எட்டு வழி சாலை போன்ற திட்டங்கள் கொண்டு வரவேண்டும்”, “மாணவர்கள் அரசியலை அறிந்துகொள்ளுங்கள், ஈடுபடாதீர்கள்; படிப்பில் கவனம் செலுத்துங்கள்” என்று அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கருத்துக்களை ரஜினி கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சொல்லியிருக்கிறார். மக்களின் ஓட்டுக்காக இனிப்பு பேச்சு தரும் “தலைவர்களுக்கு” மத்தியில் , மக்களின் (நீண்டகால) நன்மைக்காக கசப்பு மருந்தை தரும் ரஜினியை “தலைவர்” என்று கூறுவதில் தவறேதுமில்லையே.

விகடன் விமர்சனம்: ”தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு சமூக விரோதிகள்தான் காரணம்” என்று கண்டுபிடித்துச் சொன்னார். ’போராட்டம் போராட்டம் என்று போனால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்’ என்றும் கடுப்பைக் காண்பித்தார்.

பதில் கருத்து: துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த சில வாரங்களில், தூத்துக்குடியை சார்ந்த மீனவர்களில் பலர் “மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எங்களை மூளைச் சலவை செய்து, போராட்டத்தில் ஈடுபடத் துாண்டினர்” என்று புகார் .அளித்தனர். அதன் விளைவாக “#அன்றே_சொன்ன_ரஜினி” என்ற ஹேஷ்டேக், சமூக வலைத்தளங்களில் ரஜினியின் கருத்தை (விகடனின் வார்த்தையில் சொன்னால் “கண்டுபிடிப்பை”) வழிமொழிந்தது.

அது போக, சட்டரீதியிலான தீர்வுகளை பின்தள்ளிவிட்டு எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று தெருவில் இறங்கினால் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் பாதிக்கப்படும் என்பதில் மாற்று கருத்து உண்டா என்ன? அதற்காக ரஜினி கண்மூடித்தனமான தொழில் வளர்ச்சியை ஆதரிக்கவில்லை. “நிலம், நீர், காற்று” மாசுபடாத வகையிலான தொழில் வளர்ச்சியையே அவர் ஆதரிக்கிறார் (காணொளி). பரபரப்பு செய்திகளுக்காக கண்மூடித்தனமாக போராட்டங்களை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் இது புரிய வாய்ப்பில்லைதான்.

விகடன் விமர்சனம்: ரஜினி ஆரம்பிக்கும் கட்சி, இப்போது இருக்கும் கட்சிகளுக்கு எந்தவிதத்திலும் மாற்றாக இருக்கப் போவதில்லை, அவற்றின் நீட்சியாக மட்டுமே இருக்கப்போகிறது.

…’இப்போதிருக்கும் கட்சிகளுக்கு எந்தவிதத்திலும் ரஜினி மாற்றாக இருக்கப்போவதில்லை’ என்பதை அடித்துச்சொல்ல வேண்டியிருக்கிறது.

பதில் கருத்து: ரஜினி மக்கள் மன்றத்தின் விதிகள் ஆகஸ்ட் 2018ல் வெளியிடப்பட்டது. அதில் சொல்லப்பட்ட பல (வழக்கமான முறைகளுக்கு) மாறுபட்ட விதிகளில் ஒன்றுதான் “ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு மட்டுமே பொறுப்பு, பதவி வழங்கப்படும்” என்பது. “தந்தை அமைச்சர், மகன் சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்; தந்தை பாராளுமன்ற உறுப்பினர், மகன் சட்டமன்ற உறுப்பினர்; தந்தை கட்சி தலைவர், மகன் கட்சிக்கு வருங்கால தலைவர்” என்று வாரிசு அரசியலை வளமாக வளர்த்தெடுக்கும் இன்றைய அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் இப்படி ஒரு விதிமுறையை கொண்டுவருவதே கோடை மழையாக தெரியவில்லையா? இது மாற்று அரசியலின் ஒரு அடையாளமே.

டிசம்பர் 2018ல் இந்தியா டுடே இதழுக்கு அளித்த பேட்டியில் ரஜினி, “மக்களிடம் வாக்குகளை பெறுவதை விட அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு சொல்லவேண்டும். இங்கு நல்ல ஆற்றல் வளம் உள்ளது. மக்கள் மிக நல்லவர்கள். புத்திசாலிகள். தாங்கள் யார் என்பதை மறந்துவிட்டார்கள். தங்கள் திறன் வளத்தை, வலிமையை, அறிவை மறந்துவிட்டனர். எல்லாமே இங்கு இருக்கிறது. ஆனால், அதை சரியாக முறைப்படுத்தவில்லை. அதை இப்போது செய்தாக வேண்டும்.” என்று தெளிவாக சொல்லியிருக்கிறார். இத்தகைய சிந்தனை இன்றைக்கு உள்ள எந்த அரசியல் கட்சியின் சிந்தனையின் நீட்சியே அல்ல. முற்றிலும் வேறுபட்டது.

விகடன் விமர்சனம்: ரஜினி “நதிநீர் இணைப்பை தேர்தல் அறிக்கையில் சொன்னது சூப்பர். பா.ஜ.க-வுக்கு எனது பாராட்டுகள்” என்றார். நதிகள் இணைப்புக்கு பா.ஜ.க இதுவரை செய்திருப்பது என்ன என்பதை, கொஞ்சம் விசாரித்துவிட்டு வந்து கருத்து சொல்லியிருக்கலாம். குறைந்தபட்சம், பா.ஜ.க ஆட்சியில் கங்கை படும் பாட்டை அறிந்துகொண்டேனும் சொல்லெடுத்திருக்கலாம்.

பதில் கருத்து: நதிகளை இணைப்பதில் மோடியின் அரசு 2014-2019 காலத்தில் பெரிதாக ஏதும் செய்யவில்லையெனினும், கங்கை நதியை தூய்மைப்படுத்துவதில் காட்டிய முனைப்பும் 2019 தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்புக்கு (முன்பைவிட) காட்டியிருக்கும் முக்கியத்துவமும் கவனம் கொள்ளத்தக்கதே. “கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் எங்களை விட பா.ஜ.க அரசு முனைப்போடும் சிறப்போடும் செயல்பட்டிருக்கிறது” என்று காங்கிரஸை சார்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறார். புள்ளிவிவரங்கள் வேண்டுமெனில், இதோ: 2014-2019 காலத்தில், கங்கையில் விழும் கழிவுகளை சுத்திகரிக்கும் திறன் 8 மடங்கு (ஒரு நாளைக்கு 485 மில்லியன் லிட்டர் என்ற அளவிலிருந்து 4000 மில்லியன் லிட்டர் அளவிற்கு) அதிகரிக்கப்பட்டுள்ளது.

விகடன் விமர்சனம்: இந்தியாவின் ஜீவநதிகள் எத்தனை, அதன் தன்மைகள் என்ன, அதன் வழித்தடங்கள் எப்படிப்பட்டவை என எதையுமே அறியாமல், ‘நதிகள் இணைப்பு’ என்பதை உத்தம யோசனையாக முன்னிறுத்துவது, இன்னொரு பிழை. உண்மையில், காவிரிப் பிரச்னையில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்று தெரியாமல் இருந்த நேரத்தில், ‘நதிகள் இணைப்பு’ என்பதை பாதுகாப்பு கவசமாகப் பயன்படுத்த ஆரம்பித்தவர்தான் ரஜினி. அதை அப்படியே மெயின்டெயின் செய்கிறார்.

பதில் கருத்து: நதிகள் இணைப்பு பற்றி இருவிதமான கருத்துகள் இருப்பது உண்மைதான். அதற்காக “நதிகள் இணைப்பு நல்ல தீர்வாக இருக்கும்” என்று தீவிரமாக பேசுபவர்கள் “இந்தியாவின் ஜீவநதிகளையும் அவற்றின் வழித்தடங்களையும் அறியாதவர்கள்” என்று எப்படி பொத்தாம் பொதுவாக விமர்சனம் வைக்கிறீர்கள்? அடிக்கடி இமயமலை செல்லும் ரஜினிக்கு கங்கை போன்ற நதிகளின் வளமையும் அருமையும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. அது போக, நதிநீர் இணைப்பு குறித்து 2000-2002 காலகட்டத்திலேயே பல நிபுணர்களுடன் கலந்தாலோசித்திருக்கிறார்.  “நதிகள் இணைப்பு என்பது ரஜினிக்கு பாதுகாப்பு கவசம்” என்று விகடன் சொல்வது, ரஜினியின் தமிழ் முத்திரையை தாண்டி கன்னட பிம்பத்தை முன்னிறுத்தும் வன்மமான முயற்சியே.

தேசத்திற்கே தலைமகனாக இருந்த தமிழ்மகன் அப்துல் கலாம் நதிகள் இணைப்பை வலியுறுத்தியிருக்கிறார். “மக்கள் சக்தி இயக்கம்” துவங்கிய சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான டாக்டர்.எம்.எஸ். உதயமூர்த்தி, நதிகள் இணைப்புக்காக தேசிய அளவில் கருத்தரங்குகள் நடத்தியிருக்கிறார்; கிட்டத்தட்ட 2000 கிலோமீட்டருக்கு பாதயாத்திரைகளும் சென்றிருக்கிறார். அத்தகு பெருந்தகைகள் எந்த அச்சுறுத்தலுக்காக நதிகள் இணைப்பை பாதுகாப்பு கவசமாக பயன்படுத்தினார்கள்?

விகடன் விமர்சனம்: நாட்டை ஐந்து ஆண்டுகள் ஆட்சிசெய்த ஒரு கட்சியைப் (பாஜக) பற்றி ஒரு அபிப்ராயமும் இல்லாத ரஜினியின் அரசியலை எப்படி வியப்பதென்று தெரியவில்லை. ஆனால், ’புதிய இந்தியா பிறந்துவிட்டது’ என்று, மோடிக்கு பிராண்ட் அம்பாசிடராகச் செயல்பட மட்டும் மறக்கவில்லை. கமலாவது அதற்கு மன்னிப்பு கேட்டார். ரஜினிக்கு மன்னிப்பு கேட்பதற்கும் மனம் வரவில்லை.

… ரஜினியோ, ‘வெற்றி பெறுகிறார்கள்’ என்பதை மட்டுமே வைத்து எவரையும் ஆதரிக்கக்கூடியவராக இருக்கிறார். இது அபாயமான போக்கு.

பதில் கருத்து: மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதித்தபோது, ரஜினி தன் அதிருப்தியை தெரிவித்தார். பணமதிப்பிழப்பு பற்றி “அதனை செயல்படுத்திய விதத்தில் குறைபாடுகள் இருந்தன” என்று சொன்னார். அது போல, அதிமுக அரசின் மீது விமர்சனங்கள் இருக்கும்போதும், “தமிழக கல்வித்துறை மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது நன்றாகவே செயல்படுகிறது. கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தன் வேலையை சரிவர செய்வதாகவே நான் கருதுகிறேன்” என்று பாராட்டினார். ஆகையால் ரஜினி, அரசின் (பாஜகவோ, அதிமுகவோ) செயல்பாட்டை வைத்துதான் கருத்து சொல்கிறாரேயன்றி, “வெற்றி”யை அளவுகோலாக வைத்து அல்ல. அரசின் செயல்பாடுகளையெல்லாம் குறை சொன்னால் மட்டுமே தன் அரசியல் எடுபடும் என்ற நிர்பந்தத்திற்குள் ரஜினி தன்னை அடைத்துக்கொள்ளவில்லை.

விகடன் விமர்சனம்: எந்தப் போராட்டமும் வேண்டாம், அறிக்கைகள் வேண்டாம், கள ஆய்வுகள் வேண்டாம், நேரடியாகத் தேர்தல், அதில் வெற்றி, அப்படியே பதவி என்ற அரசியலை முன்னெடுக்க முனைகிறார். நடுவில் மக்கள் என்று சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்குப் பிரச்னைகள் இருக்கும், அதற்காகக் களம் இறங்க வேண்டும் என்பதையே மறக்கிறார். இது ஆபத்தானது! அவரது அரசியலுக்கு அர்த்தமுள்ள ஓர் அடைமொழி வைக்க வேண்டுமானால், ‘பதவி அரசியல்’ என்று வைக்கலாம்.

…ரஜினி அரசியல் புரட்சிக்காகவோ, சமூக முன்னேற்றத்துக்காகவோ கட்சி ஆரம்பிக்க விரும்பவில்லை.

… ரஜினியின் அரசியலின் மையம் ’பதவி’ மட்டுமே. அவரது இலக்கு, அந்தப் பதவி தரும் அந்தஸ்து மட்டுமே.

பதில் கருத்து: ரஜினி, போராட்டமோ அறிக்கைகளோ கட்சி தொடங்குவதற்கு முன் வேண்டாம் என்றுதான் நிலைப்பாடு எடுத்திருக்கிறார். அதே சமயம், “அரசியலுக்கு வருவது உறுதி” என்று அறிவித்தபின் நிறைய அரசியல் நிகழ்வுகளுக்கு தன் கருத்தை தெரிவித்திருக்கிறார் – தூத்துக்குடி சம்பவம், காவிரி மேலாண்மை வாரியம், எட்டு வழிச்சாலை, இலங்கை அகதிகள், சூரப்பா நியமனம், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு, “ஒரே நாடு ஒரே தேர்தல்” சாத்தியக்கூறு மற்றும் சில. இவையெல்லாம் மக்கள் பிரச்சினைகள் குறித்த அறிக்கைகளுக்கு நிகரானவையே.

கட்சி அரசியல் என்று எடுத்துக்கொண்டால், ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாக கட்டமைப்பை பலமான அஸ்திவாரத்துடன் (பூத் கமிட்டி அளவில்) இருபெரும் திராவிட கட்சிகளுக்கு நிகராக அமைப்பதே அசாதாரணமானதுதான். களப்பணி என்று எடுத்துக்கொண்டால், ரஜினி மக்கள் மன்றம் ஒவ்வொரு மாவட்ட அளவிலும் நிறைய சமூகப்பணிகளில் (உதாரணங்கள் – அரசு பள்ளி கட்டிட புனரமைப்பு உதவிகள், தொடர் மருத்துவ முகாம்கள்) ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. கஜா புயல் நிவாரணப் பணிகளில் ரஜினி மக்கள் மன்றம் களமிறங்கி அந்தந்த பகுதிகளின் தேவையறிந்து நேர்த்தியுடன் செயல்பட்டது பலரது பாராட்டை பெற்றது. இவ்வாறாக மக்களோடு மக்களாக இணைந்து செயல்படும்போது மக்கள் பிரச்சினைகளை உள்வாங்கவும், தீர்வுகளை அலசவும் பெருவாய்ப்பு கிடைக்கிறது. “போராட்டமே ஒரே வழி” என்றில்லாமல் இப்படியும் போர் தொழிலுக்கு பழகலாம் குழந்தே…

வெறும் போராட்ட அரசியலை மட்டும் வைத்தே மாற்றங்களை கொண்டுவர முடியும் என்பது 1960களோடு முடிந்து போனது. “பதவிகள் வேண்டாம், போராட்டங்கள் மட்டுமே போதும்” என்று நினைத்திருந்தால், அண்ணாவின் திமுக தேர்தல் அரசியலில் இறங்காமல் பெரியாரின் திக போன்றே செயல்பட்டிருக்கும். டிசம்பர் 2018ல் இந்தியா டுடே பேட்டியில் ரஜினி “புதிய, வித்தியாசமான அரசியலை அறிமுகப்படுத்துவேன். இல்லையெனில் 67 வயதில் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்? இது பூக்களின் பாதையல்ல. இருப்பினும் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார். ஆகையால், இன்றைய காலகட்டத்தில், அரசியலிலும் அரசு நிர்வாகத்திலும் சமூக அமைப்பிலும் பெருமாற்றங்கள் கொண்டு வரவேண்டுமெனில் பதவி சார்ந்த அரசியல் அவசியம். ரஜினியின் இலக்கு மாற்றங்கள்தான், பதவியோ அது தரும் அந்தஸ்தோ அல்ல. பதவி வெறும் கருவி மட்டுமே.

விகடன் விமர்சனம்: ’எந்தக் கட்சியையும் சாடாமல் அரசியல் செய்வதுதான் அரசியல் நாகரிகம்’ என்று, புது பொழிப்புரையும் கொடுத்துவருகிறார், ரஜினி. அந்த அரசியல் நாகரிகத்தில், ’எவரையும் பகைத்துக்கொள்ளக் கூடாது’ என்ற பாதுகாப்பு மனநிலையைத் தவிர, வேறெதுவும் இல்லை.

பதில் கருத்து: சமீபத்திய தேர்தல் பரப்புரைகளில் முதலமைச்சரும் எதிர்க்கட்சி தலைவரும் மாறிமாறி சாடிக்கொண்ட போது உயர்நீதிமன்றம் ஹெட்மாஸ்டராக மாறி “கண்ணியமாக பேசுங்கள்” என்று சொல்ல வேண்டியிருந்தது. அப்படிப்பட்ட சாடும் அரசியலைதான் ரஜினி ஒதுக்குகிறார். இது ஆரோக்கியமானதே.

மற்றபடி, “சிஸ்டம் கெட்டுப்போயிருக்கு”, “ஆமாய்யா நல்ல தலைமைக்கான வெற்றிடம் இருக்கு, அதை நிரப்பதான் நான் வர்றேன்”, “அரசியல்வாதிகள் அவங்க வேலையை சரியா செஞ்சா என்னை மாதிரி நடிகர்கள் அரசியலுக்கு அவசியம் இல்லையே” என்றெல்லாம் திடமாக, தீர்க்கமாக சொல்லும்போது ரஜினி ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் பகைக்கவே செய்கிறார். இதிலெங்கே பாதுகாப்பு மனநிலை இருக்கிறது?!

விகடன் விமர்சனம்: ’பால் எப்போது பொங்கும்’ என்று ஆசை ஆசையாக காத்துக்கிடக்கிறார்கள், ரஜினி ரசிகர்கள். ’பாலாக இருந்தால் பொங்கும், பச்சைத்தண்ணீர் பொங்கவே பொங்காது’ என்பதை அவர்களுக்கு யார் எடுத்துச்சொல்வது?

பதில் கருத்து: பாலென்று முடிவு கட்டியதும், எப்போது பொங்கும் என்று கேள்வி கேட்பதும் விகடன் போன்றவர்கள்தான். ரஜினியின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் “பச்சைத்தண்ணீராக”வே பார்த்து வந்திருக்கிறோம். அதனால், தண்ணீர் பொங்கவேண்டும் என சம்பந்தமில்லாமல் எதிர்பார்த்ததில்லை. காலத்தின் தேவைக்கேற்ப, அந்த பச்சைத்தண்ணீர் 100 டிகிரி கொதிநீராக தகிப்பதையும், அதன் அனலில் வேண்டாத கிருமிகள் அழிவதையும் பார்க்கவே நாங்கள் காத்திருக்கிறோம். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

இறுதியாக..

ரஜினியின் அரசியல் பற்றி நேர்மறை செய்திகள் வரும்போதெல்லாம், அவற்றை முளையிலேயே கிள்ளியெறியும் வகையில் ரஜினிக்கு எதிரான கட்டுரைகளை எழுதுவது விகடனின் வாடிக்கையாக இருக்கிறது. எஸ்.எஸ். வாசன், அவருக்கு பின் எஸ்.பாலசுப்ரமணியன் காலத்தில் ஊடக தர்மத்தை உயர்த்தி பிடித்து வளர்ந்த விகடன், இன்று இப்படி தரம் தாழ்ந்து போனது சோக வரலாறே. ரஜினிக்கு எதிரான விகடனின் வன்மத் தொடரின் மற்றொரு அத்தியாயம்தான் இந்த “போதும் ரஜினி…” கட்டுரை. ஆயினும், விகடனின் விஷக்கணைகளால் ரஜினியின் கோட்டையோ அவரது ராஜபாட்டையோ சிதையாது என்பது திண்ணம்.

Comments
 1. 5 years ago
  • 5 years ago
 2. 5 years ago
  • 5 years ago
 3. 5 years ago
 4. 5 years ago
 5. 5 years ago
 6. 5 years ago
 7. 5 years ago
 8. 5 years ago
 9. 5 years ago
 10. 5 years ago
 11. 5 years ago
 12. 5 years ago
 13. 5 years ago
 14. 5 years ago
 15. 5 years ago
 16. 5 years ago
 17. 5 years ago
 18. 5 years ago
 19. 5 years ago
 20. 5 years ago
 21. 5 years ago
 22. 5 years ago
 23. 5 years ago
 24. 5 years ago
 25. 5 years ago
 26. 5 years ago
 27. 5 years ago
 28. 5 years ago
 29. 5 years ago
 30. 5 years ago

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!