அண்ணாத்த #3: கலாச்சார நினைவூட்டல்
எங்கள் குலதெய்வம் செல்லியம்மன் கோவிலில் “முள்படுகள திருவிழா” என ஒன்று நடக்கும். படுக்கை போல் விரித்துவைக்கப்பட்ட முட்களில் பக்தர்கள் செல்லியம்மனிடம் வேண்டிக்கொண்டு படுத்து எழுந்திருப்பார்கள். முதுகில் நன்றாக முள் குத்தும் வகையில் படுத்திருப்பார்கள். என் அப்பா அவர் வாழ்ந்த காலத்தில் சில வருடங்கள் இப்படி முள்படுகளத்தில் பங்கேற்று இருக்கிறார். பொதுவாக நமக்கு ஒரு சிறு முள் குத்தினாலே எப்படி வலிக்கும்? ஆனால், முள்படுகளத்தில் பங்கேற்றவர்கள் அப்படி ஏதும் சொன்னதில்லை. என் அப்பா கூட “வலியெல்லாம் தெரியாது” என்றே சொல்லியிருக்கிறார். கொஞ்சம் யோசித்து பார்த்தால், அந்த நிமிடங்களில் தன்னிலை மறந்து குலசாமியிடம் முழுமையாக தன்னை ஒப்படைத்துவிடுவதுதான் அப்படி வலி தெரியாமல் போவதற்கு முக்கிய காரணம்.
என் அப்பா வருடம் தவறாமல் குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்தார். எனக்கு அந்த பழக்கம் இல்லாமல் இருந்தது. கடந்த சில வருடங்களாக வருடத்தில் ஒரு முறையாவது குலதெய்வ கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்தால் கிடைக்கும் புத்துணர்ச்சியே தனிதான்.
இப்படி குலதெய்வம் சார்ந்த ஆன்மிக கலாச்சாரம் நம் வாழ்வியலில் கலந்த ஒன்றாக பல நூற்றாண்டுகளாக இங்கே இருக்கிறது. இன்றைய நவீன உலகில் இந்த கலாச்சாரத்தை துறந்துவிடாமல் இருப்பது மிக அவசியம். அந்த வகையில், குலதெய்வ வழிபாட்டை “அண்ணாத்த” subtle ஆக பதிவு செய்திருப்பதாக நினைக்கிறேன்.
“நாளை பங்குனி உத்திரம், குலசாமி கோவிலுக்கு போயிட்டு ஒரு முடிவு எடுக்கலாம்”, மதுரை வீரன் சாமி, வெள்ளிக்கவசம் படைப்பது, அலகு குத்தி தேர் இழுப்பது என இந்த மண்ணில் வேரூன்றிப்போன இறைபக்தி கலாச்சார விஷயங்களை ஆங்காங்கே தூவி இருக்கிறார் டைரக்டர் சிவா.
படத்தின் இரண்டாம் பாதியில், ரஜினியே குலசாமியாக நின்று தன் தங்கையைக் காப்பது போல் கதை நகர்கிறது. காப்பு கட்டுவது, கொடி ஏற்றுவது, வான வேடிக்கை, மஞ்சள் தண்ணீர் ஊற்றுவது, சொக்கப்பனை கொளுத்துவது, நேர்ந்து விடுவது என ஊர்த் திருவிழாவின் அம்சங்களை வெறும் வசனத்தோடு நிறுத்தாமல் வில்லனை பழிவாங்கும் காட்சிகளுடன் பிணைத்திருப்பது வித்தியாசமான அணுகுமுறை. முத்தாய்ப்பாக, க்ளைமாக்ஸில் கீர்த்தி சொல்லும் “கடல் தாண்டி போனாலும் குலசாமி நிழல் தாண்டி போக முடியாது” என்ற அழுத்தம் திருத்தமான வசனம், ரஜினியின் கதாபாத்திரத்தை மட்டுமல்ல, குலதெய்வத்தின் முக்கியத்துவத்தையும் ஆழமாக நெஞ்சில் பதிக்கிறது.
60களிலும் 70களிலும் தெய்வம், தெய்வ நம்பிக்கையை மையமாக வைத்து நிறைய படங்கள் வந்தன. காலப்போக்கில் அவையெல்லாம் குறைந்துவிட்டன. அதற்கு முக்கிய காரணம், நம்மிடையே அப்படிப்பட்ட படங்களை பார்க்கும் பொறுமை இல்லாமல் போய்விட்டதுதான். அப்படி முழுநீள படம் எடுக்க முடியாத சூழலில், இப்படி ரஜினி போன்ற ஒரு மாஸ் நடிகரின் படத்தில் இறைபக்தி சார்ந்த காட்சிகள் வருவதால் இருக்கும் நன்மை – இந்த கலாச்சாரப் பதிவு காலங்கள் கடந்தும் நிற்கும்; நமக்கு தொடர் நினைவூட்டலை செய்யும். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இப்படியொரு கலாச்சாரப் பதிவை செய்த டைரக்டர் சிவாவிற்கு வாழ்த்துகளும் நன்றியும்
உண்மை, குலசாமி வழிபாடு குடும்பத்துக்கு நல்லது. இதை தலைவர் வடிவில் சிவா சொன்னது கூடுதல் மகிழ்ச்சி. ??