அண்ணாத்த #5: தயக்கம் தரக்கூடாத பாசம்
அண்ணாத்த படத்தின் கதையைப் பொறுத்தவரை, மிகவும் light-weightதான். குறிப்பிடத்தக்க திருப்பங்கள் ஏதும் இல்லாத நேர்க்கோட்டில் பயணிக்கும் கதைதான். ஆனாலும், படம் தந்த இரண்டு முக்கிய கருத்துகள் வெவ்வேறு காலகட்டங்களுக்கும் பொருந்தக்கூடியவை. இந்த கருத்துகள் அண்ணன்-தங்கை உறவுக்கு மட்டுமல்ல, பெற்றோர்-பிள்ளை உறவுக்கும் பொருந்தும்.
- எவ்வளவு பாசம் இருந்தாலும், அதிமுக்கியமான விஷயங்களில் தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசிக்கொள்ளக்கூடிய space இல்லையென்றால், சம்பந்தப்பட்டவர்களுக்கு வலியே மிஞ்சும் என்பதை காளையனும், தங்க மீனாட்சியும் பெற்ற வலியினூடே டைரக்டர் சொல்லியிருக்கிறார். இறுதிக்காட்சியில் காளையன் சொல்லும் “எதிர்பார்ப்பும், மரியாதையும்” அந்த space இல்லாமல் போனதை அழுத்தமாக எடுத்துரைக்கிறது.
- பொதுவாக காதல் திருமணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இந்த காலகட்டத்தில், வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்வது என்பது முறையான விஷயம் இல்லைதான். பெற்றோர் சம்மதத்துடன் நடக்கக்கூடிய காதல் திருமணங்கள் பலருக்கும் நிம்மதி தரக்கூடியவை. அதையும் மீறி நடக்கும் “ஓடிப்போன” திருமணங்களை பக்குவத்துடன் கையாளுவது அவசியம். பழியுணர்வு, கொலையுணர்வு என்கிற ரீதியில் அணுகுவது அந்த பாசத்தையே கேள்விக்குறியாக்கும் செயல். தங்க மீனாட்சி ஓடிவிட்டாள் என தெரிந்ததும் நெருங்கிய சொந்தங்கள் “தீர்த்துக்கட்ட வேண்டும்” என உச்ச வெறியில் பேசுவார்கள். அப்போது, காளையன் “என் தங்க மீனாட்சி” என சொல்வதில்தான் முழுமையான பாசமும் பக்குவமும் அடங்கி இருக்கிறது என்பதை பசுமரத்தாணியாக பதித்திருக்கிறார் டைரக்டர்.

படத்தின் கதையைப் பற்றி பேசும் பதிவு என்பதால் இங்கே இன்னொரு விஷயத்தை குறிப்பிட தோன்றுகிறது. “அண்ணாத்த” படம் அண்ணன்-தங்கை கதை என்பதால், பலர் இந்த/அந்த படம் மாதிரி இருக்கிறது, இவர்/அவர் படம் மாதிரி இருக்கிறது என விதவிதமாக சொன்னார்கள். அப்படி சொன்னதில் அவர்கள் விட்டுவிட்ட முக்கியமானவர் டி.ராஜேந்தர். ஆம், 1980களில் சகலகலா வித்தகராக வெற்றிப்படங்களை தந்த டி.ஆர் “அண்ணன்-தங்கச்சி” பாசத்திற்கு தன் படங்களில் முக்கிய இடம் தந்திருப்பார். “தங்கைக்கோர் கீதம்”, “என் தங்கை கல்யாணி” என தங்கைப் பாசத்திற்காக தனிப்பட்ட படங்களே எடுத்தார். இந்த தீபாவளிக்கு தன் மகன் சிம்புவின் “மாநாடு” திரைப்படம் வெளியாகவில்லை என ஆவேசமாக இருந்தார் டி.ஆர். அநேகமாக “அண்ணாத்த” பார்த்தபின் அவர் மனம் உருகி, அந்த ஆவேசம் தணிந்திருக்கும் என்றே தோன்றுகிறது. தங்கைக்காக உருகி இறுகி காவல் காக்கும் அண்ணாத்தவுக்காக மாநாட்டை தள்ளிப்போட்டதில் தவறில்லை என்று டி.ஆர் நினைத்திருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. நவம்பர் கடைசி வாரத்தில் வெளிவந்த “மாநாடு” திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது மகிழ்ச்சி.