அண்ணாத்த #1: மீண்டும் உணர்வுப்பூர்வமான ரஜினி
By Sivakumar Mahalingam On 12 November 2021 In சினிமா: "அண்ணாத்த"
ரஜினி இயல்பான நடிப்பை வெகு சிறப்பாகக் காட்டக்கூடியவர். அதன் தாக்கம் உணர்ச்சிபூர்வமான காட்சிகளில்தான் அதிகம் தெரியும். ஆனால், 90களின் ரஜினியின் மாஸ் படங்கள் அவருக்கு action, காமெடி காட்சிகளைத்தான் அதிகம் தந்தன. அதன் விளைவால் இயல்பான உணர்வுப்பூர்வ ரஜினியை பார்ப்பதற்கான வாய்ப்புகள் குறைந்தன. அந்தக் குறையை பெருமளவு தீர்த்த படம் “கபாலி”. கபாலியை விட அதிகமான emotional spaceஐ “அண்ணாத்த” ரஜினிக்கு கொடுத்திருக்கிறது. நெடுநாள் பசியுடன் காத்திருக்கும் சிங்கம் தனக்கான உணவைப் பார்த்துவிட்டால் எப்படி வேட்டையாடுமோ, அப்படி உணர்வுப்பூர்வ காட்சிகளில் வேட்டையாடி இருக்கிறார் ரஜினி.
- அலகு குத்தி தேர் இழுத்துவிட்டு, அதன்பின் தன் தங்கைக்கான கணவன் எப்படி இருக்கவேண்டும் என்ற விருப்பத்தை சொல்லிவிட்டு, அதை தெய்வத்திடம் வேண்டுவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும் என்ற ஆதங்கத்தையும் தங்கையின் எதிர்காலம் பற்றிய கவலையையும் கலந்து பேசும் காட்சி
- தங்கையை காணவில்லை என்பது முதல் “கிடைத்தும் கிடைக்கவில்லை” என்பது வரை, படபடப்பு, துடிப்பு, உறவுக்காரர்களின் உசுப்பேத்தல்களை உடைத்து மேலோங்கும் பாசம், இயலாமை, வலி, இழப்பை தாங்கிக்கொள்ள தயாராகும் மனசு என அத்தனை உணர்ச்சிகளை தங்குதடையின்றி கொட்டும் காட்சி
- இறுதியில், தேக்கிவைத்த துயரமெல்லாம் உடைந்து கண்ணீராய் வெளியேற முழுமையான பாசத்தை ஆத்மார்த்தமாக வெளிப்படுத்தும் காட்சி
இந்த மூன்று காட்சிகளில் ஒரு காட்சியிலேனும் உங்களுக்கு கண்ணீரோ அல்லது குறைந்தபட்ச நெகிழ்வோ வரவில்லையெனில், நீங்கள் கீழ்கண்ட பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவினராக இருக்க வேண்டும்.
- உணர்வு, உணர்ச்சிகளைக் கடந்த ஞானி
- இன்றைய அதிவேக உலகில் உணர்வுகளை முற்றிலும் இழந்துவிட்ட மனிதர்
- தீவிர ரஜினி வெறுப்பாளர்