அண்ணாத்த #6: குறைகளைக் களைந்த ஈரம்

ஒவ்வொரு ரஜினி ரசிகனுக்கும் ரஜினி படத்தில் மாஸ் மொமெண்ட்ஸ் ரொம்ப முக்கியமானவை. “அண்ணாத்த”வில் அறிமுக காட்சி, bar fight (கீர்த்தி வெளியேறும் வரை காத்திருந்து அடிக்கும் காட்சியும், குரல் மாடுலேஷனோடு “மீனாட்சி” என நெஞ்சை தட்டி சொல்லும் காட்சியும்), interval blockல் பாருக்கு மேல் நிற்கும் காட்சி, “வா சாமி” பாடலுக்கு முன்பும், பாடலிலும் வரும் காட்சிகள் என சொல்லிக்கொண்டே போகலாம். இந்த action மாஸ் மொமெண்ட்ஸ்க்கு நிகரான ஒரு மாஸ் காட்சியாக எனக்கு தெரிந்தது – ரஜினி பிரகாஷ்ராஜ் காலில் விழும் காட்சி. படத்தின் அந்த காட்சி வரை “காளையன்” சித்தரிக்கப்பட்ட விதத்திற்கு அந்த காட்சியில் காலில் விழுந்தால்தான் பொருத்தமாக இருக்கும் என எண்ணிய தருணத்தில் அது நிகழ்ந்தது. ஏற்கனவே கனமாக இருக்கும் அந்த சூழலை அது மேலும் கனமாக்கியது.

படத்தில் ரஜினியைத் தாண்டி கவனத்தை ஈர்த்த இரண்டு நடிகர்கள் – கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ். அண்ணன் விருப்பத்தை மீறிவிடுவோமோ என்ற கவலையையும், அண்ணண் மனம் நோகாமல் இருக்கவேண்டுமே என்ற அக்கறையையும் சுமந்த மனச்சூழலை கண்களிலேயே காட்டுவதில் கீர்த்தி பின்னியிருக்கிறார். பிரகாஷ்ராஜ் முதலில் கோபம், பின் குணம் என அசால்டாக அசத்தியிருக்கிறார்.

“என்னப்பா, இந்த படத்தை பல விமர்சகர்கள் சரியில்லை என சொல்லும்போது நீ என்னமோ நீள நீளமாக எழுதுகிறாயே? அப்படி குறை இல்லாத படமா இது?” என கேட்டால், குறைகள் இல்லை என சொல்லமாட்டேன். இரண்டு முக்கிய குறைகளாக எனக்கு பட்டவை –

  • ரஜினியே காமெடி காட்சிகளில் கலக்கக்கூடியவர். போதாதற்கு சூரி, சத்யன், சதீஷ், லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், குஷ்பூ, மீனா என ஒரு பெரிய பட்டாளமே இருந்தும் நகைச்சுவை காட்சிகளில் அவ்வளவு சுவை இல்லை. விழுந்து விழுந்து சிரிக்கவைக்க நல்ல scope இருந்தும் தவறவிட்டுவிட்டார்கள்.
  • இரண்டு வில்லன்கள் என வைத்து அவர்களை சரியாக கதைக்குள் கொண்டுவரவில்லையோ என தோன்றியது. அதற்கு ஒரு வில்லனையே இன்னும் strong ஆக காட்டியிருக்கலாம்.

படத்தின் போக்கில் உறுத்திய இரண்டு லாஜிக் மீறல்கள் என சொல்லக்கூடியவை –

  • ஊர்மக்களுக்கே ரஜினி-நயன் காதல் தெரிந்திருந்தும், நயனும் கீர்த்தியும் ஊரில் சந்திக்காமலே இருப்பது
  • “பெரியாத்தா” ஆறு மாதங்கள் பொறுத்திருந்து காளையனிடம் உண்மையை சொல்லுவது

மற்றபடி, “செலுத்தப்பட்ட அம்பு” விமர்சகர்கள் லாஜிக் மீறல்களாக சொன்ன பல விஷயங்கள் படத்தின் போக்கில் பெரிதாக தெரியவே இல்லை.

நான் இதற்குமுன் எந்த படத்திற்கும் இவ்வளவு விரிவாக பதிவுகள் எழுதியதில்லை. இத்தனைக்கும் “அண்ணாத்த”வில் அடர்த்தியான கதை என சொல்வதற்கில்லை. அப்படி இருந்தும், இவ்வளவு தாக்கம் இருப்பதற்கு காரணம், ரஜினி பரிமாறிய உணர்வுப்பூர்வ விருந்துதான். “முள்ளும் மலரும்” காளி, “ஆறிலிருந்து அறுபது வரை” சந்தானம், “நல்லவனுக்கு நல்லவன்” மாணிக்கம் – இவர்களின் உணர்வுகளைப் பிழிந்தெடுத்து 2021க்கான Falooda Juice ஆக தந்திருக்கிறார் “காளையன்”. கடந்த 20+ வருடங்களில் வீரமான ரஜினியை நிறைய பார்த்தாயிற்று (இன்னும் சலிக்காமல் பார்க்கலாம் என்பது வேறு விஷயம்), ஆனால் இப்படி ஒரு ஈரமான ரஜினியை பார்க்கவில்லை. அந்த ஈரம்தான் படத்திற்கு மட்டுமல்ல, நம்மை படத்தோடு கட்டிப்போடும் ஆன்மாவும்.

(முற்றும்)

Comments
  1. 2 years ago

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!