அண்ணாத்த #4: இசைக்காற்று வீசுதே
2012. “கும்கி” இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை விஜய் டிவியில் ஒளிபரப்பினார்கள். ரஜினி கலந்துகொண்ட clippings போட்டதால் அந்த நிகழ்ச்சி என் கவனத்தை ஈர்த்தது. அதனால் பார்க்க தொடங்கினேன். “நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே” என்ற வரிகளைத் தாங்கிய “அய்யய்யோ ஆனந்தமே” பாடலின் இசை என்னை தன்னுள் இழுத்துக்கொண்டது. அடுத்த சில நாட்களில் கும்கி இசைத்தட்டு வாங்கிவிட்டேன். அதன்பின் சில வாரங்களுக்கு என் தினசரி “செவி உணவாக” கும்கி பாடல்கள் இருந்தன. முதல் பாடலைத் தவிர மற்ற பாடல்களை loopல் கேட்பேன்.
அப்படி கும்கிக்கு பிறகு இமானின் முழு இசைத்தொகுப்பை loopல் கேட்கக்கூடியதாக “அண்ணாத்த” இருக்கிறது. First Single வெளியானபோது எனக்கு அவ்வளவு திருப்தியாக இல்லை. ஆனால், படத்தில் பாடலை பார்த்தபின், பாடலின் உற்சாகம் நன்றாக உள்ளே இறங்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
படத்தில் பாடல்களின் sequencingம் மிக அருமை. ரஜினியின் துள்ளல் நிறைந்த “அண்ணாத்த அண்ணாத்த”வில் ஆரம்பித்து, அடுத்து “சார சார காற்றே” என்ற மெலோடியில் melt ஆக்கி, பின்னர் “மருதாணி சிவப்பு சிவப்பு” என குத்தாட்டம் போட வைத்து, அடுத்த சில நிமிடங்களில் “என்னுயிரே” என நம்மை உணர்வுக்குவியலில் இமானின் இசை உட்கார வைக்கிறது. பின் கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திவிட்டு, படத்தின் இரண்டாம் பாதியில் “வா சாமி” என நம்மை கூச்சலிட வைத்து தொடரும் இசை, இறுதியில் மென்சோகம் இழையோடும் (சித்ராவின் குரலில்) “என்னுயிரே”வை நம் இதயத்தில் பதித்து நமக்கு விடைகொடுக்கிறது. கமர்ஷியல் படங்களின் இடைச்செருகல் பாடல்கள் ஏதும் இல்லாதது பெரிய ப்ளஸ். அதன் காரணமாகவும் நம்மால் படத்தின் இசையோடு பயணிக்க முடிகிறது.
சார சார காற்றே பாடலின் “திந்தாக்கு தாக்கீட திந்தாக்கு தாக்கீட”வும், என்னுயிரே பாடலின் “தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்க”மும் அடிக்கடி நம் உதடுகளில் உறவாடும் ட்யூன்கள் என்றால் மிகையில்லை.
பின்னணி இசையில் இமானின் மெனக்கெடல் நம் காதுகளுக்கு விருந்து வைத்திருக்கிறது. என்னை மிகவும் கவர்ந்த மூன்று பின்னணி இசைத்தொகுப்புகள் –
- கீர்த்தியை காணவில்லை என கவலை கலந்த பரபரப்புடன் தேடல் ஒருபுறம், மாப்பிள்ளை வீட்டார் மகிழ்ச்சியோடு ஊர்வலமாக வருவது மறுபுறம் என காட்சிகள் மாற்றி மாற்றி காண்பிக்கப்படும்போது பின்னணி இசையும் மாறி மாறி பயணிப்பது இருக்கிறதே… Simply Superb.
- கீர்த்தி மயக்கத்தில் இருக்க, நயன்தாரா மருந்து வாங்கி வரும்போது வில்லன் கோஷ்டி துரத்தும். நயன்தாரா ரஜினி இருக்கும் இடத்திற்கு செல்லும்வரையிலான அந்த சேஸிங் காட்சிகளில் வரும் பின்னணி இசை பக்கா தீபாவளி பட்டாசு.
- மொத்த க்ளைமாக்ஸ் பின்னணி இசையுமே நன்றாக இருந்தாலும், ரஜினி-ஜெகபதிபாபு சண்டைக்காட்சிகளில் வரும் இசை அதகளம்.
இவை போக, ரஜினி ரசிகர்களுக்கான அட்டகாசமான goosebumps இசை – ரஜினியின் அறிமுகக் காட்சியில் வரும் இசை.
மொத்தத்தில், அண்ணாத்த “பச்சக்கிளி” – “Musically”தான்…
பல வருடங்களுக்கு முன் நான் டி.இமானை EA வில் எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. அப்போது என்னிடம் பண்பாக பேசினார். கும்கி என்ற படத்துக்கு இசையமைத்துக் கொண்டிருப்பதாக கூறினார். அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். பல ஆண்டுகளுக்குப் பின் தலைவருக்கு இப்படி ஒரு நல்ல ஆல்பம் கொடுப்பார் என்று நான் அப்போது நினைக்கவில்லை. காலம் நல்லவர்களுக்கு நல்லது செய்ததில் பெரு மகிழ்ச்சி. ???