மு(.)க(.)மாற்றம்
குறிப்பு: இந்த பதிவு ஜனவரி (2017) இரண்டாம் வாரம் எழுதியது. அதன் பின் வந்த அரசியல் பரபரப்பு செய்திகளில் மூழ்கியதால் பதிவிட மறந்துவிட்டேன்.
தமிழகத்தில் வாரிசு அரசியல் என்றாலே முதலில் கண்முன் நிற்கும் கட்சி தி.மு.கழகம். தி.மு.கவின் “குடும்ப அரசியல்” பிம்பம், கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு பொருந்தும். இந்த நிலையிலும், மு.க. ஸ்டாலின் ஒரு விதிவிலக்காகவே தெரிகிறார். கலைஞரின் வாரிசு என்ற ஒரே காரணத்தினாலேயே மு,க. ஸ்டாலின் அவரது “அரசியல் வாரிசாக” உருவாகிவிடவில்லை. ஸ்டாலினுக்கு பாதை சரியாக இருக்கவேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட ஒரு பெரிய நிகழ்வு என்று சொல்ல வேண்டுமானால், 23 ஆண்டுகளுக்கு முன் நடந்த “வைகோ தி.மு.கவிலிருந்து நீக்கம்” என்பதை சொல்லலாம். ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் வைகோவின் அரசியல் நிலைப்பாடுகளை சற்று ஆராய்ந்து பார்த்தால், அவரது நீக்கத்தால் தி.மு.கவோ தமிழகமோ எதையும் பெரிதாக இழந்ததாக தெரியவில்லை.
சற்றே தாமதமாக நிகழ்ந்தாலும், இப்போது ஸ்டாலினுக்கு கிடைத்திருக்கும் “செயல் தலைவர்” பதவி உயர்வு இரண்டு காரணங்களுக்காக வரவேற்கதக்கது –
(1) காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்களுடன் எதிர் அரசியல் நடத்தி கொண்டிருந்த கலைஞர், வேறொரு நிலையிலுள்ள எதிர் தலைமையுடன் அரசியல் நடத்த வேண்டிய சூழல் தவிர்க்கப்பட்டிருக்கிறது
(2) ஜெயலலிதாவின் மறைவினால் மாற்றம் கொண்டிருக்கும் அரசியல் களத்தில், இரு பெரும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக எந்த கட்சியும் ஈடு கொடுக்காத நிலையில், மக்கள் மன்றத்தில் தி.மு.க. மீண்டும் நம்பிக்கையை வளர்ப்பதற்கு அதிகாரபூர்வமான மு(.)க(.)மாற்றம் தரப்பட்டிருக்கிறது.
பல மட்டங்களிலும் குடும்ப அரசியல், ஊழலை வளர்க்கும் அல்லது வேடிக்கை பார்க்கும் நிர்வாகம், தேவையென்றால் வன்முறை – இந்த பிம்பங்களை உடைத்து, காலத்திற்கேற்ற இயக்கமாய் புதிய செயல் தலைவரின் தலைமையில் தி.மு.க. வீறு கொண்டு நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.