செய்யாத விதிமீறலுக்கு அபராதம்

கடந்த இரண்டு நாட்களாக, தலைவர் ரஜினியின் “கந்தனுக்கு அரோகரா” ட்வீட்டால் பாதிக்கப்பட்ட திமுகவினர் அவர் பெயரில் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டை வைக்க தவியாய் தவித்தனர். அதனால், “ரஜினி கேளம்பாக்கம் வீட்டிற்கு இ-பாஸ் எடுத்து சென்றாரா?” என கேள்வி கேட்டனர். இவர்கள்தான் 600 கிலோமீட்டர்கள் பயணித்து “சாத்தான்குளம் ஆறுதல்” சொன்ன உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் வாங்கித்தான் போனார் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தவர்கள். ஆனால் கடைசி வரை அந்த இ-பாஸை கண்ணால் காணாதவர்கள்.

நேற்று (23 ஜூன்) தலைவர் கேளம்பாக்கம் வீட்டிற்கு செல்வதற்கான இ-பாஸ் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அவரது அடையாளம் சார்ந்த எண்களை மறைக்காமலேயே பல ஊடகவியலாளர்கள் வெளியிட்டனர். “கேள்வி கேட்டோம், இ-பாஸ் காட்டிவிட்டார்கள். கீழே விழுந்துவிட்டோம். எப்படி மீசையில் மண் ஒட்டவில்லை என்பது?” என்று யோசித்த திமுக ஆதரவாளர்கள், இன்னும் சில லாஜிக் இல்லாத கேள்விகளை கேட்டு தங்கள் “பகுத்தறிவை” வெளிப்படுத்தினார்கள். அவற்றை எழுதினால் இந்த பதிவு ரொம்பவே நீளும்.

அடுத்த கட்டமாக, தலைவரின் வண்டி எண்ணுடன் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு சல்லான் (Challan) நம்பரை வைத்து அதன் விவரங்களை எடுத்துள்ளார்கள். அதில் “26 ஜூன் அன்று சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்கான அபராதம் ரூ.100/-” என்று இருந்தது. இதை வைத்து பல விமர்சனங்கள்.

இந்தப் பின்னணியுடன் என் சொந்த கதைக்கு வருகிறேன். இப்படி எளிதாக ஒருவரின் தனிப்பட்ட + அரசு சார்ந்த விவரங்களை எடுக்க முடிகிறதே என்று யோசித்துக்கொண்டே, “வாஹன்” வெப்சைட் சென்று என் பைக் நம்பர் போட்டு பார்த்தேன் – என்னென்ன விவரங்கள் வருகிறது என தெரிந்து கொள்ள. அப்பொழுது எனக்கு அதிர்ச்சி தரும் வகையில் என் பைக் எண்ணுடன் ஒரு சல்லான் (Challan) நிலுவையில் (Pending status) இருப்பதை கண்டேன். ஏன் அதிர்ச்சி என்றால், நான் எங்கும் போலீசிடம் அபராதம் விதிக்கப்பெறவில்லை.

அதிர்ச்சி நீங்காத நிலையில், சல்லான் (Challan) விவரங்கள் கொடுக்கும் இன்னொரு அரசாங்க வெப்சைட் போய் சல்லான் (Challan) நம்பர் கொடுத்து பார்த்தேன். அங்கே வந்த விவரங்கள் இதோ (தனியுரிமை கருதி என் பைக் நம்பர் மறைத்திருக்கிறேன்). விதியை மீறியவர் (Violator) பெயர் சுரேஷ் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அடுத்த கட்டமாக மேலும் விவரங்கள் பார்த்தால், 2019 செப்டம்பரில் சுரேஷ் என்பவருக்கு “லைசென்ஸ் RC காண்பிக்கவில்லை, பில்லியனில் வந்தவர் ஹெல்மெட் அணியாததற்கு” என என் பைக் எண்ணுடன் இணைக்கப்பட்டு ரூ.200/- அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. அதைவிட சிறப்பம்சம் – அந்த அபராதம் விதிக்கப்பட்ட இடம் சென்னை எக்மோர். இந்த இரண்டு விஷயங்களுமே எனக்கு சம்பந்தமே இல்லாதவை –

  • என் பைக்கை நான் சென்னையில் இருந்து எடுத்து வந்து 6 வருடங்கள் ஆகிறது. என்னிடம் இருந்த பைக் சென்னையில் ஒரு சுரேஷிடம் இருக்க வாய்ப்பில்லை.
  • அபராதம் விதிக்கப்பட்ட நாள்/மாதம்/வருடம் நான் சென்னையிலும் வசிக்கவில்லை.

மொத்தத்தில், சென்னையிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பைக்கில், அந்த பைக் உரிமையாளருக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ஒருவர் பெயரை போட்டு ரூ.200/- அபராதம் விதித்திருக்கிறது சென்னை டிராபிக் போலீஸ். யாரோ செய்த தவறுக்கு நான் அபராதம் செலுத்த வேண்டும் என்கிற நிலை. இதுவும் கூட இப்பொழுது யதேச்சையாக நான் தேடாமல் இருந்திருந்தால் எனக்கு தெரிந்திருக்காது. இதன் மூலம் நாமே அறியாமல் நாம் செய்யாத தவறுக்கு நம்மை குற்றவாளியாக்கி அபராதம் செலுத்த வைக்கும் குளறுபடியான சிஸ்டம் இருப்பதை அறிகிறேன். நீங்களும் உங்கள் வாகன விவரங்களை தேடினால் இது போல் அதிர்ச்சிகளை சந்திக்கக் கூடும். மனதை திடப்படுத்திக்கொண்டு தேடவும்.

ஏற்கனவே எனக்கு, தலைவரின் பெயர் சம்பந்தம் இல்லாமல் சல்லான் (Challan) தொடர்பாக சிக்கியிருக்கிறதோ என்று பெருத்த சந்தேகம் இருந்தது. மேற்சொன்ன என் சொந்த அனுபவத்திற்கு பின் அது 100% உறுதியாகிவிட்டது.

இதனால் தலைவரின் அபிமானிகளுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான் – எதிரிகளுக்கு வேறு ஒரு விஷயமும் புலப்படாததால், இப்படி குளறுபடி நிறைந்த சிஸ்டத்திலிருந்து ஒரு விஷயத்தை தூக்கிக்கொண்டு வந்து தலைவர் மீது நெகடிவ் இமேஜ் பதிக்க படாதபாடுபடுகிறார்கள். இது போன்ற அவர்களது மொக்கை முயற்சி தொடரட்டும், நாம் நம் இலக்கை நோக்கி பயணிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!