கூட்டும் ஓட்டும்

Images courtesy: Infoqueenbee, Scroll, The News Minute, News18
ஒருவழியாக, தமிழகத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான முக்கிய (திமுக, அதிமுக தலைமையிலான) கூட்டணிகள் இறுதியாகிவிட்டன. “இவங்களும் அவங்களும் கூட்டணியா?” என்று கேட்க இரண்டு அணிகளிலும் ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் (?!) பஞ்சமில்லை. சமூக ஊடகங்களின் மீம்ஸ் காரணமோ என்னவோ, இந்த அணிகள் ரொம்பவே விமர்சிக்கப்படுகின்றன. ஆனால், தமிழக அரசியல் வரலாற்றை திரும்பி பார்த்தால் இத்தகைய கூட்டணிகள் “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்ற நிலையை நோக்கி பயணப்பட ஆரம்பித்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கடந்த காலத்தின் சில “மைல்கல்” கூட்டணிகளை பார்ப்போம்.
“எதிரிக்கு எதிரி நண்பன்” கூட்டணிகள்
1967ல் அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக, மூதறிஞர் ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சியுடன் கூட்டணி வைத்தது. பிராமண எதிர்ப்பை கருவென கொண்ட திராவிடர் கழகம் வழிவந்த கட்சி – திமுக. ராஜாஜி தமிழக முதல்வராக இருந்தபொழுது கொண்டு வந்த கல்வி சீர்திருத்த திட்டத்தை ‘ஆரிய வர்ணாசிரமத்தை புகுத்தும் குலக்கல்வி திட்டம்’ என்று தீவிரமாக எதிர்த்தவர் – அண்ணா. “தி.கவும் தி.மு.கவும் இனத்துவேஷத்துக்கு பிறந்த குழந்தைகள்” என்று விமர்சனம் செய்தவர் – ராஜாஜி. என்றாலும், அண்ணாவுக்கும் ராஜாஜிக்கும் அன்றைய நிலையில் ஒரே குறிக்கோள்தான் – “காங்கிரஸை வீழ்த்த வேண்டும்”. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் கைகோர்த்தனர்.
1971ல் இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸுக்கும், கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுகவுக்கும் பொது எதிரி – பெருந்தலைவர் காமராஜர். பின் என்ன, காங்கிரஸ் என்றாலே கெட்ட வார்த்தை என்பது போல் பிரச்சாரம் செய்து வளர்ந்த திமுக இந்திரா காங்கிரஸுடன் இணக்கமான கூட்டணி வைத்து வெற்றி பெற்றது.
“பங்காளியை வீழ்த்த பகையாளி” கூட்டணிகள்
1975ல் இந்திரா கொண்டு வந்த எமெர்ஜென்சியை உறுதியுடன் எதிர்த்தார் கலைஞர். அதன் விளைவாக இந்திரா அவரது ஆட்சியை 1976ல் கலைத்தார். அப்படி இருந்தும், அடுத்த நான்கே ஆண்டுகளில் “நேருவின் மகளே வருக, நிலையான அரசை தருக” என்ற கலைஞரின் முழக்கத்தோடு திமுகவும் காங்கிரஸும் கூட்டணி வைத்து 1980 நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றன.
1980 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பிரதமரான இந்திரா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சியை கலைத்தார். அந்த “ஆட்சிக்கலைப்பு அக்கிரமமானது” என்று தீவிர பிரச்சாரம் செய்து, 1980 சட்டமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை வென்று அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது. ஆயினும், அதன் பிறகு எம்.ஜி.ஆர் இந்திராவுடன் மீண்டும் நட்பு பாராட்ட தொடங்கினார் . படிப்படியாக இறுகிய அந்த நட்பு, 1984 (இந்திரா மறைவுக்கு பிறகான) நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வழி கோலியது .
மேற்சொன்ன இரண்டு கூட்டணிகளும், வன்மப் பகை பாராட்டும் பங்காளிகளான திமுகவும் அதிமுகவும் ஒருவரை ஒருவர் மிஞ்சும் அரசியல் வெற்றிக்காக காங்கிரஸ் எனும் பகையாளியை நாடிய உதாரணங்களே.
“மத்தியில் ஆட்சி மட்டுமே லட்சியம்” கூட்டணிகள்
1999ல் திமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்தபோது இருதரப்பு ஆதரவாளர்களும் சற்று அதிர்ந்துதான் போனார்கள். அப்பொழுது தந்தை பெரியார் மட்டும் இருந்திருந்தால், “இந்த கண்ணீர் துளிகள் (திமுகவினர்) பதவிக்காக காவிக்கடலில் கலக்கின்றனவே” என்று ஆவேசப்பட்டிருக்கக்கூடும். பாஜகவுக்கு “கைக்கு எட்டி வாய்க்கு எட்டாமல் போன” முழுமையான ஐந்தாண்டு மத்திய ஆட்சி லட்சியம். திமுகவுக்கு “மத்திய மந்திரிசபையில் பதவிகள்” என்பது லட்சியம். இந்த லட்சியங்களின் சங்கமிப்பில் இந்துத்வா தீண்டாமையும், திராவிட தீண்டாமையும் கரைந்தே போயின. [அப்படி கூட்டணி வைத்த திமுகதான் இன்று “இது பெரியார் மண். இங்கே இந்துத்வாவிற்கு இடம் கிடையாது” என்று “முழங்கு”கிறது].
1999-2004 மத்திய ஆட்சியில் கிட்டத்தட்ட இறுதிக்கட்டம் வரை பாஜக தலைமையிலான மந்திரிசபையில் அங்கம் வகித்த திமுக, 2004 தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்று மீண்டும் மத்திய ஆட்சியில் இடம் பெற்றது.
“ஆட்சி மாற்றம் நிச்சயம்” கூட்டணிகள்
அம்மா ஜெயலலிதாவின் 1991-1996 ஆட்சியில் நிகழ்ந்த ஊழல்களையும் மீறி, அன்றைய காங்கிரஸ் 1996 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்றது. அந்த அதிருப்தியால் ஜி.கே மூப்பனார் காங்கிரஸிலிருந்து விலகி “தமிழ் மாநில காங்கிரஸ்” (தமாகா) என்று புது கட்சி கண்டார். 1996 தமிழக ஆட்சி மாற்றத்தில் தமாகா முக்கிய பங்கு வகித்தது. அதே தமாகா, 2001 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து மீண்டும் அம்மா ஆட்சிக்கு வர உதவியது.
“எனது கட்சி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்று. மக்களுடன் மட்டுமே கூட்டணி” என்று சூளுரைத்து “கேப்டன்” விஜயகாந்த் அரசியல் களம் கண்டார். அவரது தேமுதிக 2011ல் அதிமுகவுடன் கூட்டணி கொண்டு, “திமுக எதிர்ப்பு” ஓட்டுகள் சிந்தாமல் சிதறாமல் அதிமுகவுக்கு போக வழி செய்து ஆட்சி மாற்றத்தை உறுதி செய்தது.
ஆதலினால்…
மேற்சொன்னவை போக “தேர்தலுக்கு தேர்தல் அணி மாறி விளையாடுவோம்” என்ற வகையில் பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் திமுகவுடனும் அதிமுகவுடனும் மாறி மாறி கூட்டணி வைத்துள்ளனர். வருங்காலத்தில் திமுகவும், அதிமுகவும் கூட்டணி வைத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. “பொது எதிரி”, “தம் இருப்பு கேள்விக்குறியாகும் நிலை” போன்ற காரணங்களால் யாரும் யாரோடும் கூட்டணி வைக்கலாம்.
ஆகையால், இத்தகைய கூட்டணிகளை பார்த்து ஆவேசப்பட்டோ அங்கலாய்த்தோ நம் ரத்த கொதிப்பை ஏற்றிக்கொள்ளாமல், “எந்த கூட்டணியால் நமக்கு குறைந்த தீமை” என்று பார்த்து வாக்களிப்பதே நலம் தரும். அதே சமயம், இந்த யதார்த்த நிலையை அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் ஏற்றுக்கொள்கின்றன. அதன் விளைவு – தேர்தல் இல்லாத சமயங்களில், தாங்கள் எதிர்க்கட்சிகள் என்று கருதும் கட்சிகளின் மீதும், அதன் தலைவர்கள் மீதும் விமர்சனங்களை நாகரிகமற்ற, தனிமனித தாக்குதல் நிறைந்த முறையில் வைக்கிறார்கள். இனியேனும் இந்த போக்கை அவர்கள் மாற்றிக்கொண்டால் “மரண கலாய்” மீம்ஸ்களிலிருந்தும், தர்மசங்கட கேள்விகளிலிருந்தும் தப்பிக்கலாம்.
சூப்பர் போஸ்ட் மச்சி. கூட்டணி வரலாறு எப்போதுமே பொருந்தா கட்சிகள் ஒன்று சேர்ந்து சுயலாபம் மட்டுமே குறிக்கோளாய் இருந்திருக்கின்றன. அரசியலில் நடக்காது என்று எதுவுமே இல்லை.
சங்கோஜங்களும் சங்கடங்களும் தொண்டர்களுக்கு மட்டுமே. கட்சியின் தலைவர்களுக்கு இவை சற்றும் பொருந்தாதவை!!!!!