முதல்வ(ர் வேட்பாள)ராக வாருங்கள் தலைவா
அன்புள்ள தலைவர் ரஜினி அவர்களுக்கு –
உங்கள் அபிமானி அன்புடனும், உரிமையுடனும் எழுதும் திறந்த மடல்.
கடந்த ஒரு வார காலமாக “ரஜினிக்கு முதல்வர் வேட்பாளராக களம் காண விருப்பம் இல்லை. அரசியல் மாற்றத்தை தர விரும்பும் ரஜினி, தான் கட்சிக்கு தலைவராகவும் (தேர்தலில் வெற்றிபெற்ற பின்) ஆட்சிக்கு வேறொருவர் தலைவராகவும் இருக்க விரும்புகிறார்” என்ற செய்தி உலாவிக் கொண்டு இருக்கிறது. நாளை (மார்ச் 12, 2020) நீங்கள் விரிவான செய்தியாளர் கூட்டம் கூட்ட இருப்பதாகவும் தகவல்கள். அத்தகைய சூழலில் இந்தக் கடிதம்.
நமது அரசியல் எதிரிகள் சொல்வது – ரஜினி அபிமானிகள் ரசிக போதையில் இருக்கிறார்கள். எனவே இன்னொரு சினிமா போல் நினைத்துக்கொண்டு அவர்களது திரை நாயகரை முதல்வராக பார்க்க ஆசைப்படுகிறார்கள்.
தலைவா – உண்மையை சொல்லவேண்டுமானால், “முதல்வர்”பதவிதான் உங்கள் வாழ்வின் உச்சம் என்று நான் எண்ணவில்லை. “முதல்வர்” பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும், நீங்கள் தமிழ்நாட்டின் ஆகச்சிறந்த அடையாளங்களில் ஒருவர் என்பதில் எள்முனை அளவுகூட மாற்றம் இல்லை. எனவே, நீங்கள் முதல்வராக வேண்டும் என்ற விருப்பம் ரசிக மனநிலை சார்ந்தது இல்லை. அது நம்பிக்கைப் பேரொளி சார்ந்த ஒரு பெருங்கனவின் வெளிப்பாடு.
விரிவாக சொல்கிறேன்.
நிறைய பேருக்கு 2017 டிசம்பருக்கு பிறகு அரசியல் பேசும் ரஜினியைத்தான் தெரியும். அதனாலயோ என்னவோ “யாரோ எழுதிய ஸ்கிரிப்ட்டை (Script) பேசுகிறார்” என்று வாய் கூசாமல் பேசுகிறார்கள். நான் 1990களின் ஆரம்பத்திலேயே, பேட்டிகளில் தெளிவாகவும் தீர்க்கமாகவும் அரசியல் கருத்துக்களை முன்வைத்த ரஜினியை பார்த்தவன். தன் மனதில் இருந்த அரசியல் கருத்துக்களை, தன் சொந்தப் படமான “வள்ளி”யில் ஸ்கிரிப்ட் எழுதி வெளிக்காட்டிய ரஜினியை பார்த்தவன்.
அன்று எந்த (அரசியலுக்கும் நிர்வாகத்திற்கும் முன்மாதிரியாக இருந்த) “லீ குவான் யூ”வை தன் ஆதர்ச நாயகனாக வைத்திருந்தாரோ, அதே மனிதரை இன்றும் தன் ஆதர்ச நாயகனாக வைத்திருக்கும் ரஜினியை பார்ப்பவன். அன்று எந்த அரசியல் புரட்சியை விரும்பினாரோ, அந்த விருப்பத்தை அதே நெருப்புடன் இன்றும் தன் கனிந்த கண்களில் வைத்திருக்கும் ரஜினியை பார்ப்பவன்.
மக்கள் கையேந்தாமல் சுயமாக முன்னேறும் சூழல் வேண்டும், ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கும் அரசியல் தந்திரம் உடைக்கப்பட வேண்டும், மதங்களால் மக்களிடையே பிரிவினை வருவதை தடுக்க வேண்டும், அரசியல்வாதிகளுக்கு நல்ல அரசியல் சொல்லித்தர வேண்டும், லஞ்சம் ஊழலை வாழ்வியல் முறையாக மாற்றும் அரசியல் தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், நொடித்துப் போன அமைப்பை (System) தேர்ந்த நிர்வாகத்தால் புனரமைக்க வேண்டும் – இப்படி 1990களிலேயே பல சிந்தனைகளை கொட்டிய தலைவா, உங்கள் சிந்தனைகள் செயலாக்கம் பெற வேண்டுமெனில் நீங்கள்தான் முதலமைச்சர் ஆகவேண்டும். நீங்கள் கைகாட்டுபவர் உங்கள் கண்ணாடியை அணியலாம், உங்கள் கண்களை அணியமுடியாது.
எனவே,
- ஒரு பஸ் கண்டக்டர் நினைத்தால் கூட தன் நேர்மறை சிந்தனைகளாலும் ஆன்மிகத்தாலும் ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தை, அதன் வாழ்வியலை நேர்மறையாக மாற்ற முடியும் என்பதை வருங்கால சந்ததிக்கு பாடமாக வைக்கவும்
- “கலி முத்திப் போச்சு” என்று சொல்லும் வகையில் ஊடகங்களே விலை போன காலத்திலும் கூட “நேர்மைக்கும், நல்ல நோக்கத்திற்கும்” மக்கள் ஆதரவைப் பெற்று, செல்லரித்துப்போன அரசியல் ஆலமரங்களை வெட்டிச் சாய்த்து வரலாறு படைக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்திய தேசம் முழுதும் விதைக்கவும்
- மதம், மொழி, இனம் என்று மக்களை ஒரு பிரிவினை மனநிலையிலேயே வைத்திருக்க விரும்பும் அரசியல்வாதிகளுக்கிடையே, ஆன்மிகத்தையும் (இந்திய) தேசியத்தையும் அஹிம்சை ஆயுதங்களாகக் கொண்டு மக்களை ஒருங்கிணைக்க முடியும் என்பதை இந்த தேசத்தின் வரலாற்றில் மீண்டும் ஒரு முறை ஆணித்தரமாக எழுதவும்
- “என் வழி தனி வழி” என ஆக்கபூர்வமான புது வழியை அமைக்கும் ஒரு நல்ல தலைவனை தேர்ந்தெடுத்தால் சிஸ்டத்தை மாற்றுவது கஷ்டம் இல்லை என்பது இனிவரும் தலைமுறைக்கும் தெளிவாகப் புரியவும்
நீங்கள் 2021 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களம் இறங்குவது அவசியம்.
இந்த மாநிலத்தின் தலையெழுத்தை நேர்மறையாக மடைமாற்றம் செய்ய, முதலமைச்சராக உங்கள் கையெழுத்து தேவை என்பது காலத்தின் கட்டாயம்.
வாருங்கள் தலைவா… “ரஜினிகாந்த் எனும் நான்” என்ற சொற்றொடர் தமிழக மக்களின் காதுகளில் ஒலிக்கும் வகையில் வாருங்கள் தலைவா!!!
அன்புடன்,
என்றென்றும் உங்கள் அபிமானி
நண்பா செம்ம எழுதுக்களில் வேகம் ஈர்ப்பு என ஆனிதரமான வார்த்தைகள் பளீர் பளீர் என சத்தத்தோடு ஒடி விளையாடி கட்டுரையில் தவழ்ந்துள்ளது
Good Clarity
Good things will happen as per our Dream