“ஜெய் பீம்” சர்ச்சைகள்: யார் பக்கம் நிற்கலாம்?

“ஜெய் பீம்” பட சர்ச்சைகளில் “We Stand With Surya” என சூர்யாவுக்கு ஆதரவாக ஒரு தரப்பும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவாக இன்னொரு தரப்பும் என ஆதரவு பிரிந்து கிடக்கிறது. பிரச்சினை என்ன என்பதை நேர்கொண்ட பார்வையோடு (அஜீத் படம் இல்லைங்க) அணுகியதன் விளைவாக இந்த பதிவு.

படத்தை பற்றி சுருக்கமாக –

ராசாக்கண்ணு என்ற பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்படுகிறார். போலீஸ் சித்ரவதையால் லாக்கப்பில் மரணமடைகிறார். இதை மறைத்து, அவர் தப்பியோடிவிட்டதாக போலீஸ் சொல்கிறது. உண்மையை வெளிக்கொண்டுவர அவர் மனைவி பார்வதி (படத்தில் “செங்கேணி”), வக்கீல் சந்துருவின் (இவர் பின்னாளில் தலைமை நீதிபதியாகவும் இருந்தார்) உதவியுடன் நடத்திய சட்டப் போராட்டமே படத்தின் கதைக்கரு. இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து சினிமாவிற்கேற்ப சில புனைவுகளை செய்து நம் பார்வைக்கு தந்திருக்கிறார்கள்.

சர்ச்சைகள் –

பொதுவான சினிமா ரசிகராக படத்தை பார்க்கும்பொழுது நமக்கு பெரிதாக குறை சொல்ல ஏதுமில்லை. “அதிகார வர்க்கம் vs பழங்குடி மக்கள் துயரம்” என்ற செய்தியை நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதே நேரம், படத்தை பற்றிய சர்ச்சைகள் சில நுணுக்கங்களில் அடங்கி இருக்கிறது.

உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து புனைவுகள் சேர்க்கப்பட்ட கதை என்றாலும், இரண்டு முக்கிய கதாபாத்திரங்களுக்கு மட்டுமே பெயர் மாற்றம் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதியின் பெயர் செங்கேணி எனவும், முக்கிய குற்றவாளியான சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிசாமியின் பெயர் குருமூர்த்தி எனவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சை #1
ஒரு காட்சியில், குருமூர்த்தியின் வீட்டில் வன்னியர் அமைப்பு சம்பந்தப்பட்ட காலண்டர் இருப்பதாக காட்டப்படுகிறது (சர்ச்சை எழுந்தபின், இந்த காலண்டரில் இருந்த படத்தை படக்குழுவினர் மாற்றிவிட்டார்கள்). பாட்டாளி மக்கள் கட்சியும் வேறு சில வன்னியர் அமைப்புகளும் குருமூர்த்தி என்ற பெயர் மாற்றத்திற்கும் (இந்த பெயர் “காடுவெட்டி” குருவை குறிப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்), வன்னியர் அமைப்பை குறிக்கும் காலண்டர் வைக்கப்பட்டதற்கும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். இது போக மேலும் சில கேள்விகளை முன்வைத்து அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவிற்கு ஒரு கடிதம் வெளியிட்டார் (அதற்கு சூர்யா பதில் கடிதமும் வெளியிட்டார்). இது போக “நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும்” என பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஒருவர் பகிரங்கமாக அறிவித்து இருந்தார்.

சர்ச்சை #2
திரைப்படம் வெளிவந்தபின் பார்வதியிடம் (ராசக்கண்ணுவின் மனைவி) மீடியா பேட்டி கண்டது. அதன்படி, படத்தின் தயாரிப்பு தரப்பு (சூர்யா தரப்பு) இந்த கதையை படமாக்க எந்த முன் அனுமதியும் பெறவில்லை என்பதும், அவருக்கு எந்த நிதியுதவியும் செய்யவில்லை என்பதும் தெரியவந்தது (இந்த பேட்டிக்குப் பின், சூர்யா நிதியுதவி செய்தார்). இதனை முன்வைத்து, சூர்யா தரப்பின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்னவென்றால் – “படத்தில் பார்வதியின் பெயர் செங்கேணி என மாற்றப்பட காரணமே, பார்வதிக்கான royaltyயை தவிர்க்கத்தான்”.

சர்ச்சைகள் குறித்த நம் பார்வை –

  • மத ரீதியில் ஏதும் பிரச்சினை வந்துவிட வேண்டாம் என்ற எண்ணத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிசாமி பெயரை மாற்றியிருக்கலாம் என்பது நம் அனுமானம். அது தப்பில்லை. அதே போல, குருமூர்த்தி என்ற பெயரும் வன்னியர் சமூகத்திற்கு மட்டுமே உரித்தான பெயரும் அல்ல. அதனால் “அந்தோணிசாமி to குருமூர்த்தி” பெயர் மாற்றத்தை தவறாகப் பார்க்கவில்லை.
  • குருமூர்த்தி என்ற பெயர் மாற்றம் தவறில்லை என்றாலும், அந்த சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் வன்னியர் அமைப்பு காலண்டர் இருப்பதாகக் காட்டப்பட்டது கவனக்குறைவால் நிகழ்ந்துவிட்டது என்ற படக்குழுவினரின் வாதம் மிக பலவீனமாக இருக்கிறது. 1995 காலகட்டத்தை திரையில் காண்பிக்க படத்தின் ஆர்ட் டைரக்ஷன் குழு மெனக்கெட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. அந்த கோணத்தில் பார்க்கும்போது, “சந்துரு” வீட்டு காலண்டரில் குறியீடு இல்லை; ஆனால் “குருமூர்த்தி” வீட்டு காலண்டரில் குறியீடு இருப்பது என்பது நெருடல்.
  • “சூர்யாவை அடிக்க வேண்டும்”, “சூர்யா படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம்” என்பது போன்ற வன்முறை சார்ந்த நிலைப்பாடுகள் ஆபத்தானவை. சற்றும் ஏற்கத்தக்கதல்ல.
  • பார்வதியிடம் முன் அனுமதி பெற்றே இந்த படம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்து சரியானதாகத் தெரியவில்லை. பொதுவாக, ஒருவர் எழுதிய கதையை படமாக எடுத்தால் அந்த எழுத்தாளரின் அனுமதி பெறுவது, அவருக்கு royalty போன்ற விஷயங்கள் உள்ளே வரும். ஆனால், ஒருவர் வாழ்க்கைக் கதையை அடிப்படையாக வைத்து எடுத்தால் அதற்கு அனுமதி வாங்க வேண்டுமா, royalty தரவேண்டுமா என்பது கேள்விக்குரியதே. “இருவர்” படம் எடுக்கும் முன், இயக்குனர் மணிரத்னம் கலைஞர் தரப்பிலோ எம்ஜிஆர் தரப்பிலோ அனுமதி வாங்கியதாகத் தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன் “காதல்” என்றொரு படம் வந்தது. அதன் இயக்குனர் பாலாஜி சக்திவேல் அந்த படத்தின் இறுதியில் ஒரு விஷயத்தை சொல்லுவார் – ஒரு ட்ரெய்ன் பயணத்தில் “ஐஸ்வர்யா”வின் (படத்தின் நாயகி) கணவரை சந்தித்ததாகவும், அவர் மூலமாகவே ஐஸ்வர்யா-முருகன் காதல் கதை தெரிந்து அதன் பாதிப்பில் படம் எடுத்ததாகவும் சொல்லுவார். பாலாஜி சக்திவேல் “ஐஸ்வர்யா”விடம் அனுமதி வாங்கினாரா என்பதோ, படத்தயாரிப்பு நிறுவனம் royalty தந்ததா என்பதோ தெரியவில்லை. அதனால், சட்ட ரீதியில் அனுமதி தேவையில்லை எனில், பார்வதியிடம் அனுமதி வாங்காமலே படம் எடுத்திருந்தாலும் தப்பில்லை என்றே தோன்றுகிறது.
  • பார்வதியின் அனுமதி வாங்காவிட்டாலும், தார்மீக ரீதியில் அவரை முன்பே தொடர்புகொண்டு அவர் நிலை அறிந்து அவருக்கு கணிசமான நிதியுதவியோ அல்லது பொருளாதார மேம்பாட்டுக்கான உதவியோ சூர்யா தரப்பு செய்திருக்க வேண்டும். படத்தில் “நீதி கேட்கும் செங்கேணிதான் நம் கண்முன் நிற்கும் கண்ணகி, இந்த வழக்குதான் இன்றைய சிலப்பதிகாரம்” என வசனம் பேசிவிட்டு, பார்வதியின் தற்கால நிலை பற்றி எந்த அக்கறையும் கொள்ளாமல் இருந்தது சரியாகப்படவில்லை. [தற்போது சூர்யா பார்வதிக்கு செய்துள்ள நிதியுதவி தாமதமானது என்பது நம் பார்வை].
  • செங்கேணி என்ற பெயர் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும், ராசாக்கண்ணுவின் பெயரை அப்படியே வைத்தவர்கள் பார்வதியின் பெயரை ஏன் மாற்றினார்கள் என்பது புரிபடவில்லை. மாற்றாமல் இருந்திருக்கலாம்.

முடிவாக –

மேலே சொன்ன அலசலுக்கு பிறகு, நம்மால் இரண்டில் ஒரு தரப்பினர் பக்கம் முழுமையாக நின்றுவிடமுடியவில்லை என்பதே நிதர்சனம்.

வன்னியர் சமூகம் குறிவைக்கப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டில் சாரம் இருக்கிறது. அவர்கள் கோபம் நியாயமானது, ஆனால் மிரட்டல் ஏற்கமுடியாதது. சட்டத்தையும் ஜனநாயகத்தையும் மதிப்பவர்கள் மிரட்டலை/அடிதடியை ஆயுதமாக எடுப்பது சரியல்ல.

பழங்குடி சமூகம் அதிகார வர்க்கத்தால் எப்படி கிள்ளுக்கீரையாக பயன்படுத்தப்பட்டது என்பதை நேர்த்தியான திரைப்படத்தின் மூலம் வெளிக்கொண்டுவந்த “ஜெய் பீம்” படக்குழுவின் முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால், படத்தினுள் “காலண்டர்”விவகாரமும், படத்துக்கு வெளியே “பார்வதிக்கு நிதியுதவி” சர்ச்சையும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். உள்நோக்கம் ஏதும் இல்லையென்றால், சூர்யா தரப்பு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிப்பதில் தவறில்லை.

Comments
  1. 3 years ago

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!