முகிலினங்கள் அழுகிறதே
காதல், கனிவு, கருணை – இவை மூன்றும் குழைத்து அதற்கு ஒரு குரலை உருவமாக தந்தால், அது திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் (எஸ்.பி.பி) குரலாக மட்டுமே இருக்க முடியும்.
ஒரு பாடலுக்கு இசையும் குரலும் ஜீவன் தருகின்றன என்றால் மிகையாகாது. அப்படி ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு தன் குரல் மூலம் ஜீவன் தந்த ஜீவன் எஸ்.பி.பியின் மறைவு, (கொரோனாவை ஏவிய) சீனாவின் மீதான கோபத்தை பன்மடங்காக்குகிறது. இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டியவரை, சமீபத்தில் கூட உற்சாகமாய் பாடல் பாடியவரை கொண்டு செல்லக் காரணமான கொரோனாவை சீக்கிரம் கொன்றுபோட வேண்டும்.
“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பதற்கு சிறந்த உதாரணமான எஸ்.பி.பியின் இன்முகம் இனி காணக்கிடைக்காது என்பது சொல்லொண்ணா சோகம்தான்.
எஸ்.பி.பி என்ற பாட்டுக்கலைஞனின் பயணம் என் மனதில் பதித்த பல தடங்களில் சில இங்கே –
- “காதலின் தீபம் ஒன்று” (தம்பிக்கு எந்த ஊரு) பாடலுக்கும், “காதலே காதலே என்னை என்ன செய்ய போகிறாய்” (டூயட்) பாடலுக்கும் பத்து வருட இடைவெளி, ஆனால் கேட்பவர்கள் ஒரே அளவில் உருகிப்போவார்கள். உருக்கத்தை உள்ளடக்கிய செருக்கற்ற குரல்.
- “மை நேம் இஸ் பில்லா” (பில்லா) பாடலுக்கும், “நான்தான்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு” (தர்பார்) பாடலுக்கும் நாற்பது வருட இடைவெளி, ஆனால் கேட்பவர்களுக்கு உற்சாகம் ஒரு அவுன்ஸ் கூட குறையாது. இடைப்பட்ட மூன்று நான்கு தலைமுறையையும் ஒரே அளவில் குத்தாட்டம் போடவைக்கும் high energy குரல்.
- பல பாடல்களில் தன் சிரிப்பையே ஒரு ஸ்வரமாக சேர்த்திருப்பார். அது நமக்கு தரும் குதூகலம் விவரிப்பில் அடங்காது.
- எஸ்.பி.பி பாடிய “இளமை இதோ இதோ” (சகலகலா வல்லவன்) இல்லாமல் புத்தாண்டுகள் தொடங்காது. அவர் பாடிய “சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்” (உதய கீதம்) பாடல் இடம்பெறாத கல்லூரி விழாக்கள் இருக்க முடியாது.
- “உங்களுக்கு விருப்பமான டாப் 20 தமிழ் சினிமா பாடல்கள் சொல்லுங்கள்” எனக் கேட்டு, யாருடைய விருப்ப பாடல்கள் பார்த்தாலும், அதில் குறைந்தது 10 பாடல்களில் எஸ்.பி.பியின் குரல் இருக்கும்.
டி.ஆர்.பி ரேட்டிங்களுக்காக பாட்டு போட்டிகளில் சிறுவர்களை அழவைத்துக்கொண்டிருந்த நிகழ்ச்சிகளுக்கு மத்தியில், எஸ்.பி.பி. பொறுமையான + பக்குவமான + சாந்தமான நடுவராக (ஜெயா டிவியில்) செயல்பட்டு புத்துணர்ச்சி தந்தார்.
பாடகராக மட்டுமில்லாமல் நடிப்பிலும் நம்மை ஈர்த்தவர் எஸ்.பி.பி. “மனதில் உறுதி வேண்டும்” டாக்டரும், “காதலன்” அப்பாவும் மறக்கமுடியாதவர்கள்.
கோபம், படபடப்பு என எதிர்மறை எண்ணங்களால் சூழப்படும் சமயம், எஸ்.பி.பியின் பாடல்கள் கேட்டால் சற்றேனும் சாத்வீகம் நம்முள் இறங்கும். எஸ்.பி.பியின் குரல் –
- நம்மை உருக வைக்கும் குரல்
- நம் காயங்களை உலர வைக்கும் குரல்
- நம்மை உறங்க வைக்கும் குரல்
அந்தக் குரலுக்கு என்றும் உறக்கமில்லை.
Lovely bro❤️?❤️ அந்த குரலுக்கு என்றும் உறக்கமில்லை??