காலா – வாளா?

காலா – இது, ரஜினி நடித்திருப்பதால் இன்னும் திரையரங்கை விட்டு ஓடாத “இரஞ்சித் படம்”. ரஜினி என்ற மாஸ் ஹீரோவை சரிவர பயன்படுத்தவில்லை என்ற ஆதங்கம் ஒரு ரஜினி ரசிகனாக எனக்கு உண்டு. அப்புறம் எதுக்குப்பா விமர்சன பதிவுன்னு கேள்வி வருதுல்ல? பொதுவா சமூக பிரச்சினைகளை கருவாக கொண்ட படங்களை நான் ஆழமாக பார்ப்பது உண்டு. அந்த வகையில் இந்த பதிவு காலா திரைப்படத்தின் சமூக பார்வை பற்றியது.

“நகர்ப்புற ஏழைகள் (முக்கியமாக சேரிகளில் வசிப்பவர்கள்) அவர்கள் இருக்கும் இடங்களில் இருந்து விரட்டியடிக்கபடுகிறார்கள். அவர்கள் இருக்கும் நிலத்தை அரசாங்கத்தின் அதிகார துணையுடன் ரியல் எஸ்டேட் முதலாளிகள் அபகரிக்க முற்படுகிறார்கள். நிலம் அந்த மக்களின் உரிமை” என்பது படம் சொல்ல நினைக்கும் கருத்து என்று நான் கருதுகிறேன் (?!). இந்த “?!”க்கு காரணம், இதைத்தான் இரஞ்சித் சொல்ல வருகிறாரா என்பதை திரைக்கதை தெளிவாக்கவில்லை.

சொல்லுகின்ற பிரச்சினைக்கு எந்த தீர்வையும் முன்வைக்காதது இந்த படத்தின் மிக பெரிய ஓட்டை என்று நினைக்கிறேன். சுயலாபம் இருந்தாலும், வில்லன் ஏதோ ஒரு தீர்வை (அடுக்குமாடி குடியிருப்பு) முன்வைக்கிறார். அதை எதிர்க்கும் கதாநாயகன் தரப்பினர் “எங்ககிட்ட விட்டுடுங்க, நாங்க பார்த்துக்கறோம்” என்று ஆவேசப்படுகிறார்களே தவிர, தீர்வு எதையும் சொல்லவில்லை. அவர்கள் டெண்டர் அதிகாரியிடம் ஒரு பைல் (file) கொடுக்கிறார்கள். கடைசிவரை, அதில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை (எப்படி காலாவின் முழு ரௌடித்தனத்தை பார்க்கமுடியவில்லையோ அதுபோல) பார்க்க முடியவில்லை. இறுதியில், “நிலம் எங்கள் உரிமை” என்று நாயகன் தம் மக்களை உந்திவிட்டு வில்லனை கொலை செய்யவைக்கிறார். ஒரு வகையில் இதுவும் அதிகாரமே.

வில்லன் குழு சேரியை தரைமட்டமாக்கி விட்டு அங்கே அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, அதில் பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு அளிக்க முற்படுகிறது (மீதமுள்ளவர்கள் துரத்தப்படுகிறார்கள்) என்பது குற்றச்சாட்டு. இதை பார்க்கும் போது “முதல்வன்” படத்தில் பார்த்த – சேரிவாழ் மக்களுக்கு மாற்று குடியிருப்பை அரசாங்கமே வழங்கினாலும், அதை அவர்கள் வாடகைக்கு விட்டுவிட்டு சேரியிலேயே வாழ்கிறார்கள் – என்றொரு காட்சி நினைவுக்கு வருகிறது. அது போக, ஒரு நாவலில் படித்த “சேரிவாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு சம்பந்தம் இல்லாத இடத்தில் அரசாங்கம் மாற்று குடியிருப்பை தருவதால், அவர்களால் அதனை ஏற்க முடியவில்லை” என்ற கதைக்கருவும் நினைவுக்கு வந்தது. ஆக, இந்த படம் ஏற்கனவே அரசாங்கம் தீர்வு என நினைத்து செயல்படுத்தும் (அல்லது செயல்படுத்த முனையும்) திட்டத்தை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. அப்படி இருந்திருந்தால், அரசாங்க முயற்சிகளில் உள்ள நடைமுறை கோளாறுகளை வெளிச்சமிட்டு மாற்று சிந்தனையை விதைத்திருக்கலாம்.

வில்லன் “தூய்மை மும்பை” திட்டத்தை முன்னிறுத்தி சேரியை அகற்றி (அடுக்குமாடி குடியிருப்பு வைத்து) நகரை சுத்தமாக்க நினைக்கிறார். சேரியை அகற்ற நினைப்பதை எதிர்ப்பது சரி, அதற்காக தூய்மையையே எதிர்ப்பது எந்தவிதத்தில் சரி? கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன் வந்த (நடிகர் பார்த்திபன் நடித்த) “புதுமைப்பித்தன்” படத்தில் சேரியை சுத்தமாக்கி வாழ்வது போல் காட்சி பார்த்ததாக ஞாபகம். “நீ ஒண்ணும் சுத்தம்ங்கிற பேர்ல எங்களை துரத்த வேணாம், எங்களாலேயே சுத்தமா வச்சுக்க முடியும்”னு சொல்ற மாதிரி ஒரு காட்சியும் இல்லை. “இப்படி அசுத்தமா இருக்கறது எங்க வாழ்க்கைமுறை, இப்படிதான் இருப்போம். இது எங்கள் உரிமை”ன்னு சொல்லாம சொல்ற மாதிரி இருக்கு.

நிகழ்கால போராட்டங்களில் பெண்களில் பங்கும் பாங்கும் மெருகேறியிருப்பதை புயல் சாருமதி, சரீனா, செல்வி கதாபாத்திரங்கள் மூலம் காண்பித்திருப்பது படத்தின் ப்ளஸ்.

“நிலம் – உரிமை” என்பது (படத்தின்) கருவாக இருந்தாலும் “கம்யூனிசம் & திராவிடம் & அம்பேத்கரியம்” vs “இந்துத்வம்” என்று இயக்குனர் முழு கவனம் செலுத்தியிருப்பதால், கரு கலைந்ததை அவர் கவனிக்கவில்லை. அதிகாரவர்க்கத்தை எதிர்த்து குரல் கொடுத்து “உன் அதிகாரம் என்னை சீண்ட முடியாது” என்ற நிலையில் மட்டுமே வைத்தால், அந்த குரல் “அட்டகத்தி” தானேயன்றி தீர்வு தேடும் கூர்வாளல்ல.

Comments
  1. 6 years ago

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!