கலைஞர் எனும் இளைஞர்…

1969 தொடங்கி இன்று வரை எந்த பத்தாண்டுகளை எடுத்துக்கொண்டாலும், அதில் ஓராண்டேனும் தமிழகத்தின் முதல்வராக கலைஞர் மு. கருணாநிதி இருந்திருப்பார். அவரை வெறுத்தாலும் கூட, அவரை தவிர்த்துவிட்டோ கடந்துவிட்டோ தமிழக அரசியல் வரலாறை எழுத முடியாது. “கலைஞர்” என்பது பொதுவான, எந்த கலைஞரையும் குறிக்கக்கூடிய சொல். ஆனால் “கலைஞர்” என்றால் முதலில் மு.க. நினைவில் வருவதுதான் அவர் இந்த தமிழ்நாட்டில் பதித்திருக்கும் ஆழமான சுவட்டின் வெளிப்பாடு.

“யப்பா யப்பா வீரப்பா, வைரவேல் எங்கப்பா?” – இப்படி தி.மு.கவினர் உரக்க கத்தியபடி பிரச்சாரம் செய்த 1986 திருநெல்வேலி இடைத்தேர்தலில்தான் சிறுவனாக அரசியல் காட்சிகளை நேரே பார்த்தேன். அந்த தேர்தல் பிரச்சார சமயத்தில் கலைஞர் அவர்களை நேரில் பார்த்திருக்கிறேன். “உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்திற்கு…” என பேசக் கேட்டிருக்கிறேன். என் அப்பா “திருச்செந்தூர் முருகன் கோவில் வைரவேல் திருட்டு சம்பந்தமாக கலைஞர் காலில் கொப்புளங்களோடு நடை பயணம் செய்திருக்கிறார்” என்று சொன்னதுதான் கலைஞர் பற்றி நான் அறிந்துகொண்ட முதல் விஷயம்.

சில ஆண்டுகளுக்கு பின் கடலூரில் ஒரு மதிய நேர பொதுக்கூட்டம். கலைஞருக்கு முன் பேசிய ஒருவர் “தலைவருக்கு தொண்டை சரியில்லை. அதனால் சில நிமிடங்களே பேசுவார்” என்று அறிவித்தார். அதன் பின் பேசிய கலைஞர் “எனக்கு தொண்டை சரியில்லை என்றாலும் மக்களுக்கு ஆற்றும் தொண்டை என்றும் நிறுத்தமாட்டேன்” என்று பலத்த கைத்தட்டல்களுக்கிடையில் சொன்னது இன்னமும் நினைவில் இருக்கிறது.

1980களில் தமிழகத்தை வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டங்கள் ஆக்கிரமித்திருந்தன. 1989ல் ஆட்சிக்கு வந்தபின் கலைஞர் அந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார். அந்த பிரச்சினை பற்றி சமீபத்தில் ஒரு காணொளி மூலம் நடுநிலையாக நடந்தவைகளை தெரிந்து கொள்ள முடிந்தது. காணொளி பார்த்தபின் என் மனதில் ஓடியது இதுதான் – “அன்றைய காலகட்டத்தில், இந்த பிரச்சினையை அரசியல் சாதுர்யத்துடனும், நிர்வாக திறமையுடனும் கலைஞர் அணுகியிருக்கிறார்”.

1996 தேர்தல் சமயம். அவரது 72 வயதில் கிட்டத்தட்ட 20 மணி நேரம் திருச்சியில் ஒரு மேடையில் இருந்தவாறு மாபெரும் (மாநில மாநாட்டு) பேரணியை பார்வையிட்டு, தொண்டர்களுக்கு கையசைத்து உற்சாகமூட்டி தேர்தல் அனலை பற்றவைத்தார். அவரது உழைப்பு தந்த அந்த எழுச்சியோடு தமிழ் மாநில காங்கிரஸ் உதயமும் ரஜினியின் ஆதரவும் இணைந்து அன்றைய அதிமுக அரசை வீட்டுக்கு அனுப்பியது, தமிழக அரசியலின் முக்கிய மைல்கல். 1996-2001 ஆட்சியில் அவர் கொண்டு வந்த உழவர் சந்தை திட்டம் இன்றைக்கும் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது. அந்த ஆட்சி காலத்தில் (அப்போது மத்திய அரசிலும் திமுக பங்கு வகித்தது) கொண்டுவரப்பட்ட பல போக்குவரத்து உட்கட்டமைப்பு (சாலைகள், பாலங்கள், சென்னை பறக்கும் ரயில்) மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சிக்கு வித்திட்ட திட்டங்கள், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவி புரிந்ததை மறுக்க முடியாது.

சமீபத்தில் தமிழக அரசின் சுகாதார துறையில் பணியாற்றும் ஒரு அதிகாரியுடன் உரையாட நேரிட்டது. 2006-11 ஆட்சி காலத்தில் “கலைஞர் காப்பீட்டு திட்டம்” அமல்படுத்தும் சமயம் ஒரு ஆய்வு கூட்டத்தில், திட்டத்திற்கு தகுதி பெறாத சிலர் தவறான தகவல்கள் கொடுத்து பதிவு செய்துகொள்வது பற்றி பேச்சு வந்ததாம். அப்பொழுது முதல்வர் கலைஞர் “அப்படி எத்தனை பேர் செய்துவிட போகிறார்கள்? அப்படியே செய்தாலும் அவன் உயிரை காப்பாத்தத்தானே இந்த காசு போகும்? போகட்டும் விடுங்க” என்றாராம்.

பொதுவாக 2009 இலங்கை இனப்படுகொலையை கண்டுகொள்ளாமல் விட்டதோடு அதற்கு மறைமுக ஆதரவும் தந்தவர் கலைஞர் என்றொரு குற்றச்சாட்டு உண்டு. எனக்கென்னவோ “விடுதலை புலி ஆதரவுதான் ஈழத்தமிழர் ஆதரவு” என்ற நிலைபாட்டிலிருந்து மாறுபட்டு, 1989-91 ஆட்சியில் விடுதலை புலி அமைப்புக்கு ஆதரவாக இருந்த பாவத்திற்கு 2009ல் பரிகாரம் செய்யும் விதமாக அமைதி காத்தாரோ என தோன்றும். என்ன காரணமாக இருந்தாலும், அன்றைய நிலையில் மத்திய அரசின் வலுவை குறைக்காமல் தேசிய பார்வையோடு இயைத்திருந்தது பாராட்டுக்குரியதே.

ஒருவர் தன் கொள்கைகளை, லட்சியங்களை, பெருங்கனவுகளை நிறைவேற்ற உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்தல் அவசியம். அந்த வகையில் 93 வயது (2016ம் ஆண்டு) வரை ஓய்வின்றி, உடலை கட்டுக்கோப்புடன் வைத்து, எத்தனை இடர் வந்தாலும் மனதை திடமாக வைத்து, நினைவாற்றலுடன் ஆரோக்கிய வாழ்வை வாழ்ந்து காட்டியவர் கலைஞர்.

இவ்வளவு நல்ல விஷயங்கள் சொன்னாலும் – கட்சிக்காரர்களுக்கு அரசு கான்ட்ராக்ட் ஒதுக்கீடு கலாசாரம், கட்சியில் மற்றும் ஆட்சியில் குடும்பத்தினர் ஆதிக்கம், சர்க்காரியா கமிஷன் சொன்ன “விஞ்ஞான முறை ஊழல்” கலாசாரம், இந்துமத கடவுள்களை மட்டும் இடித்து பேசும் போலி நாத்திகவாதம், ஆத்திக மஞ்சள் நிற துண்டு அணிந்தது ஏன் என்றதற்கு பகுத்தறிவுக்கு உட்பட்டு பதிலேதும் சொல்லாத நிலை, சிறுபான்மையினரை குறிவைத்த ஓட்டுவங்கி அரசியல், கைகொடுத்திருந்தால் ஒரு தமிழரை (ஜி.கே. மூப்பனார்) 1997ல் பிரதமர் பதவியில் அமர்த்தியிருக்கமுடியும் என்றாலும் கம்யூனிஸ்ட்களுடன் கைகோர்த்து அது நடக்காமல் பார்த்துக்கொண்டது, பதவிக்காக கொள்கை ரீதியில் முற்றிலும் முரண்பட்ட பாஜகவுடன் 1999லிருந்து 5 ஆண்டு கூட்டணி (அரசியல் ரீதியாக அது சாணக்கியத்தனம்), அதே பதவிக்காக (பதவிக்காலம் முடியும் வரை மத்திய பாஜக அமைச்சரவையில் இருந்துவிட்டு) அடுத்த நாடாளுமன்ற தேர்தலிலேயே (எதிர் முகாமிலிருந்த) காங்கிரஸுடன் கூட்டணி, மத்திய அமைச்சரவையில் இன்னின்ன துறைகள்தான் வேண்டும் என “பசையுள்ள” துறைகளை கேட்டு பெற்றது, இலவச டிவி மூலம் இலவச கலாசாரத்தை இன்னுமொரு படி கீழே இறக்கியது, மாவட்ட செயலாளர்கள் குறுநில மன்னர்கள் போல் செயல்பட்டு நில அபகரிப்புகளில் ஈடுபட்டதை கண்டும் காணாமல் இருந்தது, கால மாற்றத்திற்கேற்ப சமூக நீதியில் நவீனம் புகுத்தாதது என கலைஞர் மீதான அதிருப்திகளின் பட்டியலும் சற்று நீளமே.

எது எப்படியோ – நாடகம், சினிமா, இலக்கியம், மேடைத் தமிழ், அரசியல் என பல கலைகளில் தனித்தடம் பதித்து, உழைப்புக்கு பேருதாரணமாய் வாழ்ந்த கலைஞர் 95 வயது இளைஞர். அவரைப் போன்ற ஒருவரை இனி தமிழகம் காண்பதரிது. அவரது நல்ல பங்களிப்புகளுக்கு நன்றி சொல்லி அவருக்கு விடைகொடுக்கும் இந்த நேரத்தில் உதிக்கும் கேள்வி – “இரண்டாண்டு இடைவெளியில் தன் ஆளுமை முகங்களை இழந்து நிற்கிறது தமிழகம். அடுத்த முகம் எங்கே?”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *