நரேந்திர மோடியின் ஆட்சி: டாப் 10 திருப்தி & அதிருப்தி
2014ல் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என வாக்களித்த வாக்காளர்களில் நானும் ஒருவன். தற்போது மோடி ஐந்தாண்டு ஆட்சியை நிறைவு செய்யும் சமயம், அவரது ஆட்சியை ஒரு குடிமகனாக திரும்பி பார்க்கிறேன். அத்தகைய பார்வையில், மோடியின் ஆட்சியில் திருப்திகரமாக அமைந்த 10 அம்சங்களையும், அதிருப்தி அளித்த 10 அம்சங்களையும் இங்கே பதிவிடுகிறேன்.
நான் அரசியல் விமர்சகனோ அரசியல் விஞ்ஞானியோ அல்ல. ஒரு குடிமகனாக, நான் பார்த்த மற்றும் கேட்ட செய்திகளின் அடிப்படையிலும், பொதுவான அரசியல் அறிவு கொண்டும் இந்த “திருப்தி & அதிருப்தி” பட்டியலை தயாரித்து இருக்கிறேன்.
டாப் 10 திருப்தி 🙂 பட்டியல்
குறிப்பு: விரிவான பார்வைக்கு அந்தந்த தலைப்பை (உதாரணம் – “தேச பாதுகாப்பு”) க்ளிக் செய்யவும்.
டாப் 10 அதிருப்தி 🙁 பட்டியல்
குறிப்பு: விரிவான பார்வைக்கு அந்தந்த தலைப்பை (உதாரணம் – “ரொக்க பரிவர்த்தனை”) க்ளிக் செய்யவும்.
திருப்திகள் 🙂 – விரிவான பார்வை
தேச பாதுகாப்பு
தேச பாதுகாப்பை பொறுத்தவரை, மோடி அரசு முந்தைய பல அரசுகளை விட மிக சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் பாகிஸ்தான் ஆதரவுடன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால், இந்தியா மேலை நாடுகளின் கண்டன அறிக்கைகள் வந்தாலே “பார்த்தியா, அமெரிக்கா எங்க பக்கம்; ஆஸ்திரேலியா எங்க பக்கம்” என்று திருப்திப்பட்டு கொள்ளும். ஆனால், மோடியின் ஆட்சியில் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக “துல்லிய தாக்குதல்” நடத்த இந்திய ராணுவத்திற்கு அனுமதி தரப்பட்டது. அதன் விளைவாக முன்னெப்போதும் இல்லாத வகையில் உரி மற்றும் புல்வாமா தீவிரவாத தாக்குதல்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டது. வடகிழக்கு எல்லையில் டோக்லாம் அருகே சீனாவின் ஆதிக்க செயலுக்கு எதிர்வினையாக இந்திய ராணுவமும் பலம் காட்டியது. “இந்தியா அமைதி என்ற பெயரில் அடங்கி போகும்” என்ற பிம்பத்தை உடைத்த இந்த செயல்கள் மிகுந்த பாராட்டுக்குரியவை. [டாப் 10 திருப்தி பட்டியல்]
வெளியுறவுத்துறை
மோடியின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து நிறைய கிண்டல்களும் கேலிகளும் உள்ளன. ஆனால், அத்தகைய பயணங்கள் நல்ல பயன் அளித்ததாகவே நான் கருதுகிறேன். இந்தியாவின் துல்லிய தாக்குதல்களுக்கு மேலை நாடுகள் “நாட்டாமை” கருத்து அளிக்காததும், மத்திய கிழக்கு நாடுகள் இந்தியாவுடனான உறவில் இணக்கத்தை அதிகரித்ததும் மோடி பயணங்களின் நல்விளைவே.
மேலும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது அமைச்சகத்தை வெளிநாடுகளில் வாழும் (அல்லது பயணிக்கும்) இந்தியர்களுக்கு தோழமையான அமைச்சகமாக மாற்றிவிட்டார். வெளிநாட்டில் இந்தியர்கள் என்ன கஷ்டத்திலிருந்தாலும் சரி, ஒரு ட்வீட் போட்டால் போதும்; வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவி செய்யும் என்ற நிலைக்கு உயர்த்திவிட்டார். வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இந்த புதிய கலாச்சாரம் தொடர வாழ்த்துவோம், பிரார்த்திப்போம்.
உள்கட்டமைப்பு வளர்ச்சி
உள்கட்டமைப்பு வளர்ச்சியில் மோடி அரசு சாதித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். பிரதான எதிர்க்கட்சிகள் கூட இவ்விஷயத்தை மறுக்கவில்லை. சில முக்கியமான சாதனைகள் –
- கிட்டத்தட்ட 6 லட்சம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியது.
- ஒரு நாளைக்கு 7 கிலோமீட்டர் என்ற அளவில் 2014ல் இருந்த சாலை அமைத்தல்/விரிவாக்குதல்/செப்பனிடுதல் என்பதை ஒரு நாளைக்கு 30 கிலோமீட்டர் என்று உயர்த்தியது [மொத்த கிலோமீட்டர் அடிப்படையில் பார்த்தால் முந்தைய அரசை விட 70% அதிகமான கிலோமீட்டர் சாலைகள்].
- உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து தடங்களில் பெருமுன்னேற்றம்: கங்கை நதி வழியே சரக்கு கப்பல்கள் போவதற்கு வழி செய்யப்பட்டு போக்குவரத்து செலவு குறைக்கப்பட்டிருக்கிறது. இது “சாகர் மாலா” திட்டத்தின் ஒரு அங்கமாகும்.
என்ஜிஓ & ஷெல் நிறுவனங்கள் கட்டுப்பாடு
கிட்டத்தட்ட 20,000 அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு (NGO/என்ஜிஓ) அளிக்கப்பட்டிருந்த “வெளிநாட்டு பங்களிப்பு” (FCRA) லைசென்ஸ்களை மோடி அரசு ரத்து செய்தது. இது தைரியமான, திடமான செயல் ஆகும். இதன் மூலம் “சமூக சேவை” என்ற போர்வையில் இயங்கும் பல நிறுவனங்கள் வெளிநாட்டு உதவியுடன் “இந்தியாவிற்கு எதிரான” செயல்களை செய்வது முடக்கப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3 லட்சம் ஷெல் நிறுவனங்களின் (பண கையாடல்களுக்கும், வரி ஏய்க்கவும் நிறுவப்பட்டவை) பதிவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. கருப்பு பணத்தை குறைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்பதை மறுக்க முடியாது. சமீபத்தில், நிறுவனங்களின் நிலக்குறியீட்டு (geotag) விவரங்களையும் பெறுவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் போலி நிறுவனங்களின் பதிவுகளை பெருமளவு குறைக்கலாம். [டாப் 10 திருப்தி பட்டியல்]
நீண்ட கால திட்டங்கள்
நீண்ட கால அடிப்படையில் நன்மை தரக்கூடிய சில திட்டங்கள் மோடியின் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன – சாகர் மாலா, தூய்மை கங்கை, கேலோ இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா. இவற்றில் கீழ்கண்ட மூன்று திட்டங்கள் அதிக கவனம் ஈர்ப்பவை –
- சாகர் மாலா – இத்திட்டம் துறைமுகங்களையும் பல நீர்வழி போக்குவரத்து தடங்களையும் இணைத்து தொழில் வளர்ச்சியை பெருக்கவல்லது. இத்திட்டத்தின் மூலம் கடற்கையோர வேலைவாய்ப்பு மண்டலங்கள் (Coastal Employment Zones) முக்கிய துறைமுகங்களுக்கு அருகில் அமைக்கப்படும்.
- தூய்மை கங்கை – கங்கை நதியை தூய்மைப்படுத்த எடுக்கப்பட்டுள்ள பிரத்யேக முயற்சிகள் பாராட்டுக்குரியவை. 2014-2019 காலத்தில், கங்கையில் விழும் கழிவுகளை சுத்திகரிக்கும் திறன் 8 மடங்கு (ஒரு நாளைக்கு 485 மில்லியன் லிட்டர் என்ற அளவிலிருந்து 4000 மில்லியன் லிட்டர் அளவிற்கு) அதிகரிக்கப்பட்டுள்ளது.
- கேலோ இந்தியா – இது தேசிய அளவில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் திட்டம். இதன் முக்கிய அம்சம் என்னவெனில், விளையாட்டு திறமை சிறுவயதிலேயே (10 வயது) கண்டறியப்பட்டு நிதியுதவியும் (ஆண்டுக்கு 5 லட்சம் என 8 வருடத்திற்கு) அளிக்கப்படுவதுதான்.
வட கிழக்கு இந்தியா முன்னேற்றம்
“ஏழு சகோதரிகள்” என சொல்லப்படும் ஏழு வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி இந்தியாவின் நீண்டகால ஒற்றுமைக்கும், அண்டை நாடுகளின் எதிர்மறை தாக்கத்திலிருந்து அம்மாநிலங்களை காக்கவும் உதவும். அவ்வகையில் மோடி அரசு வடகிழக்கு மாநிலங்களுக்கு தனிக்கவனம் செலுத்தியிருக்கிறது. சில முக்கிய சாதனைகள்/திட்டங்கள் –
- சிக்கிமில் பக்யோங் விமான நிலையம் கட்டியது.
- போகிபீல் பாலம் கட்டுமான பணியை நிறைவு செய்தது (60% பணிகள் மோடி ஆட்சியில் நிகழ்ந்தது); இதன் மூலம் பிரம்மபுத்ரா நதி மேலே அஸ்ஸாமிலிருந்து அருணாச்சல பிரதேசம் போக முடியும், 4 மணி நேர சேமிப்புடன்.
- டெல்லியிலிருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு சிறப்பு ரயில் (அருணாச்சல் எக்ஸ்பிரஸ்) சேவை தொடங்கியது.
- அஸ்ஸாமையும் அருணாச்சல பிரதேசத்தையும் இணைக்கும் தோலா சதியா பாலம் கட்டுமானத்தை நிறைவு செய்தது.
- கவுஹாத்தியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியது.
ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி)
ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) பற்றி பல விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அது இந்தியாவின் வரி சீர்திருத்த வரலாற்றில் முக்கியமான மைல்கல் என்பதை மறுக்க இயலாது. ஜி.எஸ்.டி பற்றிய ஆரம்ப கால எண்ணங்கள் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் விவாதிக்கப்பட்டன. பின்னர் மன்மோகனின் பத்தாண்டு கால ஆட்சியில் ஜி.எஸ்.டி விவாத பொருளாக மட்டுமே இருந்தது. மோடி அரசு விவேகத்துடனும் முனைப்புடனும் ஜி.எஸ்.டியை அமல்படுத்தியது போற்றத்தக்கது. ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்த சமயம் சில இடர்பாடுகள் இருக்கவே செய்தன. இன்றும் சிற்சில பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால், இது போன்ற பெரிய திட்டத்தில் சில இன்னல்கள் இருக்கவே செய்யும் என்பது நிதர்சனம். படிப்படியாக ஜி.எஸ்.டி கவுன்சில் அத்தைகைய இன்னல்களை களைந்து வந்திருக்கிறது என்பதும் நடைமுறை உண்மை. [டாப் 10 திருப்தி பட்டியல்]
மருத்துவ/சுகாதார முக்கியத்துவம்
மோடி அரசு சுகாதாரத்துறையில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கான சில அடிப்படை மாற்றங்களை செய்துள்ளது. அவற்றில் இரண்டு செயல்திட்டங்கள் முக்கியமானவை –
- மீண்டும் கொண்டு வரப்பட்ட “ஜன் ஆஷாதி” திட்டம்: இந்த திட்டத்தின் மூலம் குறைந்த விலையில் தரமான மருந்துகளை பெற முடியும்
- புதிய திருத்தங்களுடனும் தீர்வுகளுடனும் வெளியிடப்பட்டுள்ள “தேசிய சுகாதார கொள்கை” (National Health Policy) – இந்த கொள்கை ஆரம்ப நிலை சுகாதார நிலையங்களை வலுப்படுத்துகிறது, இந்திய முறை மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது, ஏழை எளியோர்க்கு “ஆயுஷ்மான் பாரத்” மருத்துவ காப்பீடு வழங்குகிறது
ஊழல் குறைப்பு
மேல்மட்ட ஊழலை குறைப்பது, சொங்கித்தனமாக செயல்பட்ட அரசு நிர்வாகத்தை முடுக்கிவிட்டது (உதாரணம் – மத்திய அரசு ஊழியர்களின் வருகை பதிவு கண்காணிப்பு) மற்றும் அரசு வேலைகளுக்கு இடைத்தரகர்களையும் லஞ்சத்தையும் அனுமதிக்காதது (உதாரணம் – மத்திய அரசின் ஜூனியர் பணிகளுக்கு நேர்காணல் ரத்து) என மோடி ஊழல் தடுப்பில் பெரும் முனைப்பு காட்டியிருக்கிறார்.
ஊழல் குறைப்பு என பேசும்போது “அப்போ ரஃபேல்?” என்ற கேள்வி வருவது இயற்கை. எனக்கென்னவோ “ஊழல் நடந்திருக்கிறது” என்று ஒரு கருத்தை திணிக்கும் வகையிலேயே ரஃபேல் குறித்த விவாதங்கள் நடைபெறுவதாக தோன்றுகிறது. முந்தைய அரசின் ஒப்பந்தமும் இந்த அரசின் ஒப்பந்தமும் வெவ்வேறானவை; அவை ஒரே தராசில் ஒப்பிட முடியாதவை என்றே நினைக்கிறேன். அனில் அம்பானியின் நிறுவனம் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் எதிர்க்கட்சிகளுக்கு வசதியாக போய்விட்டது. தற்போதைய நிலையில், ரஃபேல் குறித்து டிசம்பர் 2018ல் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை (அது மோடி அரசின் செயல்பாட்டில் குற்றம் காணவில்லை) ஏற்பதே சரி என எண்ணுகிறேன்.
தொழில் செய்ய உகந்த நாடு – தரவரிசை முன்னேற்றம்
உலக வங்கியின் “தொழில் செய்ய உகந்த நாடு” தரவரிசை பட்டியலில் இந்தியா 2014ல் 134வது இடத்தில் இருந்தது. பெரும் பாய்ச்சலாக 2018ல் 77வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்றைய நிலையில், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலமாகவே 7லிருந்து 10 நாட்களுக்குள் ஒரு தனியார் நிறுவனத்தை பதிவு செய்துவிட முடியும். இது தொழில் முனைவோருக்கு பெரும் வரப்பிரசாதம். அது போக, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு “59 நிமிடங்களில் பொதுத்துறை வங்கி கடன்” என்ற திட்டமும் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் திட்டமே. [டாப் 10 திருப்தி பட்டியல்]
அதிருப்திகள் 🙁 – விரிவான பார்வை
சீரற்ற மக்கள் தொடர்பு
கடந்த ஐந்தாண்டுகளில் பிரதமர் மோடி நிறைய பேரணிகளில் உரையாற்றினார். மாதந்தோறும் ரேடியோவில் உரையாற்றினார். ட்விட்டரில் நிறைய ட்வீட்கள் பதிவிட்டார். நிதியமைச்சர் ஜேட்லி வலைப்பதிவுகள், முகநூல் பதிவுகள் என எழுதி இருக்கிறார். என்றாலும், மக்களுடனான தகவல் தொடர்பு நெருங்கி இருந்ததாக தோன்றவில்லை.
உதாரணமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product – GDP) சார்ந்த எண்கள் திரித்து வெளியிடப்பட்டதாக எதிர்க்கட்சிகளும் பத்திரிக்கைகளும் குற்றம் சாட்டின (பாஜக அரசுக்கு பாதகமான எண்கள் வந்தபோது இந்த குற்றச்சாட்டு எழவில்லை என்பது வேறு விஷயம்). அப்பொழுதெல்லாம், அரசின் சார்பாக யாரும் வலுவான பதில்களை தரவில்லை. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு நடந்தபொழுது, சில மந்திரிகள் – குறிப்பாக சிதம்பரம், கபில் சிபல், ஜெயராம் ரமேஷ் – அரசின் சார்பாக வாதங்களை முன்வைப்பார்கள். அது போல், இந்த அரசில் பெரிதாக எதுவும் நடக்கவில்லை (அவ்வப்பொழுது ஜேட்லி பத்திரிக்கையாளர்களை சந்திப்பார்). “பதிலில்லை” அல்லது “இனிமே பதில் சொன்னா என்ன, சொல்லாட்டி என்ன” என்ற நிலையில் பதில் என்றே பெரும்பாலும் நிகழ்ந்தது.
பாஜகவுக்கும் மீடியாவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கலாம். அதற்காக மக்கள் இருதரப்பு வாதங்களையும் கேட்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட கூடாது.
தென் இந்தியா கவனமின்மை
பெருமளவிற்கு, மோடி அரசு சரிவர தென் மாநிலங்களை கவனிக்கவில்லை என்றே கருதுகிறேன். உதாரணமாக இரண்டு விஷயங்கள் –
மக்களவையில் மோடி அரசுக்கு அறுதிப் பெரும்பான்மை. 2014க்கு பின் வந்த மாநில சட்டமன்ற தேர்தல்களில் பெரும்பாலும் பாஜகவுக்கு வெற்றி. இப்படி பலத்துடன் இருந்த மோடி நீண்டகால பிரச்சினையான காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு கண்டிருக்கலாம். நடந்ததென்னவோ – உச்சநீதிமன்றம் சொல்லியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவே சில மாதங்கள் ஆனது. அந்த தாமதத்திற்கு காரணம் “கர்நாடக சட்டமன்ற தேர்தலும், வாரியம் பாஜக வெற்றிவாய்ப்பை கெடுக்கக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையும்” என்ற குற்றச்சாட்டை ஏற்க தோன்றுகிறது.
உச்சநீதிமன்றம் கொடுத்த சபரிமலை தீர்ப்பை “இதுதான் சாக்கு” என்று கேரள கம்யூனிஸ்ட் அரசு வேகவேகமாக நிறைவேற்ற துடித்தது. பக்தர்கள் கொந்தளித்தபோதும் மத்திய பாஜக அரசு மௌனமாகவே இருந்தது. “நீதிமன்ற தீர்ப்பு, மத்திய அரசு என்ன செய்ய இயலும்” என்ற வாதம் ஏற்கத்தக்கதாக இல்லை.
ஐமுகூ ஊழல் வழக்குகள் கவனமின்மை
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி (ஐமுகூ) அரசில் நிறைய ஊழல் குற்றச்சாட்டுகள். அவையெல்லாம் நீதிமன்றத்தில் வழக்குகளாக இருந்தன/இருக்கின்றன. இந்த ஐந்தாண்டுகளில் “ஊழல் செய்தவர்” என்று சொல்லப்பட்ட ஒருவர் கூட தண்டனை பெறவில்லை. இந்த வழக்குகளில் மோடி அரசு தனிக்கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
மேற்சொன்ன தனிக்கவனத்திற்கு முன்னுதாரணம் தமிழ்நாட்டில் இருக்கிறது – 1996ல் ஆட்சி அமைத்ததும் கருணாநிதி, 1991-96 ஜெயலலிதா ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரிக்க விசேஷ நீதிமன்றம் அமைத்தார். ஆட்சி மாறியபோதும் திமுகவை வழக்கில் இணைத்து, ஜெயலலிதாவிற்கு தண்டனை பெற்றுத்தர முழு முனைப்பு காட்டினார்.
பெட்ரோல், டீசல் விலையுயர்வு
2009-14 மன்மோகன் சிங் ஆட்சியில் பெட்ரோல் விலை ரூ.80/-ஐ தொட்டது. பொருளாதார ரீதியில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், பொதுமக்களுக்கு அவை ஏற்புடையதாக இல்லை. மோடி ஆட்சியின் ஆரம்ப காலத்தில் பெட்ரோல் விலை குறைந்து ரூ.60+ அளவில் இருந்தது. என்றாலும் அந்த நிலை ரொம்ப நாள் நீடிக்கவில்லை. ரூ.85/-ஐ தொட்டு “என்ன பெட்ரோல் விலை செஞ்சுரி போடுமா?” என கேட்கும் அளவிற்கு உயர்ந்து கொண்டிருந்தது. பின்னர் சற்று இறங்கி, சமீப காலங்களில் ரூ.75/-ஐ வட்டமிட்டு கொண்டிருக்கிறது. அரசும் அதன் ஆதரவாளர்களும் “மன்மோகன் ஆட்சி காலத்தில் இருந்த விலை நிர்ணய முறையும், மோடி ஆட்சி காலத்தில் உள்ள நிர்ணய முறையும் வேறு” என்று வாதிடுகிறார்கள். என்ன சொன்னாலும் இந்த விஷயத்தில் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். [டாப் 10 அதிருப்தி பட்டியல்]
சரிந்த ருபாய் மதிப்பு
மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டது. ஒரு அமெரிக்க டாலர் ரூ.60க்கு மேல் போனது. அதனை மோடி கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால், மோடியின் ஆட்சியில் இந்திய ரூபாய் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான சரிவை கண்டது. மோடியின் ஆட்சிக்காலத்தில் ஒரு அமெரிக்க டாலர் ரூ.70க்கு மேல் போனது. [டாப் 10 அதிருப்தி பட்டியல்]
பண மதிப்பிழப்பும், ரொக்க பரிவர்த்தனையும்
மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சில குறுகிய கால பாதிப்புகள் (சில வாரங்களுக்கு மக்கள் அவதி, வளர்ச்சி விகிதம் பாதிப்பு போன்றவை) ஏற்பட்டது எல்லாரும் அறிந்ததே. அத்தகைய குறுகிய கால பாதிப்புகளை மீறி நீண்ட கால நன்மைகள் உள்ளதாக பாஜக அரசும், சில பொருளாதார நிபுணர்களும் தெரிவித்தார்கள். அந்த வாதம் எவ்வளவு ஏற்கத்தக்கது என்று தெரியவில்லை.
ஒருவேளை அன்றாட வாழ்வில் “ரொக்கமில்லா பரிவர்த்தனைகள்” (cashless transactions) அதிகரித்திருந்தால், அதனை பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நல்ல பயனாக நடுத்தர மக்களும் சாமான்யர்களும் ஏற்றிருப்பார்கள். ஆனால், சிறுநகரங்களில் ரொக்க பரிவர்த்தனைகள் பெரிய மாற்றம் கண்டுவிடவில்லை.
இது போக, பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக வங்கி சார்ந்த பரிவர்த்தனைகள் அதிகரித்தன. இதனை தங்களுக்கு சாதகமாக்கி கொண்ட வங்கிகள், வாடிக்கையாளர்களை தண்டிக்காத குறையாக புதிய விதிமுறைகளையும் சேவை கட்டணங்களையும் (உதாரணம் – மாதம் 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்மில் பணம் எடுத்தால் அபராதம்) அறிமுகப்படுத்திவிட்டன.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு
நமது அரசியல் சாசனம் “சமூகரீதியிலும்”, “கல்விரீதியிலும்” பின்தங்கியவர்களுக்கே (கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலைகளிலும்) இட ஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்துள்ளது. “பொருளாதார ரீதியில்” பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீட்டை அரசியல் சாசனம் ஆதரிக்கவில்லை. இந்த “அடிப்படையில் கை வைக்கும்” வேலையெனில் எவ்வளவு நீண்ட விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றிருக்க வேண்டும்? எவ்வளவு தொலைநோக்கோடு யோசித்திருக்க வேண்டும்? நடக்கவில்லையே. அவசர கதியில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த விஷயத்தில், மோடி அரசின் செயல்பாட்டுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் துணை போயின. அத்தகைய செயல், அந்த கட்சிகளின் “வாக்கு வங்கி அரசியலை”யும் நன்றாகவே வெளிப்படுத்தியது. உச்சநீதிமன்றம் இந்த மசோதாவில் தலையிட்டு ஒரு தெளிவுக்கு வழியமைக்கும் என்று நம்ப வேண்டியதுதான்.
வேலை வாய்ப்பின்மை
மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை பற்றி மாறுபட்ட தகவல்கள் உலவுகின்றன. இதுவரை அரசு தரப்பில் “வேலை வாய்ப்பில்லை” என்ற எதிர்க்கட்சிகளின் குரலுக்கு வலுவான எதிர்வாதம் இல்லை. ஆதலால், “வேலை வாய்ப்பு” விஷயத்தில் இந்த அரசு சொதப்பியிருக்கிறது என்றே ஏற்கவேண்டி இருக்கிறது. பொதுவாகவே இந்த ஆட்சி காலத்தில் தனியார் பெருநிறுவனங்களின் முதலீடு குறைவு. மோடி இவ்விஷயத்தில் தொழில் அதிபர்களை உந்தித் தள்ள தவறிவிட்டார்.
மோடி அரசின் “ஸ்டார்ட் அப் இந்தியா” என்ற திட்டம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கவல்லது. ஆயினும், புதிதாக தொழில் தொடங்குவோர் ஆரம்ப காலத்தில் குறைந்த அளவிலேயே வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதால், இந்த திட்டத்தின் பலன்கள் கிடைக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.
காஷ்மீர் விவகாரம்
ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை இரண்டு விதமான பிரச்சினைகள் உள்ளன.
- வெளியிலிருந்து வரும் பாகிஸ்தான்-ஆதரவு தீவிரவாதிகளின் செயல்பாடுகள்
- உட்புறமாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக இருக்க விரும்பும் காஷ்மீர் மக்களின் மனநிலை (இதற்கு அங்கு உள்ள மாநில கட்சிகளின் உந்துதல் முக்கிய காரணமாகும்)
தீவிரவாதிகளை ராணுவம், உளவுத்துறை, காவல்துறை கொண்டு அடக்க முடியும். ஆனால் மக்கள் மனநிலை மாற்ற அவர்களை இந்திய தேசிய சிந்தனைக்கு கொண்டுவருதல் ரொம்பவே அவசியம். பாஜக மத்தியில் திடமான ஆட்சி மற்றும் காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி ஆட்சி என்று இருந்தது. என்றாலும், அங்குள்ள மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கவில்லை என்பது ஏமாற்றமே.
தமிழக ரெய்டுகள்
கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழகத்தில் சில முக்கியமான வருமான வரித்துறை மற்றும் சிபிஐ ரெய்டுகள் நடந்தேறின. அவற்றில் ஒரு ரெய்டு தமிழக அரசின் தலைமை செயலகத்திலேயே நடந்தது. அதன் பின்விளைவாக அப்போதைய தலைமை செயலாளர் பதவி விலக நேர்ந்தது. மற்றுமொரு ரெய்டு ஒரு மந்திரியின் வீட்டில் நடந்தது. ஆனால், இதுவரை இந்த ரெய்டுகள் சம்பந்தமாக எந்தவொரு நீதிமன்ற வழக்கும் நடைபெறுவதாக தெரியவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக செய்தி இல்லை. இதன் காரணமாக “மத்திய அரசு மாநில அரசை அரசியல் ரீதியாக மிரட்டவே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டது” என்று உலா வரும் செய்திகள் உண்மை என்றே நினைக்க தோன்றுகிறது. [டாப் 10 அதிருப்தி பட்டியல்]