மொழிப்போர் Or மொழி Bore?!
Contents
தேசிய கல்விக் கொள்கை 2020ல் மும்மொழித் திட்டம்
தேசிய கல்விக் கொள்கை 2020ல் மும்மொழித் திட்டம் குறித்து சொல்லப்பட்டது என்ன? ஆங்கிலத்தில் உள்ள வாக்கியங்களை அப்படியே தந்துவிட்டு, அதன் தமிழாக்கமும் அதற்கு கீழே தருகிறேன்.
4.13. The three-language formula will continue to be implemented while keeping in mind the Constitutional provisions, aspirations of the people, regions, and the Union, and the need to promote multilingualism as well as promote national unity. However, there will be a greater flexibility in the three-language formula, and no language will be imposed on any State. The three languages learned by children will be the choices of States, regions, and of course the students themselves, so long as at least two of the three languages are native to India. In particular, students who wish to change one or more of the three languages they are studying may do so in Grade 6 or 7, as long as they are able to demonstrate basic proficiency in three languages (including one language of India at the literature level) by the end of secondary school.
தமிழாக்கம் –
4.13. மும்மொழித் திட்டமானது அரசியலமைப்பு விதிகள், மக்கள், பிராந்திய மற்றும் ஒன்றியத்தின் லட்சியங்களையும், பன்மொழித் தன்மை மற்றும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதையும் மனதில் கொண்டு தொடர்ந்து செயல்படுத்தப்படும். இருப்பினும், மும்மொழிக் கொள்கையில் அதிக நெகிழ்வுத்தன்மை இருக்கும். எந்த மொழியும் எந்த மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது. குழந்தைகள் கற்கும் மூன்று மொழிகள் மாநிலங்கள், பிராந்தியங்கள் மற்றும் மாணவர்களின் விருப்பங்களுக்கேற்ப இருக்கும். மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்தியாவின் பூர்வீக மொழிகளாக இருக்கவேண்டும். குறிப்பாக, அவர்கள் படிக்கும் மூன்று மொழிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை மாற்ற விரும்பும் மாணவர்கள், இடைநிலைப் பள்ளி முடிவதற்குள் மூன்று மொழிகளில் (இலக்கிய அளவில் இந்தியாவின் ஒரு மொழி உட்பட) அடிப்படைத் தேர்ச்சியை நிரூபிக்க முடிந்தால், 6 அல்லது 7 ஆம் வகுப்பில் மாற்றிக் கொள்ளலாம்.
அலசலும் நிலைப்பாடும்
தமிழ்நாட்டில் “தமிழ் – ஆங்கிலம் – ஹிந்தி” என மும்மொழிக் கொள்கை இருந்தால் தவறில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்த நான், தேசிய கல்விக் கொள்கை 2020ன் மும்மொழித் திட்டம் குறித்த சாதக பாதகங்களையும் நடைமுறை சிக்கல்களையும் அலசியபின் என் நிலைப்பாட்டை சற்றே மாற்றியிருக்கிறேன். இப்போது என் கருத்து இதுதான் –
- ஹிந்தி அல்லது வேறு ஒரு இந்திய மொழியை மூன்றாம் மொழியாக கற்பது தவறில்லை; அதே நேரம், மூன்றாம் மொழியை கட்டாயமாக்கும் திட்டம் அவசியமில்லை.
- விருப்பமுள்ளவர்கள் மட்டும் மூன்றாம் மொழியை பள்ளிக்கல்விக்கு வெளியே (இலவசமாக) கற்பதற்கான வாய்ப்புகளை மத்திய அரசு ஏற்படுத்தினால் போதுமானது.
- மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழையும் ஆங்கிலத்தையும் உருப்படியாக சொல்லித்தந்தாலே இந்த அரசுகளுக்கு கோடி புண்ணியம்.
மேற்சொன்ன கருத்தை திமுகவைப் போல் “ஹிந்தி திணிப்பை எதிர்ப்போம்” என்கிற கண்மூடித்தனமான நோக்கத்தில் கூறவில்லை. ஏன் “மும்மொழித் திட்டம் அவசியமில்லை” என்ற நிலைபாட்டுக்கு வந்திருக்கிறேன் என்பதற்கான காரணங்கள் இங்கே –
1. தேசிய கல்விக் கொள்கை 2020ல் மூன்றாம் மொழியாக ஹிந்தி கட்டாயம் ஆக்கப்படவில்லை. அதாவது, இதற்கு முன்புவரை ஹிந்தியை தேசிய மொழியாக (நாடு முழுமைக்கும் பொதுவான மொழியாக) கொண்டுவரும் எண்ணத்தை 2020 கல்விக் கொள்கை கைவிட்டிருக்கிறது. நாடு முழுமைக்கும் ஒரு பொது மொழி இல்லை என்கிற நிலையில், ஆங்கிலம்தான் உலகளாவிய தொடர்பு மொழி என்றிருக்கும் நிலையில், மூன்றாவதாக ஏதோ ஒரு இந்திய மொழியை (அது ஹிந்தியோ வேறு எதுவோ) பாடமாக படிக்கவேண்டிய நிர்பந்தம் இல்லை.
2. வட மாநிலங்களில் இயல்பாகவே தாய்மொழிக்கு அடுத்தபடியாக ஹிந்தியை வைத்திருக்கிறார்கள். அதன் காரணமாக அங்கே மூன்றாம் மொழியாக ஆங்கிலம் தேவைப்படுகிறது. தென் மாநிலங்களில் ஏற்கனவே தாய்மொழியும் உலகத் தொடர்பு மொழியான ஆங்கிலமும் கற்றுத்தரப்படுவதால், மேலே சொன்னதுபடி ஹிந்தி தேசிய மொழியாக இல்லை எனும் பட்சத்தில், மூன்றாம் மொழிக்கான தேவை இல்லை.
3. இன்றைய நிலையில், தமிழை சரியாக எழுதவே பல தமிழ்நாட்டு மாணவர்கள் திணறுகிறார்கள். ஆங்கிலத்தை சரளமாக பேசுவதிலும் ஓரளவுக்கு தனியார் பள்ளி மாணவர்கள் மட்டுமே மிளிர்கிறார்கள். இத்தகைய நிலையில் மூன்றாவதாக ஒரு மொழியை கொண்டு வந்து பயிற்றுவித்து என்ன பயன் பெறப் போகிறோம்? மேலும், மூன்றாம் மொழியாக ஹிந்தி இருக்கும் பல பள்ளிகளிலும் கூட மாணவர்கள் ஹிந்தியை எழுதவும் வாசிக்கவும் கற்கிறார்களே தவிர சரளமாக பேசுவதற்கு கற்றுத்தரப்படுவதில்லை.
4. “மூன்றாவது மொழியாக ஹிந்தியை கட்டாயம் ஆக்கவில்லை, தமிழ் தவிர மீதமுள்ள 21 இந்திய மொழிகளில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்” என்று சொன்னாலும், நடைமுறையில் ஒரு பள்ளிக்கூடம் எத்தனை மொழி ஆசிரியர்களை நியமிக்க முடியும்? குஜராத்தி, மராத்தி, பெங்காளி போன்ற வடமாநில மொழிகளை கற்க இங்கே எத்தனை பேருக்கு ஆர்வம் இருக்கும்? அதிகபட்சமாக, ஹிந்தி தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மூன்று தென் மாநில மொழிகளுக்குள்தான் சுருக்கமுடியும். அப்படிப் பார்த்தாலும், ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்றாம் மொழிக்காகவே நான்கு ஆசிரியர்கள் என்பதெல்லாம் தேவையற்ற சுமை.
5. ஹிந்தி பல மாநிலங்களிலும் பேசப்படும் மொழியாக இருக்கிறதே, கட்டாயமான மூன்றாம் மொழி திட்டத்தை வைத்து அதைக் கற்றுக்கொண்டால் என்ன? இந்தக் கேள்வியின் காரணமாகவே ஹிந்தி கற்றுக்கொள்வதை நான் எப்போதும் ஏற்றிருக்கிறேன். இப்போதும் ஹிந்தி கற்பதை ஏற்றாலும், அப்படி கற்பதற்கு ஹிந்தி பிரச்சார சபா அல்லது அது போன்ற ஒரு அமைப்பின் வழியே “Spoken Hindi”க்கு ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் பகுதி நேர Certificate Course வைத்தால் போதும் என்றே தோன்றுகிறது. ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயப் பாடமாக படித்தே ஆகவேண்டிய அவசியமில்லை.
6. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, AI (Artificial Intelligence) தொழில்நுட்பம் வளர்ந்து வரும் சூழலைப் பயன்படுத்தி, எந்த இந்திய மொழியையும் எளிதாக கற்றுப் பேசுவதற்கு e-learning வசதிகளை ஏற்படுத்தி பள்ளிப் பாடத்திட்டத்துக்கு வெளியே அதை எந்த மாணவரும் கற்பதற்கான வழிவகைகளை கொண்டு வருவதே சிறந்த செயல்பாடாக இருக்கும். அத்தகைய அணுகுமுறை, தேவையற்ற மொழி அரசியலை தவிர்க்கும்; விருப்பமுள்ளவர்கள் அரசியல் தலையீடு இல்லாமல் பள்ளிகளை மட்டுமே நம்பாமல் மற்ற மொழிகளை கற்கும் சூழலை உருவாக்கும்.
[குறிப்பு: 2019ல் ஹிந்தி திணிப்பு குறித்த சர்ச்சை எழுந்தபோது எழுதிய பதிவு – https://www.sivathoughts.in/hindi-imposition/]