சிறுகதை: மாறுவது பணம்…

கபிலன் – துடிப்பான, சாதிக்கும் ஆர்வம் மிகுந்த இளைஞன். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ஒரு சிறிய நிறுவனத்தில் சேர்ந்து, இரண்டு வருடங்கள் திறம்பட வேலை செய்தான். அந்த அனுபவத்தை வைத்து கார்கள் பராமரிப்பு பணிமனை ஒன்றை ஆரம்பித்து ஐந்து வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருகிறான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் கபிலன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தான். அவனது நிறுவனத்தில் இலைமறை காய்மறையாக ஏதோ தப்பு நடந்து வருவதாக சந்தேகிக்கிறான். ஆறு மாதங்களுக்கு முன், கார் என்ஜின் பகுதிகளில் துரு ஏற்படாமல் தவிர்ப்பதற்கு ஒரு பாலிஷ் அறிமுகம் செய்திருக்கிறார்கள். பராமரிப்புக்கு கார் கொண்டு வரும் வாடிக்கையாளரிடம் அதன் சிறப்பை எடுத்துச் சொல்லி, அவர்கள் சம்மதம் பெற்று பாலிஷ் செய்ய வேண்டும் என்று தனது அலுவலகத்தில் உள்ள சேவை மேற்பார்வையாளர்களிடம் கபிலன் சொல்லி இருந்தான். அலுவலக கணக்கை எடுத்துப் பார்த்தால், இத்தனை மாதங்களில் ஐந்து சதவிகித கார்களுக்கு மட்டுமே பாலிஷ் சேவை செய்யப்பட்டிருந்தது. அது பற்றி மேலும் துப்பறிய அன்று அலுவலகம் செல்ல வேண்டியிருக்கிறது.

*                                                           *                                                                    *

ஞாயிற்றுக்கிழமை என்பதால் தாமதமாக எழுந்த விவேக் நாளிதழை கையில் எடுத்துக் கொண்டு பால்கனியில் அமர்ந்தான். இப்பொழுதெல்லாம் தொலைக்காட்சியில் செய்திகள் பார்ப்பது நேர விரயமாகி விட்டது – ஒரு அரசியல் தலைவர் மேடையில் பேசும்போது தொடர்ந்து தும்மினாலே அதை “தற்போதைய செய்தி” என ஓடவிட்டு, விவாதம் நடத்தி தலைவலி தருகிறார்கள். நல்ல வேளையாக நாளிதழ்கள் அவ்வளவு நிதானம் இழக்கவில்லை என்று எண்ணிகொண்டே செய்திகளில் மூழ்கினான்.

குளித்து, சாப்பிட்டு சந்தைக்கு போக எத்தனித்த சமயம், அலைபேசி “இது இணையில்லா மகா காவியம்” என்ற (மகாபாரதம்) ரிங்க்டோனுடன் முழங்கியது.
எதிர் முனையில் இருந்தவர் “சார், நான் செல்வராஜ் பேசுறேன். நீங்க ஒரு கிரௌண்ட் பிளாட் விற்கிறதுக்கு பேப்பர்ல கொடுத்திருந்த விளம்பரம் பார்த்தேன். இன்னைக்கு வந்தா பார்க்கலாமா?” என்றார்.
“தாராளமா, மதியம் மூணு மணிக்கு வர முடியுமா?”
“கண்டிப்பா, அட்ரஸ் சொல்லுங்க”
சொன்னான்.
செல்வராஜ், ஊருக்கு சற்று வெளியே உள்ள அந்த காலி மனையைப் பார்க்க வருகிற பன்னிரெண்டாவது  நபர். அந்த மனையை ஏழு வருடங்களுக்கு முன் வாங்கும் போது பத்து லட்சம். நகரம் விரிவடைந்த வளர்ச்சியால் இன்று இருபத்தியெட்டு லட்சம் வரை விலை போகும்.
முப்பதைந்து வயதான விவேக்கிற்கு பத்து வருடங்களுக்கு மேல் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்த அனுபவம் இருக்கிறது. சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதற்கான தொழில் திட்டம் தயார் செய்து விட்டான்.  தொழிலுக்கான முதலீட்டில் “பெருமளவு சொந்தப் பணம், சிறிதளவு வங்கிக் கடன்” என்று முடிவு செய்திருந்தான். அதற்காகத்தான் இந்த மனை விற்பனை.

*                                                           *                                                                    *

சரியாக மூன்று மணிக்கு செல்வராஜ் மனைக்கு வந்துவிட்டார். இருவரும் அறிமுகப் படுத்திக்கொண்டனர். செல்வராஜுக்கு அறுபது வயது நெருங்கியிருக்கும். திருமண வயதில் இருக்கும் தன் மகளுக்கு ஒரு மனை வாங்கித்தர முடிவு செய்துள்ளார். “மண்ணில் போடும் பணம் வீணாகாது” என்பது அவரது திடமான நம்பிக்கை.
செல்வராஜ் விவேக்கின் மனையினை ஒவ்வொரு பகுதியாக பார்த்தார். அவர் பார்த்த விதமும், “தண்ணி இந்த ஏரியா-ல எவ்வளவு அடி ஆழத்துல வரும்”, “பக்கத்து பிளாட் யாரோடது” போன்ற கேள்விகளும் அவருக்கு மனை வாங்குவதில் தேர்ந்த அனுபவம் இருப்பதாகக் காட்டின.
“எனக்கு பிளாட் பிடிச்சிருக்கு. என்ன விலை சார்?” – செல்வராஜ்
“சதுர அடி 1000 ருபாய். மொத்தமா 24 லட்சம் ஆகும்” – விவேக்
“இங்க மார்க்கெட் ரேட்டை விட குறைச்சு சொல்ற மாதிரி தெரியுதே? பிளாட்-ல ஏதும் பிரச்சனை இருக்கா சார்?”
இதற்கு முன் வந்து பார்த்த பதினோரு பேரிடம் பேசிய அனுபவத்தின் காரணமாக விவேக் புன்னகைத்தான். பின்னர் “பிளாட்-ல பிரச்சினை இல்லை சார். பிளாட் வாங்க வர்றவங்க கிட்டதான் பிரச்சினை” என்றான். ஒரு  இடைவெளி விட்டு “இதை கொஞ்சம் விரிவா சொன்னாதான் புரியும், அந்த மர நிழல்ல போய் பேசுவோம்” என்று செல்வராஜை பக்கத்தில் இருந்த மரத்தடிக்கு கூட்டிச் சென்றான்.
நிதானமாக பேச தொடங்கினான் விவேக். “சார், நீங்க பிளாட் பார்த்த விதம், கேட்ட கேள்விகளை வச்சு பார்க்கும் போது ரியல் எஸ்டேட் பத்தி நல்லா தெரிஞ்சவர்னு புரியுது. இப்போ நான் சொல்ற விலைக்கு நீங்க ஒத்துகிட்டா, எவ்வளவு ரூபாய்க்கு ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ்-ல பதிவு பண்ணுவீங்க?”
“கைடுலைன் மதிப்புக்கு பதிவு பண்ணுவேன்” – செல்வராஜ்
“இங்க கைடுலைன் மதிப்பு சதுர அடிக்கு 750/-” – விவேக்
“அப்படின்னா, பதினெட்டு லட்சத்துக்கு பதிவு பண்ணலாம்”.
“அப்போ மீதி ஆறு லட்சம்?”
“அதை தனியா, பதிவுக்கு முன்னாடியே குடுத்திடுறேன்”
அந்த ஆறு லட்சம் அரசாங்க கணக்கில் வராது. செல்வராஜ் அந்த பணத்தை நியாயமாகவே சம்பாதித்திருந்தாலும் கூட, அது விவேக்கின் கருப்பு பணமாக மாறும்.
“இப்போ புரியுதா சார் என் பிரச்சினை? நான் முழுசா வெள்ளை பணமா வேணும்னு சொல்றேன், வர்றவங்க உங்களை மாதிரிதான் சொல்றாங்க. நீங்களாவது பரவாயில்லை. மத்தவங்க 12 லட்சம், 15 லட்சத்துக்கு பதிவு பண்ணலாமான்னு கேட்டாங்க”.
“இதுதானே நடைமுறை, தம்பி?” – அதுவரை விவேக்கை “சார்” என்று சொல்லிகொண்டிருந்த செல்வராஜ் “தம்பி” என்று விளித்தார்.
“இந்த மாதிரி சில நடைமுறைகளை மாத்தாமலே நாட்டுல ஊழல், லஞ்ச லாவண்யம் ஒழியணும்னு நினைக்கிறது எனக்கு நியாயமா தெரியலை சார். “
செல்வராஜ் மெளனமாக, சற்றே ஆழமாக விவேக்கை பார்த்தார். அவனது வாதத்தின் பிடி இறுக்கமானதாக தெரிந்தது. அவன் கேட்டான் – “சார், நீங்க சினிமா பார்க்கறது உண்டா? ஷங்கர் படங்கள் பார்த்திருக்கீங்களா?”
“ம்ம்..”
“பொதுவா நாம ஒரு இந்தியன் தாத்தாவோ, ஒரு நாள் முதல்வர் புகழேந்தி மாதிரி ஒருத்தரோ, ஒரு அந்நியனோ வந்து எல்லாத்தையும் சரி செய்யணும்னு நினைக்கிறோம். அப்படி ஒருவேளை யாரும் வந்தாலுமே, நாம மாறலைன்னா பெரிய மாற்றம் எதுவும் நடக்காது. இந்த பிளாட் விஷயத்துல, நாம நினைச்சா, நம்ம அளவில் ஒரு சின்ன மாற்றம் கொண்டு வர முடியும். யோசிச்சு சொல்லுங்க, சரின்னு பட்டா நாம மேற்கொண்டு செய்ய வேண்டியதை செய்யலாம்”.
சில நாட்களில் பதில் சொல்வதாகக் கூறி செல்வராஜ் விடை பெற்றார். விவேக்கின் தீவிர நிலைப்பாடு அவரை வெகுவாக ஆக்கிரமித்திருந்தது.
*                                                           *                                                                    *

செல்வராஜ் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். விவேக்கின் மனை வாங்குவதில் திறந்த மனதுடன் முடிவு எடுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டார்.  நேர் வழியில் சம்பாதித்த பணம் என்பதால் அவருக்கு கருப்பு பணமாகத்தான் செலவழிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால், விவேக்கின் மனையை பதினெட்டு லட்சத்திற்கு பதிவு செய்தால் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாய் அரசாங்கத்திற்கு கட்டாமல் தவிர்க்கலாம். அது போக, குறைந்த விலைக்கு பதிவு செய்தால் அந்த பகுதியின் “கைடுலைன்” மதிப்புக்கு  பாதகம் ஏற்படாது.  இந்த உள்மன வாதங்கள், குறைந்த விலையில் பதிவு செய்து அரசாங்க கருவூலத்திற்கு செல்ல வேண்டிய கட்டணத்தை தனது சேமிப்பாக்குவதை  நியாயப்படுத்தின.

அதே வேளையில், சில கேள்விகளுக்கு பதில்களும் இல்லை – விற்பவனுக்கும் வாங்குபவனுக்கும் இடையில் அரசுக்கு இவ்வளவு கொடுத்தால் போதும் என்ற மனப்பான்மை சரிதானா?  கருப்பு பண வளர்ச்சியில் பங்கு கொண்டுவிட்டு, ‘நாயகன்’ பட பாணியில் “அவனை நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன்” என்று சொல்வது வெற்று சமாதானமல்லவா?  இப்படி யோசித்துக் கொண்டே உறங்கிப் போனார்.

*                                                           *                                                                    *

மறுநாள், தன் மகனிடம்  இது பற்றி பேசலாம் என்ற எண்ணத்துடன், “இன்னும் அவன் ஆபீசிலிருந்து வரலையா?” என்று மனைவியிடம் கேட்டார். “கம்பெனில ஏதோ பிரச்சினையாம். இன்னைக்கு வர லேட் ஆகும்னு சொன்னான்” என்றார் மனைவி.

சற்று நேரத்தில் சோர்வாக வீட்டிற்குள் நுழைந்தான் கபிலன் – செல்வராஜின் மகன். அவன் இரவு உணவு சாப்பிட்டு முடித்த பின், செல்வராஜ் முதலில் அலுவலக பிரச்சினை பற்றி பேசத்  தொடங்கினார்.

“கம்பெனில பிரச்சினைன்னு அம்மா சொன்னாங்க. சரி பண்ணிட்டியா?”
“ம்ம்.. நாலு பேரை வேலையை விட்டு அனுப்புற மாதிரி ஆகிடுச்சு. ஒரு பக்கம் கோபம், இன்னொரு பக்கம் வருத்தம்”.
“நாலு பேரா? அந்த அளவுக்கு என்ன பிரச்சினை?”

கபிலன் தனது தீவிர விசாரணையில் கண்டுபிடித்து இதுதான் – கிட்டத்தட்ட முப்பது சதவிகித வாடிக்கையாளர்களிடம் குறைந்த கட்டணம் வாங்கிக் கொண்டு, தரம் குறைந்த பாலிஷ் பூசியிருக்கிறார்கள். இந்த கட்டணத்தை  பில்லில் சேர்க்காமல் தனியாக வசூல் செய்திருக்கிறார்கள். இதனால், நிறுவனத்திற்கு  ஆறு மாதங்களில் சுமார் ஆறு லட்ச ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டிருந்தது. இதற்கு காரணமான நான்கு மேற்பார்வையார்களை கபிலன் வேலையிலிருந்து நீக்கி விட்டான்.

நடந்த சம்பவங்களின் தொகுப்பை தந்தையிடம் சொல்லி முடித்த கபிலன், “அவங்க செஞ்ச துரோகம், மோசடியை நெனைச்சா கோபம் வருது. பணம் சேமிக்கிறோம்னு நெனைச்சு இப்படி கணக்குல வராத வேலைக்கு துணை போன கஸ்டமர்களை நெனைச்சா வருத்தமா இருக்கு. அவங்களுக்கு புரியல – இந்த மாதிரி ஒரு கம்பனிக்கு வர்ற நஷ்டம் அவங்களுக்குதான் பாதிப்பு ஏற்படுத்தும், பராமரிப்பு செலவு அதிகமாகும். ஒரு சின்ன தனியார் கம்பெனியிலேயே இவ்வளவு பணம் கணக்குல வராம புழங்கினால், இந்தியா முழுக்க எவ்வளவு கருப்பு பணம் புழங்கும்? நம்ம நாட்டுக்கு எதிரிகள் வெளியில இல்லை.”  என்று சீற்றம் கொண்டான்.

“உன் கோபத்தில் நியாயம் இருக்கிறது” என்பது போன்ற பார்வையுடன் செல்வராஜ் அமைதியாக அமர்ந்திருந்தார். விவேக்கின் மனை வாங்குவது பற்றி பேசவில்லை. தள்ளாடிக் கொண்டிருந்த தராசு முள்,  ஒரு ராணுவ வீரனின் நேர்த்தியோடு நேராக நின்றது போன்ற உணர்வு.

*                                                           *                                                                    *

அடுத்த நாள் காலை செல்வராஜ் அலைபேசியில் விவேக்கை அழைத்தார். மறுமுனையில் விவேக் எடுத்ததும்,  “தம்பி, நீங்க சொன்ன மாதிரி நம்ம அளவுல செய்யக்கூடிய சின்ன மாற்றத்துக்கு நான் தயாராகிட்டேன். எப்போ பிளாட்டை ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம்?” என்று கேட்டார். விவேக் தனது மடிக்கணினி திரையில் மிளிர்ந்த மகாகவி பாரதியின் வரிகளை பார்த்துக் கொண்டே உரையாடலை தொடர்ந்தான்.
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம்
காண்பமென்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.
Comments
  1. 9 years ago
  2. 9 years ago

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!