“சேவை” கட்டணம் (அரசுக்கு அல்ல)
இது புதிய அனுபவமல்ல.. பெரும்பாலோர் பெறாத அனுபவமுமல்ல.. என்றாலும் பதிவு செய்கிறேன் – என் அடுத்த தலைமுறைக்காகவும், என் மன திருப்திக்காகவும் (இப்படி சமூக வெளியில் என் ஆதங்கத்தை கொட்ட முடிந்ததே என்ற திருப்தி).
பதிவுக்கு செல்லும் முன் ஒரு முன்குறிப்பு –
அரசு அலுவலகங்களில் ஒரு வேலையை முடித்துக்கொள்ள வேண்டுமெனில் அதற்காக “சர்வீஸ் சார்ஜ்” (புரிஞ்சிருக்குமே) கொடுப்பவர்கள் இரண்டு வகை
- தனது நேரத்தை வீணடிக்க விரும்பாமல் “கொடுக்க வேண்டியதை கொடுத்து”, இருந்த இடத்திலிருந்தே வேலையை முடித்து கொள்வோம் என்கிற வகையினர்
- நேரத்தை செலவழித்தாலும், அலைந்து திரிந்தாலும் “கொடுக்க வேண்டியதை கொடுக்காவிட்டால் வேலை நடக்காது” என்ற உண்மை புரிந்ததால் “கொடுக்கும்” வகையினர்
மேற்சொன்னதில் நான் இரண்டாம் வகை. அதாவது, அறசீற்றத்தை உள்ளே அழுத்தி ஆழமாய் புதைத்துவிட்டு, “இப்படி ஒத்துழைக்க வேண்டியிருக்கிறதே” என்ற உள்ளக்குமுறலுடன் ஐநூறு ரூபாய் தாள்களை அழுதுகொண்டே கொடுக்கும் வகை.
[சிறு குறிப்பு: சட்டத்தை வளைத்து காரியம் சாதிக்கும் – உதாரணமாக, போலி பத்திர பதிவு – போன்ற வேலைகளை பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை.]
கடந்த ஓராண்டில் நான் அரசு அலுவலகங்களில் சந்தித்த இரண்டு அனுபவங்களை (முடிந்த அளவு சுருக்கி) பகிர்கிறேன்.
*****************************************************************************************************************************************
இடம்: மாநகராட்சி அலுவலகம்
வேலை: சொத்து வரியில் பெயர் மாற்றம் செய்தல்
“சர்வீஸ் சார்ஜ்” தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே நானும் என் அம்மாவும் மாற்றி மாற்றி அலைந்து, விண்ணப்பம் (இடைத்தரகர்களை அணுகாமல்) பூர்த்தி செய்வது , பெயர் மாற்றத்திற்கான மாநகராட்சி கட்டணம் கட்டுவது, உரிய நகல்கள் வைப்பது என்று எல்லாம் செய்தோம். விண்ணப்பத்தை கொடுக்க வேண்டிய பிரிவில் கொடுத்து “அடுத்து என்ன?” என்று கேட்ட பொழுது, “உங்கள் ஏரியா பில் கலெக்டரை பாருங்கள்” என்று சொன்னார்கள். அவரை பார்த்த பொழுது “சேவை சார்ஜ்” படிம நிலைகளை விளக்கினார் (5000 கொடுத்தால் இன்னின்ன செய்யப்படும், 3000 கொடுத்தால் இன்னின்ன செய்யப்படும், ஒன்றுமே கொடுக்கவில்லை என்றால் இன்னின்ன விளைவுகள் ஏற்படும்). அவரது பேச்சில் எந்த கூச்ச நாச்சமும் இல்லை, இனிமைக்கும் குறைவில்லை. சற்று பேரம் பேசினேன் – “சார், வெறும் பெயர் மாற்றம்தானே. ஏதும் குறைச்சுக்க முடியாதா?”. அமைதியாக பதில் சொன்னார் – “நான் வெளிப்படையா சொல்லிடுறேனே. எவ்வளவு குறைச்சாலும் பச்சை இங்க்-ல கையெழுத்து போடுறவங்களுக்கு கொடுக்கறதை கொடுத்துதான் ஆகணும். வேணும்னா என் பங்குல கொஞ்சம் குறைச்சுக்கறேன். நீங்க 4000 கொடுங்க, முடிச்சு கொடுத்திடுறேன்” (நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூச்சலிடுபவர்கள் கவனிக்கவும் ?)
இடம்: மின்சார வாரிய (உதவி மின் பொறியாளர்) அலுவலகம்
வேலை: மின்சார இணைப்பு பெயர் மாற்றம் செய்தல்
இங்கும் பெயர் மாற்றம்தான். எந்த விண்ணப்ப படிவமும் தரவில்லை. நேரடியாக உதவி மின் பொறியாளரை பார்க்க சொன்னார்கள். அவர் சொத்து மற்றும் மின் இணைப்பு சம்பந்தப்பட்ட ஆவணங்களை வாங்கி வைத்துக்கொண்டு “இதை பார்க்க சொல்றேன். ரெடியானதும் உங்களுக்கு போன் பண்றேன். கொஞ்சம் சார்ஜ் கொடுக்க வேண்டியிருக்கும்” என்றார். சில நாட்கள் கழித்து போன் வந்தது – “உங்க அப்ளிகேஷன் ரெடி பண்ணியாச்சு. வந்து பார்த்து சார்ஜ் கொடுத்திட்டீங்கன்னா ப்ராசஸ் பண்ணிடலாம்” என்றார். போய் பார்த்தபோது “ரெண்டு கனெக்ஷன்-க்கு கொடுத்திருக்கீங்க. இந்த ரெண்டுக்கும் அப்ளிகேஷன் ரெடி பண்ண 1000 ரூபாய். கொடுத்திட்டு போங்க. பேர் மாத்தி லெட்டர் வாங்கும் போது அதுக்கான சார்ஜ் சொல்றேன்”. மீண்டும் சில நாட்களுக்கு பிறகு “உங்க பேர் மாற்றம் ஆர்டர் போட ரெடியா இருக்கு. ஒரு அப்ளிகேஷன்க்கு 1000 ருபாய் வீதம் 2000 ருபாய் குடுத்திடீங்கன்னா ஆர்டர் போட்டுடலாம்” என்று போன் பண்ணி சொன்னார். அதற்கு நான் “சார், வெறும் பேர் மாத்தறதுதானே.. புது கனெக்ஷன் மாதிரி பணம் கேட்குறீங்களே?” என்றேன். பதிலாக “நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் நீங்க பார்த்துக்கங்க” என்றார் (இதற்கு அர்த்தம் – கொடுக்கலேன்னா வேலை நடக்காது). வேறு வழியில்லாமல் கொடுத்தேன். வாங்கும் போது “எனக்கு ஒன்னும் இதுல பெருசா இல்லை. இங்க வேலை செய்யறவங்களுக்குதான்” என்றார், பெருந்தன்மையாக.
*****************************************************************************************************************************************
இந்த போக்கு மாறவே மாறாதா என்ற ஆதங்கத்தை சற்றே (கவனிக்க, சற்றே) குறைக்கும் விதமான சில முயற்சிகள் எடுக்கப்பட்டுதான் வருகின்றன (உதாரணமாக – பிறப்பு இறப்பு சான்றிதழ்களுக்கான வலைதளம், குடிநீர் இணைப்பிற்கு சில மாநகராட்சிகளில் உள்ள இணைய சேவை, ரயில்வேயின் இணைய குறைதீர் சேவை). ஆனால் அவையெல்லாம் யானை பசிக்கு சோளப்பொரிதான். ஏனெனில், ஆன்லைன்/இணைய சேவை என்று வந்தாலும், நேற்று வரை கையெழுத்து போட காசு வாங்கியவர்கள் இன்று கணினியில் க்ளிக் செய்ய காசு வாங்குகிறார்கள். தளம் மாறியிருக்கிறது, தன்மை மாறவில்லை. புரையோடிப்போன இந்த (எவ்வளவு ஊதிய உயர்வு கொடுத்தாலும் மாறாத) “சர்வீஸ் சார்ஜ் வாங்கும்” தன்மையை மாற்றும் உத்தியை ஆட்சியாளர்கள் சிந்தித்து செயல்படுத்தாத வரை, புதிய தமிழ்நாடோ புதிய இந்தியாவோ உருவாகாது.
Comments
தளம் மாறியிருக்கிறது தன்மை மாறவில்லை #digitalcorruption
நம் வாழ்வில் எக்ஸ்பெக்டேஷனுக்கும் ரியாலிட்டிக்கும் இடைவெளி அதிகமாகி கொண்டே இருப்பதை பார்க்கும் போது வருத்தம் தான். எனக்கும் இது போன்று ஒரு அனுபவம் சமீபத்தில் நிகழ்ந்தது. ஒரு மாதம் வகேஷனுக்கு சென்னை வந்தேன். இந்த ஆட்சியில் தினம் ஒரு ஆர்டர் பாஸ் பன்னுவதால் ஆதாருக்கு விண்ணப்பிக்கலாம் என அலுவலகம் சென்றேன். அங்கு எனக்கு முன் ஒரு 30 பேர் இருந்தனர். அவர்களில் பலர் தினக் கூலி வேலைக்கு செல்பவர்கள். அவர்களுக்கு சரியான நேரத்தை சொல்லாமல் அலைகழித்தனர். என்னுடய விண்ணப்பத்தை கொடுத்தவுடன் எனக்கு சரியாக ஒரு மாதம் கழித்து அப்பாயின்மென்ட் கொடுத்தனர்.நான் ஒரு மாதத்தில் வெளியூர் செல்ல வேண்டும் என கெஞ்சியும் அந்த அதிகாரி கறாரக கடிந்து கொண்டார். பின்பு அங்கிருந்த ஒரு கட்சி ஆள் 300 ரூபாய் வாங்கி கொண்டு அன்றே அப்பாயின்மென்ட் வாங்கி கொடுத்தார். இந்த வேலையை முடித்துக் கொன்டு வரும் போது என் தந்தை இங்கெல்லாம் இப்படி எதாவது பன்ணா தான்டா நம்ம வேலை நடக்கும் என கூறியதை கேட்டு அழுவதா இல்லை சிரிப்பதா என குழம்பி வெளியே வந்தேன்.இதை மாற்றுவதற்கு நம் அரசியல் தலைவர்களை நம்பினால் முடியாது. நம் ஒவ்வொருவர் மனதிலும் மாற்றம் வந்தால் தான் நாட்டிற்கு விடுதலை கிடைக்கும். ஆனால் அது நடப்பதற்க்கு குறைந்தது 50-100 ஆண்டுகள் ஆகலாம்.