2016: வாக்கும் போக்கும் – 2

(சென்ற பதிவின் தொடர்ச்சி)

[சென்ற பதிவுக்கு இங்கே க்ளிக் செய்க]

பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க): கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்னரே இந்த தேர்தலுக்கு தயாராகி விட்டது பா.ம.க. அதன் தேர்தல் அறிக்கையும், அதனை நிறைவேற்ற அன்புமணி சொல்லும் வழிவகைகளும், புள்ளி விபரங்களும் ஒருவித நம்பிக்கையை கொடுக்கின்றன. இருக்கின்ற முதல்வர் வேட்பாளர்களில் உடல் ரீதியாக மிகவும் ஆரோக்கியமாக தெரிபவரும் அன்புமணிதான். மேலும், இந்த தேர்தலில் எல்லா கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு மது விலக்கை பற்றி பேசுவதற்கு, பா.ம.க தலைவரின் நீண்ட கால போராட்டங்களும், அறிக்கைகளும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையில்லை. ஆனால், ஒரு அரசியல் கட்சியாக உருவெடுத்து பல ஆண்டுகள் ஆகியும், பா.ம.கவின் மீது அதன் சில தேவையற்ற வேர்களின் தாக்கம் தொடர்வதை இரண்டு விஷயங்கள் நினைவுறுத்துகின்றன – 2013 மரக்காணமும், அனைத்து சாதிகளையும் அரவணைக்கும்  நிலைப்பாட்டில் கழுவும் மீனில் நழுவும் மீனாக இருப்பதும். இந்த பலவீனத்தை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, மேற்சொன்ன நல்ல விஷயங்களுக்காக பா.ம.கவிற்கு வாக்களிக்க வேண்டுமா என்பது கோடி ருபாய் கேள்வி.
தே.மு.தி.க – மக்கள் நலக் கூட்டணி – த.மா.க: வைகோ மற்றும் திருமாவின் ஈழப் பாசம் வாசனுக்கு ஆகாது; வாசனின் “காங்கிரஸ் தாக்கம்” கொண்ட பார்வை கம்யூனிஸ்ட்களுக்கு ஆகாது; விஜயகாந்தின் தடாலடி பேச்சும் நிலைப்பாடுகளும் மற்ற தலைவர்களுக்கு ஆகாது என பல “ஆகாது”களைக் கொண்ட முரண்பாடுகள் நிறைந்த கூட்டணிதான் இது. என்றாலும், ஒற்றுமையாய் இருந்தால் மட்டுமே பலம் என்பதை உணர்ந்து செயல்படுவதாக தெரிவதால், இந்த கூட்டணி மேற்சொன்ன முரண்களைக் கடந்து நிற்கும் என்றே தோன்றுகிறது. விஜயகாந்தின் கடந்த கால நல்ல செயல்கள், வாசன் மற்றும் திருமாவின் நாகரிக அரசியல், உணர்ச்சிவசப்பட்டாலும் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்காக முன் நிற்கும் வைகோவின் போரட்ட குணம், கம்யூனிஸ்ட்களின் பொதுவான (நடைமுறைக்கு ஒவ்வாதவற்றை தவிர்த்த) நிலைப்பாடுகள் – இந்த கூட்டணிக்கு பன்முகத் தன்மையை தருகின்றன. இதனை கருத்தில் கொண்டு இந்த கூட்டணிக்கு வாக்களித்து அதனை தமிழக அரசியலில் வலுவாக்கலாமே என்ற எண்ணம்  ஆழமாய் எழுந்திருக்கிறது.
*                                                                                        *                                                                                      *
தங்களை மாற்று என்று கூறும் எந்த கட்சியும்/கூட்டணியும் தங்களை வாக்காளர்களின் இயல்பான தேர்வாக (natural choice) ஆக்கிக் கொள்ளவில்லை என்பது உண்மை. அதற்காக, அவர்களின் இந்த முயற்சியையும் சரியாக அங்கீகரிக்காமல் போனால் நாம்தான் வாய்ப்பை இழந்தவர்களாவோம். எனவே, தமிழக அரசியலின் போக்கை மாற்றக்கூடிய வாக்காக என் வாக்கை பயன்படுத்த முடிவு செய்துவிட்டேன். அந்த வாக்கு யாருக்கு என்பது இந்த இரண்டு பதிவுகளையும் படித்து புரிந்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.
இந்த பதிவுகளை படிக்கும், “2016 தமிழக தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்ற” அனைவருக்கும் என் வேண்டுதல் இதுதான் – இது நல்ல வாய்ப்பு, சற்று சிந்தித்து வாக்களியுங்கள். இல்லையேல், நமது அரசியல் அலசல்களும், இரண்டு கழகங்களின் மீதான நம் அங்கலாய்ப்பும் நம் வீட்டு வரவேற்பறை விவாதங்களுக்கு மட்டுமே பயன்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!